Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அழகன்குளம் அகழாய்வு சொல்லும் உண்மை என்ன?

ஒரு பகுதியின் வரலாற்றை எழுதுவதற்கும், தொல்லியல் சான்றுகளை அளிப்பதற்கும் அகழாய்வுகளின் பங்கு இன்றியமையாதது. மண்ணில் புதைந்துள்ள வரலாற்று உண்மைகளை வெளி உலகுக்குத் தெரியப்படுத்துகிறது அகழாய்வுப் பணி. தமிழகத்தில் இதுவரை 39 இடங்களில் தமிழகத் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டின் ஏதேனும் ஓர் இடத்தைத் தேர்வுசெய்து அந்தப் பகுதியின் தொன்மை வரலாற்றை அகழாய்வின் மூலம் வெளிகொணர்கிறது. இந்த அகழாய்வில் கிடைக்கும் தொல்லியல் பொருள்களை, அருகிலுள்ள அகழ் வைப்பகத்தில் பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்படுகிறது. அகழாய்வு செய்யப்பட்ட இடத்தில் அறியப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளைக்கொண்ட ஆய்வறிக்கை தயார்செய்து, அதை நூலாக வெளியிட்டும் வருகிறது. இந்தத் தகவல்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைகின்றன. மேலும், இவற்றின் மூலம் தமிழகத்தின் வரலாறு கட்டமைக்கப்படுகிறது.

அழகன்குளம்

 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் கிராமம், இந்த ஆண்டு அகழாய்வுப் பணிக்கு எனத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 17 கிலோமீட்டர் தொலைவில் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது கடற்கரைக் கிராமமான அழகன்குளம். இங்கு ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுப் பணிகளின் மூலம், இந்தக் கிராமம் சங்ககாலத்தில் புகழ்பெற்ற வணிகத் தலமாக விளங்கியுள்ளது என்பது தெரியவருகிறது. தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இங்கு வாழ்ந்த பண்டைய தமிழ்ச் சமூகத்தினுடைய வாழ்வியல் கூறுகளை அறியும் வகையில் தமிழகத் தொல்லியல் துறையினர் ஏற்கெனவே அகழாய்வு நடத்தி பல்வேறு தொல்பொருள்களை வெளிகொண்டு வந்துள்ளனர். 1986-87ம் ஆண்டுகளில் தொடங்கிய இந்தப் பணி, ஏழு பருவங்களாக நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய ஆபரணங்களான சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், கண்ணாடியிலான பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், இரும்பிலான பொருள்கள், நாணயங்கள், மத்தியத் தரைக்கடல் நாடுகளோடு கொண்டிருந்த வணிகத் தொடர்பை வெளிப்படுத்தும் அரிய மண்பாண்டங்கள், நாணயங்கள், பல்வேறு உருவம் பதித்த மண்பாண்டங்கள், தமிழ் பிராமி எழுத்து பொறிப்பு பெற்ற மண்பாண்டங்கள் ஆகியவை இதிலடங்கும் .

இவையாவும் இங்கு நடத்தப்பட்ட சிறு அகழாய்வுப் பணியின்போது கண்டறியபட்டவை. இந்தச் சிறப்பு வாய்ந்த பகுதியின் பழந்தன்மையை வெளிப்படுத்தும் பண்டையச் சமூகம், பொருளாதாரம், கலை, கலாசாரம், எழுத்தறிவு, வணிகம் உள்ளிட்ட வாழ்வியல் கூறுகளை முழுமையாக அறியும் வகையில் முழுமையான ஆய்வை மேற்கொள்ள தமிழக முதலமைச்சரால் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அழகன்குளம்

இதைத் தொடர்ந்து அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. அழகன்குளத்தில் `கோட்டைமேடு' என அழைக்கப்படும் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அகழாய்வுப் பணி இயக்குநர் முனைவர் பாஸ்கரன் தலைமையில் அகழாய்வாளர்கள் பிரபாகரன், சக்திவேல், ரஞ்சித், தங்கத்துரை, பாஸ்கர் ஆகியோரைக்கொண்ட குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்தப் பணிகள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவுபெறும் எனத் தெரிகிறது.

 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், அழகன்குளத்தில் தொடங்கப்பட்ட அகழாய்வுப் பணிகளை ஆய்வுசெய்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close