Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘எங்கள் போராட்டம் புதிய பரிணாமத்தில் தொடரும்’’ - பயிற்சி பெண் டாக்டர்கள் தீவிரம்! #SpotVisit

போராட்டம்

17 நாள்களாக நடைபெற்று வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் போராட்டம் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி, அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? 

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு, அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் 50 சதவீத மாநில இடஒதுக்கீட்டுக்கு ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 17 நாள்களாக தமிழகம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் டாக்டர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும்படி, அரசுக்கு உத்தரவிட்டது. தேவைப்பட்டால், 'எஸ்மா' சட்டத்தைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய பெண் டாக்டர்களிடம், ''அடுத்தகட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்று கேட்டோம். அவர்களின் கருத்துகள் இங்கே... 

போராட்டம்சிநேகப்பிரியா: ‘'தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்கள் மட்டுமே தமிழக மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதிலும் பாதி இடங்களில் ஏற்கெனவே இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் சேவைபுரிந்த டாக்டர்களுக்குத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறையில் தமிழகத்தில் அதிகளவில் டாக்டர்கள் பட்டமேற்படிப்பு படித்து தேசிய அளவிலும் உலக அளவிலும் சிறந்த இடங்களில் உள்ளனர். ஆனால், இந்தியா முழுவதும் ஒரே முறையிலான நடைமுறை என்ற அடிப்படையில் ‘நீட்’ தேர்வைக் கொண்டுவந்தால், தமிழக மாணவர்களுக்கு மருத்துவத்தில் பட்டமேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். எம்.பி.பி.எஸ். படித்து முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகள் மலைப்பகுதி மற்றும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்தப் பகுதிகளில் மக்கள், மருத்துவத் தேவைக்கு அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், ஒருநாளைக்கு 14 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பணிபுரிகின்றனர். இந்தச் சூழலில் ‘நீட்’ தேர்வுக்குப் படிக்க கால அவகாசம் கிடைப்பதிலை. ‘நீட்’ தேர்வு என்பது பாடத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தேர்வுப் பயிற்சியை அடிப்படையாகக்கொண்டது என்பதால், அதிகமானவர்களால் பட்டமேற்படிப்பை படிக்க இயலும். ‘நீட்’ தேர்வை ஏற்றுக்கொண்டால் வருங்காலத்தில் பட்டமேற்படிப்பு படிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையும், தலைமை அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். இதனால் சுகாதாரத் துறையில் தமிழகம் பின்தங்கிய நிலையில் இருக்கும். எனவே, எங்களின் கோரிக்கைகள் நிறைவேற பணியைத் தொடர்ந்துகொண்டே மக்கள் மத்தியில் விழிப்புஉணர்வு செய்யும் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம்.'' 

போராட்டம்சிந்துஜா: ‘'தேசிய அளவில் சுகாதாரத் துறையில் தமிழகம், தற்போது முன்னணியில் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் நடைபெறுகிறன்றன. பிரசவத்தின்போது குழந்தை இறப்பு விகிதம், தாய்மார்களின் இறப்பு விகிதம், நோய்த் தடுப்பு, நோய்களைக் கட்டுப்படுத்துதல் என அனைத்திலும் மற்ற மாநிலத்துக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. தற்போதைய நடைமுறைப்படி, பட்டமேற்படிப்புக்கான தேர்வில் கோத்தகிரி போன்ற மலைப்பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த டாக்டர்களுக்கு மூன்று மதிப்பெண்ணும், கிராமங்களில் பணிபுரிந்த டாக்டர்களுக்கு இரண்டு மதிப்பெண்ணும், நகர்ப்புறங்களில் பணிபுரிபவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. இதனால், எப்படியும் நமக்கு பட்டமேற்படிப்பு தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்ற ஆர்வத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், ‘நீட்’ தேர்வு நடைமுறைக்கு வந்தால், சேவை நோக்கத்தில் பாதிப்பு ஏற்படும். கிராமப்புற பணியிலிருந்து விலகி, மேற்படிப்பு படிக்க ஆர்வம் காட்டுவர்.  இதனால், மக்களுக்கு போதுமான அளவில் மருத்துவ சேவையை வழங்க இயலாது. தமிழகம் மட்டுமின்றி ஏழு மாநிலங்கள் இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை. பஞ்சாப்பில் பட்டமேற்படிப்புக்கான கவுன்சிலிங்கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கான நோய்கள், காலநிலை என மாறுபடும்போது இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள இயலாது. பணிக்குத் திரும்பினாலும் ஏதோ ஒரு வகையில் நாங்கள் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.'’ 

போராட்டம்திவ்யா பிரகாஷ்: ‘'மத்திய அரசின் ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளில் பட்டமேற்படிப்புக்கான சேர்க்கையில் அந்தக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏன்? அங்கு இந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. அதேபோல தமிழக பட்டமேற்படிப்பு கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமைக் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது? மத்திய அரசு நிதியுதவியில் செயல்படும் கல்லூரிகளிலேயே இந்த நடைமுறையை அமல்படுத்த இயலவில்லை. தமிழக அரசின் நிதியில் செயல்படும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் ஏன் இந்த நடைமுறையைப் புகுத்த வேண்டும்? இது தமிழக மாணவர்களின் வளர்ச்சியை வேரோடு பிடுங்கும் செயல். ‘நீட்’ தேர்வு பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில்தான் வரும். தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் சிக்கன் குன்யா, புயல், வெள்ளம், டெங்கு போன்ற சூழல்களை எதிர்கொண்டு வருகிறோம். அந்த நேரத்தில் மக்களுக்குச் சேவை செய்வதா... தேர்வுக்குப் படித்துக்கொண்டிருப்பதா? படிப்பதற்கு எப்படி விடுமுறை எடுக்க முடியும்? இந்த நடைமுறையால் 'சமத்துவம்' இல்லாமல் போய்விடும். தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து, ஏற்கெனவே பின்பற்றிய நடைமுறைகளைச் சட்டமாக்க வேண்டும். நாங்கள் எங்களுக்காக மட்டும் போராடவில்லை. எதிர்கால மாணவர்களுக்காகவும், தமிழகம் சுகாதாரத் துறையில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான் போராடுகிறோம். மக்களுக்குத் தெரியும் வகையில் அமைதியான முறையில் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலம், கறுப்புத் துணிக்கட்டி போராட்டம் என மக்களுக்கான பணிகள் பாதிக்காத வகையில் போராட்டத்தைப் புதிய பரிணாமத்துக்கு எடுத்துச் செல்வோம்.''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close