Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எட்டாவது நாளாக போராடும் மருத்துவ மாணவர்கள்... அரசின் மெளனம்!

அரசு மருத்துவர்கள் போராட்டம்!

ரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்துத் தமிழக அரசு மருத்துவர்கள் இன்று (26-04-17) எட்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவதுடன், சென்னையில், பேரணி நடத்தவும் முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில், மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பில், அரசுப் பணியில் உள்ள டாக்டர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதுநிலை பட்டப்படிப்புச் சேர்க்கையில், அரசுப் பணியில், மிகவும் பின்தங்கிய, யாரும் சென்று பணியாற்ற விரும்பாத மலைப்பிரதேசங்கள், தொலைதூரப் பகுதிகள், திருவாரூர் - நாகப்பட்டினம் - ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றும் அரசு டாக்டர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுவந்தன. அதாவது, 90 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வு மூலமாகவும், 10 மதிப்பெண் பணியாற்றிய ஆண்டுகள் அனுபவத்தின் அடிப்படையில் போனஸாகவும் வழங்கப்படும்.

தற்போது, சென்னை உயர் நீதிமன்றம் 50 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்ததுடன், அனுபவ மதிப்பெண் வழங்கும் தற்போதைய நடைமுறையிலும் மாறுதல்களைச் செய்திருக்கிறது. “இடஒதுக்கீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும், அனுபவ மதிப்பெண் வழங்கும் பழைய முறையைப் பின்பற்ற வேண்டும்'' என்று வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, மதுரை, திருச்சி, நெல்லை எனத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை டாக்டர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில்குமாரிடம் பேசினோம். "முதுநிலை பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில், எம்.பி.பி.எஸ் முடித்த பல மருத்துவர்கள் ஆர்வத்துடன் தமிழக அரசுப் பணியில் சேர்கின்றனர். இதனால், தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிடுகின்றன. மற்ற மாநிலங்களுக்கே வழிகாட்டும் வகையில் இந்தத் திட்டம் தமிழகத்தில் 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராடிப் பெற்றது. தற்போது இந்த இடஒதுக்கீட்டைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. 

இதனால், இடஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புப் படிக்கலாம் என்று நினைக்கும் பல ஆண்டுகளாக அரசுப் பணியில் உள்ள டாக்டர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், இடஒதுக்கீடு இல்லை என்றால், தமிழக மருத்துவர்களுடன், வெளிமாநில மருத்துவர்களும் அதிக அளவில் இந்தத் தேர்வில் பங்கேற்று, மருத்துவச் சேர்க்கையைப் பெற்றுவிடுவார்கள். இவர்கள், படித்து முடித்ததும் தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள். தமிழகத்துக்கு இதனால் எந்த நன்மையும் ஏற்படாது. முதுநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கையில் நீட் தேர்வை எங்கள் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இடஒதுக்கீடு இல்லை என்றால், ஏராளமான மருத்துவர்கள் பாதிக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இன்றி, மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதைத் தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறோம்.

இரண்டு மணி நேரம் போராட்டம், உண்ணாநிலை, அத்தியாவசிய பணிகள் பாதிக்காத வகையில் ஒட்டுமொத்த மருத்துவர்கள் ஒருநாள் விடுப்பு, மனிதச் சங்கிலி, கறுப்புச் சட்டை அணிந்து பணியில் ஈடுபடுவது என்று அறவழியில் எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் மீண்டும் ஒருநாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கப்படும். இதனால், மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, மருத்துவர்கள் மற்றும் மக்களின் நலனைக் காக்க வேண்டும்" என்றார்.

போராட்டம் குறித்து மருத்துவர்களிடம் பேசியபோது, “எங்கள் கோரிக்கைகள் தொடர்பாகத் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. உடனடியாக அவசரச் சட்டம் ஒன்றை நிறைவேற்றி, மக்களின் நலனைக் காக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஆனால், உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிவிடுகிறோம் என்று அரசுச் செயலாளர் சொல்கிறார். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று மிகப்பெரிய அளவில் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தாமல், ஆங்காங்கே நடத்துகிறோம். போராட்டம் முடிந்ததும் உடனே மருத்துவப் பணிக்கு திரும்பிவிடுகிறோம். அரசு எங்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, காலவரையற்றப் போராட்டம் போன்றவற்றில் ஈடுபடவைக்க வேண்டாம்" என்றனர். 

அரசு மருத்துவர்களின் போராட்டம் காரணமாக, அத்தியாவசிய சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படுகின்றன. மற்ற அறுவைச்சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. புறநோயாளிகள் பிரிவு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றி, மருத்துவர்கள் மற்றும் மக்களின் நலனைக் காக்க வேண்டும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close