Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போக்குவரத்து அமைச்சரின் பயத்தால் ஸ்தம்பிக்கப்போகும் தமிழ்நாடு!

போக்குவரத்து

பேச்சுவார்த்தைக்கு வராமல் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தங்களை அவமதித்துவிட்டார் என்ற கோபத்தில் இருக்கிறார்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர்.

அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். 13-வது ஊதிய ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை சென்னையில் மே 4-ம் தேதி நடந்தது. அதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். அமைச்சர் வராததால் தொழிற்சங்கத்தினர் கடும் அதிருப்தி அடைந்தனர். அதைத்தொடர்ந்து, மே 15-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


இது குறித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து சம்மேளன (சி.ஐ.டி.யு) பொதுச்செயலாளர் ஆறுமுக நயினாரிடம் பேசினோம்.
“எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் பணம்தான். இதை, கடந்த மார்ச் 7-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போதே அமைச்சரிடம் தெரிவித்தோம். ‘அரசிடம் பேசி, பட்ஜெட்டில் பணம் ஒதுக்கீடு செய்யப்படுவதை உறுதிசெய்யுங்கள். அப்படி செய்தால்தான், இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். அதன்பிறகு பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம்’ என்று அமைச்சரிடம் சொன்னோம். 


பிறகு, பட்ஜெட்டுக்கு முன்பாக தமிழக முதல்வர், நிதி அமைச்சர், போக்குவரத்து அமைச்சர் ஆகியோருக்கு மனு கொடுத்தோம். அதில், என்ன பிரச்னை, பட்ஜெட்டில் ஏன் பணம் ஒதுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கியிருந்தோம். அப்போது, அமைச்சரைச் சந்தித்தபோது, ‘உங்கள் கோரிக்கையில் எங்களுக்கு முழு உடன்பாடு உண்டு. பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது என்று நீங்கள் சொல்வதை எற்றுக்கொள்கிறோம். அரசிடம் சொல்ல வேண்டியதை நான் சொல்லிவிட்டேன்’ என்று அமைச்சர் சொன்னார்.


பணம் கூடுதலாக ஒதுக்குவதற்கு அமைச்சர் தரப்பில் முயற்சி நடந்ததாகவும், ஆனால், கூடுதல் பணம் ஒதுக்குவதற்கு நிதித் துறைச் செயலாளர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் கேள்விப்படுகிறோம். தொழிலாளர்களுடைய ஏழாயிரம் கோடி ரூபாயை, அவர்களுக்குத் தெரியாமல் அதிகாரிகள் எடுத்துச் செலவு செய்துவிட்டார்கள். இதனால், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. அவர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். இந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதி கொடுப்பதற்கு நிதித் துறைச் செயலாளர் தடைபோடுவது நியாயமே கிடையாது. அவர் ஓய்வுபெற்ற பிறகு, ஓய்வூதியம் தரப்படவில்லை என்றால், அதை அவர் ஏற்றுக்கொள்வாரா? அல்லது, தவணை முறையில் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னால், அதற்கு ஒப்புக்கொள்வாரா? இதை அவர் உணர வேண்டும்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள்

40 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ், சேவை அடிப்படையில் குறைந்த கட்டணங்கள் என பல காரணங்களால், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு மூவாயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை வருகிறது. அதை அரசு ஈடுகட்ட வேண்டும். 
பற்றாக்குறையை ஆரம்பத்திலேயே அரசிடம் அதிகாரிகள் சொல்லியிருந்தால், இவ்வளவு பிரச்னை வந்திருக்காது. குறைவான தொகை என்பதால் அரசு கொடுத்திருக்கும். அப்படிச் செய்யாமல், தொழிலாளிகளின் வருங்கால வைப்பு நிதி, கூட்டுறவு நிறுவனக் கடன், எல்.ஐ.சி., அஞ்சலக ஆயுள் காப்பீடு போன்றவற்றுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்த சுமார் ஏழாயிரம் கோடி ரூபாயைச் செலவு செய்துவிட்டார்கள்.  இது, சட்டவிரோதமானது. தொழிலாளிகளின் பணத்தை அரசே திருடியதுபோல ஆகிவிட்டது. ஓய்வுகாலப் பலன் நிலுவை மட்டுமே 1,500 கோடி ரூபாய் உள்ளது” என்றார். 


பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் ஏன் வரவில்லை என்று போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் நாம் கேட்டபோது, “தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்பதை, அவர்களிடமே அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. அதனால், அவருக்கு பயம். தொழிற்சங்கத்தினருக்கு உரிய பதிலைச் சொல்ல முடியாமல் தர்மசங்கடமான நிலைமை ஏற்படும் என்பதால்தான், பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் வரவில்லை” என்றனர்.


பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மே 4-ம் தேதி சென்னை பல்லவன் இல்லத்தில் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் பேச்சுவார்த்தை விளக்கக்கூட்டம் நடந்தது. தொ.மு.ச பேரவை, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., திராவிட தொழிற்சங்கம், அம்பேத்கர் தொழிலாளர் முன்னணி, பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது. 


ஆளும் கட்சியின் அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர மற்ற அனைத்துத் தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்குத் தயாராகிவிட்டன. காலவரையற்ற வேலைநிறுத்தம் என்று அறிவித்திருப்பதால், தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கையை எடுக்க அரசு தவறினால், தமிழகம் ஸ்தம்பிக்கும். 


- ஆ.பழனியப்பன்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close