Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க பூத் ஏஜென்ட் முதல் உயர் நீதிமன்ற நீதிபதி வரை... யார் இந்த கர்ணன்?

ன்கொடுமைச் சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் ஏழு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அவருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவரைக் கைதுசெய்ய கொல்கத்தா போலீஸார் தமிழகம் வந்துள்ளனர். நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருக்கிறார். அவரது மொபைல்போன் சிக்னல், கடைசியாக ஆந்திர மாநிலம் தடாவைக் காட்டியுள்ளது. கர்ணனைக் கைதுசெய்ய போலீஸார் தடாவுக்கு விரைந்துள்ளனர். ஆந்திர போலீஸ் உதவியை கொல்கத்தா போலீஸ் நாடியுள்ளது. 

உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன்

இந்திய நீதித்துறையில் பதவியில் இருக்கும்போதே, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் நீதிபதி கர்ணன்தான். அதிரடிக்குப் பெயர்போன  இவர், கடலூர் மாவட்டத்தில் கர்நத்தம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். கர்ணனின் தந்தை சின்னசுவாமி சுவாமிநாதன், சிறந்த அறிஞர்; பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்; குடியரசுத் தலைவர் விருது பெற்றவர். இவருக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள். கர்ணன் 2-வது மகன். கர்நத்தம் கிராமத்தில் 40 சதவிகிதம் பேர் தலித் மக்கள். பிற கிராமங்களைப்போல தலித் மக்களுக்கு எனத் தனி காலனி எல்லாம் இந்தக் கிராமத்தில் கிடையாது. அனைத்து மக்களும் கலந்து ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகின்றனர். 

நீதிபதி கர்ணனின் தந்தை, சுற்றுவட்டார மக்களின் அன்பைப் பெற்றவராக இருந்துள்ளார். அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்து பல நல்ல காரியங்களைச் செய்ததோடு, தனது எட்டுக் குழந்தைகளையும் மெத்தப் படிக்கவைத்துள்ளார். கர்ணனின் இரு சகோதரர்கள் தேவநீதி, அறிவுடைநம்பி  வழக்குரைஞர்கள். மற்றொரு சகோதரரான திருவள்ளுவன், தமிழ்நாடு ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸில் பணிபுரிகிறார். 

பள்ளிப்படிப்பை,  மங்கலம்பேட்டை அரசுப் பள்ளியில் படித்தார் கர்ணன். விருதாசலத்தில் பட்டப்படிப்பு. கல்லூரிக்காலத்திலிருந்தே நீதிபதி கர்ணனுக்கும் சொந்த ஊருக்குமிடையேயான உறவு குறையத் தொடங்கியுள்ளது. சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1983-ம் ஆண்டு முதல் வழக்குரைஞர் பணியில் ஈடுபட்டுவந்தார்.  வக்கீலாக இருந்தபோது அ.தி.மு.க-வில் ஈடுபாடு இருந்தது. கடந்த 2002-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பூத் ஏஜென்டாகவும் கர்ணன் செயல்பட்டார். 

தொடர்ந்து 2009-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கர்ணன் நியமிக்கப்பட்டார் 2012-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் இதர நீதிபதிகளுக்கும் நீதிபதி கர்ணனுக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.  'தான் தலித் என்பதால் இதர நீதிபதிகள் தன்னை அவமதிக்கின்றனர்' என  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவருக்கு கர்ணன் அடிக்கடி கடிதம் எழுதிவந்தார். மோதலுக்குத் தீர்வு காணும் வகையில்,  கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்குக் கர்ணன் மாற்றம் செய்யப்பட்டார். 

நீதிபதி கர்ணன், அதிரடியாகப் பேசக்கூடியர்; நடக்கக்கூடியவர். அதேசமயம் மாணாக்கர்களிடையே அதீத அன்புகொண்டவர். தமிழகத்தில் ஒரு சமயத்தில் பள்ளித்தேர்வில் தோல்வியடைந்த மாணவ - மாணவிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது, நீதிபதி கர்ணன்  மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்கும்வகையில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில்,
'நானும் ஆறாம் வகுப்பு, பி.யூ.சி., பி.எஸ்ஸி., பி.எல் தேர்வுகளின்போது தோல்வியடைந்துள்ளேன். கசப்பான வேதனைகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்துள்ளேன். ஆனால், மனஉறுதியை இழந்ததில்லை. அதனால்தான்  உயர் நீதிமன்ற நீதிபதி எனும் அளவுக்கு உயர்ந்துள்ளேன். வாழ்க்கை உன்னதமானது. மாணாக்கர்கள் நம்பிக்கை, விடா முயற்சிகொள்ள வேண்டுமே தவிர, வாழ்க்கையை முடித்துக்கொள்ளக் கூடாது' என உருக்கமாக வேண்டியிருந்தார். 

நீதிபதி கர்ணன், தன் சொந்த ஊரான கர்நத்தம் கிராமத்துக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு  சென்றிருக்கிறார். குலதெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கைகொண்டவர்.  சொந்த கிராமத்தில் பைரவருக்கு ஒரு கோயில் கட்டிக்கொடுத்துள்ளார். நீதிபதி கர்ணனைக்  கைதுசெய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை  ரத்துசெய்யக் கோரி, கர்நத்தம்  மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close