Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”போராட்டம் இனிதான் ஆரம்பம்!” -முதல்வரைச் சந்தித்த அய்யாக்கண்ணு

முதல்வரை சந்திக்கும் அய்யாக்கண்ணு

றட்சி நிவாரணம், விவசாயிகள் வங்கிக் கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 41 நாள்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த அய்யாக்கண்ணு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பையொட்டி போராட்டத்தைக் கைவிட்டார். இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம், கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. தாமாகவே முன்வந்து பொதுமக்களும், வணிகர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள்; போராட்டமும் வெற்றியடைந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசோ மாநில அரசோ இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதற்குப் பின் நடந்த ஒரே விஷயம், தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை இல்லையென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்ததுதான். இதற்காக உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசு குட்டு வாங்கியது தனிக்கதை. பல்வேறு சூழல்களுக்கு இடையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக அறிவிப்புகள் வெளியாகும் என்று காத்திருந்தார் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. ஆனால், அரசுகளிடமிருந்து அறிவிப்புகள் ஏதும் வராததால், மீண்டும் டெல்லியில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். வருகிற மே 20-ம் தேதிக்கு மேல் இந்தப் போராட்டம் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இன்று காலை 8.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பு குறித்துப் பேசிய அய்யாக்கண்ணு, “விவசாயிகளின் கடன் தள்ளுபடி, தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்தோம்.

முதல்வர் சந்திப்புக்கு பின்னர்

அனைத்தையும் பொறுமையாக கேட்ட முதல்வர், 'என் அப்பா விவசாயி. என் மாமனார் விவசாயி. எங்கள் குடும்பமே விவசாயம்தான். அதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக நல்ல பல திட்டங்களைக் கொண்டு வருவேன். தற்போது நிதி பற்றாக்குறை இருந்து வருகிறது. அதனால் ஒன்றும் செய்வதற்கு இல்லை' என்றார். டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றேன். அதற்கு ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தார். கலைந்து செல்லும்போது 'மே 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில் வந்து பாருங்கள்' என்றார். அதற்குள் உரிய அறிவிப்பு வெளியாகும் என்று நம்புகிறோம். இல்லையென்றால் இந்தியா முழுவதுமிருந்து 300 விவசாயச் சங்கத்தினரைத் திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

தமிழகம் வரலாறு காணாத வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. அவர்களுக்கு உரிய நிவாரணம் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இல்லை. விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டம் தனிநபர் விவசாயக் காப்பீட்டுத் திட்டமாக மாறினால் ஒழிய அதனால் பலனில்லை. தற்போதிருக்கும் சூழ்நிலையில் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய, மத்திய அரசினால் மட்டுமே முடியும். அதனால்தான் மத்திய அரசை நோக்கி போராட்டம் நடத்துகிறோம். எங்களுடைய போராட்டம் தமிழக விவசாயிகளுக்கு மட்டுமில்லை. ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கானது. பி.ஜே.பியினர் என்னை தீவிரவாத சக்தி, தி.மு.கவின் கைக்கூலி என ஆயிரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. விவசாயிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார். இந்த சந்திப்பின்போது தஞ்சை மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகள் பாசனச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் உடனிருந்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close