Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷம் வைத்துப் பிடிக்கப்படும் பறவைகள்... உண்டால் உருவாகும் விபரீத விளைவுகள்!

பறவைகள்

வானில் சுதந்திரமாய் சிறகடித்துப் பறந்து, பழ மரங்களில் அமர்ந்து, பலவகைக் கனிகளை உண்டு அதன் விதைகளை பறக்கும் திசையெங்கும் தூவி, மரங்கள் வளர்ப்பில் மகத்தான பங்களிப்பைத் தருபவை பறவைகள்தாம்.

மனிதகுலம் வாழ, மழைநீர் கிடைக்க, மரங்கள் வளர காரணமாக இருக்கும் பறவைகளை வேட்டையாடுவதோ, கொல்வதோ இந்தியச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.  இருந்தாலும், மனிதர்கள் காலம்காலமாய் செவிவழிச் செய்திகளாய்க் கேள்விப்பட்ட மருத்துவப் பயன்பாட்டுக்காகப் பறவைகளைக் கொன்று சமைத்துச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பெண்கள் தலைமுடி வளர்ச்சிக்குப் புறா ரத்தம், நெஞ்செலும்பு உறுதிபட குயில்கறி, வலிப்பு நோய்தீர காக்காக் கறி, ஆண்மைச் சக்தியைப் பெருக்கும் சிட்டுக்குருவிக் கறி, உடல்உறுதிக்கு மடையான், கொக்கு, நாரைக் கறி என வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

சந்தையில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் இறைச்சி விலையைவிட பறவைகளின் விலை குறைவு.  எனவே, பறவைகளை வாங்கி உண்போர் எண்ணிக்கை நகரங்களைவிட கிராமங்களில் அதிகரித்துவிட்டது.  பறவைகளைத் துப்பாக்கியால் சுட்டும் வலைவிரித்தும் கூண்டு வைத்தும் பிடித்த காலம்மாறி, நவீன காலத்திற்கேற்ப தொழில்நுட்பத்தை மாற்றிவிட்டார்கள்.  

மீன்வாடை மயில்களுக்குப் பிடிக்காது.  ஆனால், மடையான், கொக்கு, நாரை போன்ற பறவைகளுக்கு மீன், கருவாடு பிடித்தமான உணவு. எனவே, விளைநிலங்களில் பூச்சிகளை அழிக்க விவசாயிகள் பயன்படுத்தும் குருணை என்ற கொடிய விஷமருந்தில் மீன் துகள்கள் அல்லது கருவாட்டுத் துகள்களைக் கலந்து, மடையான் கூட்டம் கூட்டமாய் மேயும் இடங்களில் தூவி விடுகிறார்கள். அவற்றை உண்டவுடன் மடையான் பறக்கமுடியாமல் மயங்கிய நிலையில் அதே இடத்தில் அமர்ந்திருக்கும்.  அவற்றை எளிதாகப் பிடித்து விற்றுவிடுகிறார்கள்.

குருணை

இப்படி பிடிக்கப்படும் மடையான் கறியை உண்பவருக்கு ஏற்படும் விபரீதம் பற்றி பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர்,

“தினசரி குடித்துவிட்டு மனைவியை சகட்டுமேனிக்கு அடித்து உதைக்கும் கணவனுக்குத் தொடர்ந்து மூன்று நாள்கள் மடையான்கறி சமைத்துப்போட்டிருக்கிறார். சாராயம் குடித்துவந்த கணவன், ‘இன்றைக்குத்தான்டி புருசனுக்கு என்ன புடிக்கும்னு தெரிஞ்சு சமைச்சிருக்க’ என்று சொல்லி, சண்டையில்லாமல் சாப்பிட்டிருக்கிறான்.  ஐந்தாம்நாள் குருணை விஷமேறிய மடையான்கறியை உண்டதால் கணவன் எழுந்து நடமாடமுடியாமல் முடங்கிவிட்டான்.  ‘ஏய் மீனாட்சி, சோறு போடு’ என்று அதிகாரமாய் ஆணையிட்டவன், தற்போது ‘மீனாம்மா, பசிக்குது’ என்று கெஞ்சிக் கேட்கிறான்.  காரைக்கால் பகுதியில் பெண்களிடையே ரகசியமாய்ப் பரவிவரும் மடையான்கறி தண்டனை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். மடையான் உட்பட பறவைகள் வேட்டையைத் தடுக்க வேண்டும்.  பறவைகளை உண்பதை மக்கள் முற்றிலும் கைவிடவேண்டும்” என்றார்.  

எல்லோரும் நன்றாய் வாழ, பறவைகளை வாழவிடுங்கள்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close