Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கான்ட்ராக்டர் தற்கொலையும்... காட்டிக் கொடுக்கப்போகும் கடிதமும்!

கான்ட்ராக்டர்

கான்ட்ராக்டர் சுப்பிரமணியன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணியனின் மர்ம மரணம் குறித்த ரகசியங்கள் இதுவரை வெளியாகாமல் இருந்துவந்த நிலையில், தற்போது இவ்வழக்கில்  திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 'தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் இவர்கள்தான்' என்று சுப்பிரமணியன், கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துபோனதாக பரபரக்கும் செய்திதான் அது. 'கான்ட்ராக்டர் சுப்பிரமணியன் தற்கொலைக்குக் காரணமானவர்களை இந்தக் கடிதமே காட்டிக்கொடுத்துவிடும்' என்ற புதிய தகவல் இவ்வழக்கு விசாரணையில் பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

நாமக்கல்லைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பராக இவர் அறியப்படுகிறார். மருத்துவத்துறையில் நடைபெற்ற கட்டுமான கான்ட்ராக்டுகள் பலவற்றை சுப்பிரமணியன் மேற்கொண்டுவந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ஆய்வின் தொடர்ச்சியாக, சுப்பிரமணியனும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.

இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் சுப்பிரமணியன் நாமக்கல்லில் உள்ள தன்னுடைய தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், இறந்துகிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், சுப்பிரமணியன் மரணத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை வெளிவராமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், மரணத்துக்கு முன்பே தனது தற்கொலைக்கான காரணம் குறித்து சுப்பிரமணியன் கடிதம் எழுதியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தக் கடிதம்தான் சுப்பிரமணியன் தற்கொலைக்கான காரணத்தை காட்டிக்கொடுக்கும் ஆயுதமாக மாறியுள்ளது.

சுப்பிரமணியனுக்கு நெருக்கமான ஒருவர் இந்தக் கடிதம் குறித்த தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “சுப்பிரமணியனுக்கு தனிப்பட்ட முறையில், எந்தப் பிரச்னையும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், சில நாட்களாகவே யாரிடமும் அதிகம் பேசாமல் மனஅழுத்தத்தோடுதான் இருந்தார். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததும், நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி அதை பதினைந்து நபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவிட்டுத்தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார். முதல்வரின் தனிப்பிரிவு, அவருடைய வீடு, நாமக்கல் கான்ட்ராக்டர் சங்கம்... என அந்தக் கடிதங்களை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம்தான் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மரணத்துக்கு காரணமாக நான்கு அரசு அதிகாரிகளின் பெயரையும், ஒரு கான்ட்ராக்டர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தன்னை மன அழுத்தத்துக்கு ஆளாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் காவல்துறையின் கைக்கும் சென்றுள்ளது. ஆனால், சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ள எந்த நபர்களையும் காவல்துறை அதிகாரிகள் இதுவரை விசாரிக்காமல் இருப்பதே எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று புலம்புகிறார்.

காட்டிக்கொடுக்குமா கடிதம் என்பதை காத்திருந்து பார்ப்போம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close