Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இருபது வருஷம் ஓடிப்போச்சு! ஒரு கிராம மக்களின் குமுறல் இது

 

 

 

"இருபது ஆண்டுகளாக மனுக் கொடுக்காத அலுவலகமே கிடையாது. மனு வாங்கும்போதெல்லாம் உங்கள் ஊருக்கு பேருந்து நிழற்குடை வந்துவிடும். நீங்கள் போகலாம் என்றுதான் சொல்லுவார்கள். இப்படியே இருபது வருஷம் ஓடிப்போச்சு. இப்ப நாங்களே கீற்றுக்கொட்டகையால் பேருந்து நிழற்குடை அமைத்துவிட்டோம்" என்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்று ஒன்றியத்தைச் சேர்த்த பெரமூர் கிராம மக்கள்.

பெரமூர் கிராமத்தைச் சேர்ந்த அருணகிரி கூறுகையில், எங்கள் கிராமத்திலிருந்து தினமும் 50 முதல் 60 பேர் வெளியூர்களுக்கும், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். அரசுப் பேருந்துகள் நாள் ஒன்றுக்கு 8 முறை வந்து செல்கின்றன. விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் விவசாய வேலைகளுக்காகவும், விவசாயிகள் தேவையான பொருள்களை வாங்க வேண்டுமென்றால் இங்கிருந்து 10 கி.மீட்டர் தொலைவிலுள்ள திருவையாறு, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் சென்று வருகிறார்கள்.

ஆரம்பத்தில் எங்கள் ஊரில் ஒரு பஸ் நிறுத்தம் இருந்தது. கடந்த இருபது வருஷத்துக்கு முன்பு இடிந்துபோனதாக ஊரில் உள்ள பெரியவர்கள் சொன்னார்கள். அதிலிருந்து நாங்கள் ஒரு பஸ் நிழற்குடை கட்டத்தான் நடையா நடந்துகிட்டு இருப்பதாகச் சொன்னார்கள். புதிதாக பஸ் நிழற்குடை கட்டம் கட்டச் சொல்லி வட்டாச்சியர் அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் ஊர்மக்கள் சார்பில் மனுக் கொடுத்தோம். யாருமே இதுவரை செய்துகொடுக்க முன்வரவில்லை. இதுமாதிரி மனுக்கொடுத்து இருபது வருஷம் ஓடிப்போச்சு. மழை பெய்தால், வெயில் அடித்தால், இந்த இடத்தில் நின்றுதான் பஸ் ஏறுவோம். மழைக் காலங்களில் குடையைப் பிடித்துக்கொண்டுதான் நிற்கவேண்டும். வெயில் காலத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் நிற்போம். பஸ் வருவது தெரியாம பஸ்ஸையும் தவற விட்டிருக்கிறோம். திமுக, அதிமுக இரு கட்சிகளைச் சேர்ந்தவங்களும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இரண்டு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களிடமும் பஸ் நிழற்குடை கட்டச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு பஸ்நிழற்குடை கட்டிக்கொடுக்கவேயில்லை.

பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் இங்கே இருந்துதான் பஸ் ஏறிச் செல்லவேண்டும்.  மழை பெய்தா பக்கத்தில் உள்ள வீடுகளில் போய் உட்கார்ந்துகிட்டு பஸ் வருகிற நேரம் பார்த்து நனைந்துகொண்டே ஓடிவந்து பஸ்ஸில் ஏறுவோம். வெயில் அடிச்சா காலில் செருப்பு இல்லாமல் நிற்கும் பெரியவர்கள் காலில் தண்ணியை எடுத்து ஊற்றிக்கொண்டுதான் நிற்பார்கள். கர்ப்பிணிகள், குழுந்தைகள், பெண்கள் எல்லாம் தினம்தினம் படும் அவஸ்தைகளை ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் ஓட்டு கேட்க வரும்போதும், பஸ்நிழற்குடை கட்டித்தாருங்கள் என்று சொல்லுவோம். அவர்களும் வெற்றிபெற்றால் நிச்சயமாக கட்டித்தருகிறோம் என வாக்குறுதிகளை அள்ளிவிடுவார்கள். இப்படியே நம்பி நம்பி இருபது வருஷம் போச்சு. ஒருநாள் பஸ்சில் ஏறிப் போவதற்காக வெயிலில் நின்றுகொண்டிருந்த எங்க ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மயங்கி விழுந்திடுச்சு. அதுக்கு அப்புறம்தான் நாங்களே சேர்ந்து கீற்றுக்கொட்டகையில் பஸ் நிழற்குடையை, கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு அமைத்தோம்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close