Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கியா நிறுவனம் முதலீடு செய்யாததற்கு இதுதான் காரணம் - தமிழ்நாடு அரசு விளக்கம்..!

கியா நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்காதது, அந்நிறுவனத்தின் கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 


'தமிழக அமைச்சர்கள் லஞ்சம் கேட்டதும், தொழிற்சாலைக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காததும்தான், கியா நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்காததற்குக் காரணம்', என்று தொழிலதிபர் கண்ணன் ராமசாமி பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்தச் சம்பவம் பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்தன. தற்போது, இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கடந்த சில நாள்களுக்கு முன்பாக, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலும், சில செய்தித்தாள்களிலும் தென் கொரியாவைச் சேர்ந்த ஆட்டோ மொபைல் நிறுவனமான கியா மோட்டார்ஸ், தமிழ்நாட்டில் தங்கள் நிறுவனத்தை அமைக்க முன்வந்ததாகவும், ஆனால், தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பு வழங்காததால் அந்நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் தனது தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.


இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஒரு நபரது முகநூல் பக்கத்தில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்து முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டி, அதன் காரணமாகவே அந்நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்யச் சென்றதாக தவறான தகவல் பரப்பப்பட்டிருந்தது. இச்செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் அதிகமாக வலம்வந்தன. இவை அனைத்தும் முகாந்திரமற்ற, முற்றிலும் உண்மைக்கு மாறான மற்றும் அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பரப்பப்பட்டுள்ளது. 

2016-ம் ஆண்டில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ள செய்தி தெரியவந்தபோது, மாநில அரசு உடனடியாக அந்த தொழில்நிறுவனத்துடன் தொடர்பு ஏற்படுத்தியும் மற்றும் கியா மோட்டார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஹுண்டாய் நிறுவனத்துடன் கலந்து ஆலோசனை நடத்தியது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள ஹுண்டாய் நிறுவனத்தின் நல்அனுபவத்தின் மூலம் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதலீட்டை இம்மாநிலத்தில் ஈர்க்கச் செய்வதற்கான ஒரு முயற்சியே ஆகும்.

 கியா நிறுவனம் தங்கள் தொழிற்சாலையைத் துவங்க உத்தேசித்ததைத் தொடர்ந்து, அப்போதைய தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலர் அவர்கள் கியா மோட்டார்ஸ் நிறுவன உற்பத்தித் திட்டத்தினை தமிழகத்தில் அமைப்பதற்கு அழைப்பு விடுத்து, தென் கொரியாவைச் சார்ந்த அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலரான ஆன் ஊ பார்க்குக்குக் கடிதம் எழுதினார். நிலம், மின்சாரம், தண்ணீர், நிதிச்சலுகை, ஒற்றைசாளர வசதி உள்ளடக்கிய அமைப்பு முறையிலான தொகுப்புச் சலுகை வழங்குவதற்கும் தமிழக அரசு அப்போது முன்வந்தது.

அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலரான ஆன் ஊ பார்க்,  1.9.2016 தேதியிட்ட பதில் கடிதத்தில், தமிழக அரசின் அழைப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, கியா நிறுவனம் தனது தொழில் திட்டத்தை தனது நாட்டுக்கு வெளியே அமைப்பது குறித்து ஆராய்ந்து வந்ததாகவும், அந்த முதலீடு செய்யக் கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அயல் நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அதிகம் நாடும் இடமாக தமிழகம் விளங்குவதையும் மற்றும் மாநில அரசின் சிறந்த ஆதரவினால் ஹுண்டாய் நிறுவனம் தனது இரண்டு தொழில் திட்டங்களை அமைத்து இந்தியாவில் சிறந்து விளங்குவதையும் குறிப்பாக தெரிவித்திருந்தார்.

கியா நிறுவனத் தலைவர் அளித்திருந்த கடிதத்தில், அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் ஹுண்டாய் நிறுவனம் ஏற்கெனவே தனது தொழில் திட்டங்களை நிறுவியுள்ள இடங்களில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தொழில் திட்டத்தைத் தொடங்கக் கூடாது என்கிற நிறுவன மேலாண்மை மற்றும் பங்குதாரர்களின் முடிவு, தனது நிறுவனத்தின் வணிக தேவை மற்றும் இதர காரணங்கள் ஆகியவற்றினால் தமிழ்நாட்டில் தனது புதிய தொழில் திட்டத்தைத் தொடங்க முடிவுசெய்ய இயலவில்லை என்பதைக் குறிப்பிட்டு தமிழக அரசின் அழைப்பை ஏற்க இயலாததற்கு வருத்தம்  தெரிவித்திருந்தார்.

மேலும், கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மேலாண்மை மற்றும் இயக்குநர் குழுமத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால் இந்நிறுவன பங்குதாரர்களுக்குப் பொறுப்பானதாக இருக்க வேண்டியுள்ளது என்றும், இந்நிறுவனம் ஹுண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருப்பினும், அதன் முதலீட்டு முடிவுகள் முழுமையான சுதந்திரம் மற்றும் தனித்தன்மையுடன், அதன் வணிக உத்தி மற்றும் தேவைகளுக்கேற்ப எடுக்கப்படுகின்றன என்று  தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை கியா நிறுவனம் மேலாண்மை ஆர்வத்துடன் எதிர்நோக்கும் எனவும் குறிப்பிட்டு தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் தனது மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

ஆக,  கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தனது தொழில் திட்டத்தை தொடங்க வேண்டாம் என முடிவு செய்தது அதன் வணிக உத்தி சார்ந்த கொள்கை முடிவு மட்டுமே என்பது இதன் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதாவது தனது முக்கிய தொழில் பங்குதாரரான ஹுண்டாய் நிறுவனம் ஏற்கெனவே தொழில் திட்டங்கள் அமைத்துள்ள இடங்களில் தனது உற்பத்தித் திட்டத்தினை தொடங்கக் கூடாது என்பது  கியா நிறுவனத்தின் கொள்கை முடிவாகும்.  

சமீபத்தில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஹுண்டாய்  நிறுவனம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழில் பூங்காவில் மேலும் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது. இது, தமிழக அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு மற்றும் மாநிலத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அதன் முயற்சிகளுக்கு ஒரு நற்சான்றாகும்' என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close