Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக காங்கிரஸில் நக்மா-வுக்கு முக்கிய பதவி?!

நக்மா - ஸ்டாலின்

கில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ள நடிகை நக்மா, சமீபகாலமாக தமிழகத்தில் அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

சென்னையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரஜினிகாந்த்-ஐ அவரது வீட்டில் நக்மா சந்தித்துப் பேசினார். நட்புரீதியில் ரஜினியைச் சந்தித்ததாகக் கூறினார். அடுத்தநாள், திங்கள்கிழமை தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினையும் நக்மா சந்தித்துப் பேசினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதியும் உடல்நலக் குறைவால், வீட்டில் ஓய்வெடுக்கிறார். முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, ஆமை வேகத்தில் செயல்படுவதாக பல்வேறு எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசியல் களத்தில் தங்களுக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஏற்கெனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக உள்ள நடிகை நக்மா, அவ்வப்போது சென்னை, புதுச்சேரிக்கு வந்து செல்கிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே அவ்வப்போது சென்னைக்கு நக்மா விசிட் அடித்து வருவதாகக் கருதப்படுகிறது.

ரஜினி-நக்மா"சென்னையில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்டாலினை அவர் சந்தித்ததும், தமிழக அரசியலில் தனக்கென ஓர்  இடத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான்" என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் நக்மாவின் தீவிர அரசியல் நடவடிக்கைகளுக்குப் பின், அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குஷ்பு சற்றே அடக்கி வாசிக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இருந்தவரை, சத்தியமூர்த்தி பவனில் செல்வாக்குடன் வலம்வந்த குஷ்பு, அந்தப் பதவிக்கு சு.திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட பின்னர் கட்சி நடவடிக்கைகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து, தற்போது நக்மாவின் தமிழக சுற்றுப்பயணத்தால் அதிருப்தியடைந்துள்ள குஷ்பு, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து சற்று ஒதுங்கியே உள்ளார்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், பல்வேறு கோஷ்டிகள் இருப்பதாலேயே, எந்தக் கோஷ்டியையும் சேராத திருநாவுக்கரசரை காங்கிரஸ் தலைவராக நியமித்து அனைத்து கோஷ்டிகளுக்கும் 'ஷாக்' கொடுத்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. ஆனாலும், தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப்பூசல் குறைந்தபாடில்லை. திருநாவுக்கரசர் மாநில தலைவராகப் பொறுப்பேற்றதும், தனக்கு நெருக்கமானவர்கள் சிலரை மாவட்டப் பொறுப்புகளில் நியமித்தார். இது ஏற்கெனவே இருந்த கோஷ்டிகளை மேலும் உசுப்பேத்தி விட்டுள்ளது. இருக்கிற கோஷ்டிகள் போதாதென்று திருநாவுக்கரசருக்கென்று தனி கோஷ்டி உருவாகி, காங்கிரஸ் மேலிடத்திற்கு தலைவலியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த வாரத்தில் அழைத்துப் பேசினார் ராகுல்காந்தி. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்கலாமா? அல்லது தி.மு.க-வில் தற்போது மு.க. ஸ்டாலின் செயல்தலைவராக இருப்பதுபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் செயல்தலைவர் ஒருவரை நியமிக்கலாமா என்பது பற்றி அப்போது ஆலோசனை நடத்தியதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும்வரை எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று ராகுலிடம் சிதம்பரம் கேட்டுக் கொண்டாராம்.

இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் நக்மா மற்றும் குஷ்பு-வுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். செயல்தலைவர் பதவி உருவாக்கப்பட்டால் அந்தப் பதவிக்குத் தன்னை நியமிக்க வேண்டும் என்று தனக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் மேலிடத்தை வலியுறுத்தி உள்ளார் நக்மா. இதேபோல் குஷ்புவும் தனக்கு நெருங்கிய டெல்லி தலைவர்கள் மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பதவியைப் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம். என்றாலும், தமிழக காங்கிரஸ் கட்சியில் நக்மாவுக்கு விரைவில் முக்கியப் பதவி வழங்கப்படலாம் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close