Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘நாமக்கல் சுப்ரமணியன் ஏன் சாக வேண்டும்?!’ - சுகாதாரத்துறையைச் சுற்றும் மர்மம் #VikatanExclusive

விஜயபாஸ்கர்

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர் நாமக்கல் சுப்ரமணியன் நேற்று இறந்துவிட்டார். அவரது வயிற்றில் விஷம் இருந்துள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். 'அமைச்சர் விஜயபாஸ்கரின் அனைத்து கணக்கு வழக்குகளையும் அறிந்தவர் சுப்ரமணியன். அவரது மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன' என்கின்றனர் சுகாதாரத்துறை வட்டாரத்தில். 

அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், உலக வங்கி நிதியில் இருந்து 1,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் மூலம் புதிய கட்டடம், பராமரிப்பு, மராமத்து பணிகளை மேற்கொண்டது தமிழக சுகாதாரத்துறை. 'இந்த நிதியை வைத்துக் கொண்டு பொதுப் பணித்துறையின் மூலம் பணிகளை மேற்கொள்வதைவிட, நாமே களத்தில் இறங்கினால் கூடுதல் லாபம்' எனக் கருதினர் சுகாதாரத்துறையில் அங்கம் வகிப்பவர்கள். இதற்காக அவர்கள் கொண்டு வந்து நிறுத்தியது நாமக்கல் சுப்ரமணியத்தைத்தான். 'தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் சேவைக் கழகமே, கட்டட வேலைகளை முன்னெடுக்கும்' என வாரியக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற்றனர். இதன்மூலம், மாவட்ட மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடம் கட்டும் வேலைகள் ஒப்படைக்கப்பட்டன.

நாமக்கல் சுப்ரமணியன்"கட்டடப் பணிகளுக்கு உத்தரவு வழங்கியதில், சுகாதாரத்துறையில் அங்கம் வகித்தவருக்கு பெரும் லாபம் கிடைத்தது. மருந்து கொள்முதல், உயிர்காக்கும் கருவி கொள்முதல் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயைவிட, இந்த வகையில் நல்ல லாபம் பார்த்தார். அதற்குக் கருவியாக இருந்தவர் சுப்ரமணியம். சேகர் ரெட்டியின் நட்பு வரிசையில் பன்னீர்செல்வம் இருந்தார். பன்னீர்செல்வத்திடம் மிகுந்த நெருக்கத்தில் இருந்தவர் சுப்ரமணியன். அவர் மூலமாக விஜயபாஸ்கரின் நட்புக்கு உரியவராக மாறினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த மாதம் 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த நேரத்தில், சுப்ரமணியம்தான் வருமான வரித்துறையின் முக்கிய டார்கெட்டாக இருந்தார். அவர் மூலமாகப் பணம் வரும் வழியைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அவருடைய வங்கிக் கணக்கையும் முடக்கிவிட்டனர். தொழிலைச் செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவரிடம் தொடர்பில் இருந்தவர்கள்கூட விலகிச் சென்றனர். 'முக்கிய கணக்கு வழக்குகளை அவர் காட்டிக் கொடுத்துவிட்டார். அவர் மூலமாக தகவல்கள் கசிந்துவிட்டன' என துறைக்குப் பொறுப்பானவர்கள் கடுமை காட்டியுள்ளனர். அதன் விளைவாகவே, அவரது மரணம் நடந்திருக்கலாம்" என சந்தேகம் எழுப்புகின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். 

"அரசு ஒப்பந்தங்களைச் செய்து வந்த சுப்ரமணியன், அவ்வளவு எளிதில் யாரிடமும் பேச மாட்டார். எந்த இடத்திலும் மௌனத்தையே கடைபிடிப்பார். அதனாலேயே, அமைச்சர்கள் வட்டாரத்தில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மூலமாகத்தான், பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் கால்பதித்தார். சசிகலாவுடன் பன்னீர்செல்வம் முரண்பட்ட பிறகு, விஜயபாஸ்கர் தொடர்பை கைவிடாமல் இருந்தார். அமைச்சர்களின் போக்குவரத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, நாமக்கல் சுப்ரமணியத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்த விசாரணைகளிலும், சுப்ரமணியத்தின் கணக்கு வழக்குகள் குறித்துத்தான், தீவிர விசாரணை நடந்தது. எந்த வகையில் பார்த்தாலும், இந்த விவகாரம் விஜயபாஸ்கருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சுகாதாரத்துறையின் அதிகாரிகள் பலரும் சிக்குகின்றனர். 'அரசு ஒப்பந்தங்கள் மூலம் வந்த பணம், எந்தெந்த வகைகளில் முதலீடு செய்யப்பட்டது? எங்கே பணம் சென்றது?' என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கண்டறிப்பட்ட நேரத்தில்தான், நாமக்கல் பண்ணை வீட்டில் இறந்துகிடந்தார் சுப்ரமணியன்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, பொதுப்பணித்துறை மற்றும் சுகாதாரத்துறை வட்டாரத்தில் இவர்களின் சிண்டிகேட்டால், ஏராளமான சிறு ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்பட்டார்கள். அந்த ஒப்பந்தாரர்கள் எல்லாம் வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்துவிட்டார்கள். அதன் விளைவைத்தான் இப்போது அனுபவிக்கிறார் சுகாதாரத்துறையின் முக்கியப் புள்ளி" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

“சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அமைச்சர்கள் பிளஸ் அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது வருமான வரித்துறை. இதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். பொதுப்பணித்துறை ஒப்பந்தம்; சேகர் ரெட்டி தொடர்பு; பன்னீர்செல்வத்தின் நட்பு; விஜயபாஸ்கருடன் கூட்டணி எனப் பல வகைகளிலும் குறிவைக்கப்பட்டார் சுப்ரமணியம். 'அவர் இருப்பது நல்லதல்ல' என்பது யாருடைய கணக்காக இருந்தது என்பதைக் கண்டறிய வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு இருக்கிறது. 'சேகர் ரெட்டியிடம் 300 கோடி வரையில் லஞ்சம் பெற்ற வகையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்கும்' என தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் விவாதம் நடந்து வரும் வேளையில், இவற்றில் தொடர்புடைய ஒருவர், மர்மமான முறையில் இறந்து போய் இருக்கிறார். அதற்கான பின்னணி கண்டறியப்பட வேண்டியது மிக அவசியம்" என்கின்றனர் அரசு ஒப்பந்ததாரர்கள். 

ஆனால், சுப்ரமணியம் தரப்பினரோ, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணவிநியோகம் தொடர்பாக விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்தார் சுப்ரமணி. இந்த விவகாரத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. வேண்டும் என்றே அவருடைய தொழில்களுக்கு இடையூறு செய்யும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடந்து கொண்டனர். வங்கிக் கணக்குகளை முடக்கியதன் மூலம், அவரால் தொழிலில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. இதைப் பற்றி அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அந்த மனஉளைச்சலில்தான் தற்கொலை செய்து கொண்டார். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" என்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close