Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆட்கள் வேலை செய்யவில்லையா?' ஆனந்த விகடனின் அட்டைப்படக் கட்டுரைக்கு தமிழக அரசின் விளக்கம்!

தமிழக அரசு3.5.2017 தேதியிட்ட ஆனந்த விகடன் வார இதழில் "ஆட்கள் வேலை செய்யவில்லை" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைக்கு தமிழ்நாடு அரசின் விளக்க அறிக்கை :

சமீபத்தில் வெளிவந்த ஆனந்த விகடன் வாரப் பத்திரிகை அட்டை படத்தில் தமிழ்நாடு அரசு சின்னத்தின் மீது சிலந்தி வலையும், 10-14-ம் பக்கத்தில் "ஆட்கள் வேலை செய்யவில்லை"  என்ற படத்துடன் ஒரு கட்டுரையும் வெளிவந்தது. இந்தக் கட்டுரைக்கு தமிழக அரசு கொடுத்துள்ள விளக்கம் :

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி சிறப்பாக செயல்படுவதுடன், மக்கள் நலனில் கவனம் செலுத்தி ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள் போற்றும் அரசாக விளங்கி வருகிறது.

முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஓர் ஆய்வுக் கூட்டத்தை நடத்திக்கொண்டு இருந்தபோது, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டு ஒரு மனுவை கொண்டு வந்தார்கள். கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சரிடம் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்கத் தயார் என முதலமைச்சர் தெரிவித்தார். இத்தகவல், எதிர்க்கட்சித் தலைவருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்ட போது, அவர் தலைமைச் செயலகத்தை விட்டு புறப்பட்டு விட்டார். அதனால், எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த மனுவை சேகர் பாபு, முதலமைச்சரிடம் கொடுத்தார். அந்த மனுவைப் பெற்றுக்கொண்டு முதலமைச்சர், அம்மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். எனவே, சந்திக்க மறுத்தார் என்பது தவறானது.

பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக நிறைவு அடையவில்லை என்றும், துறை ரீதியான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் இருந்த காரணத்தாலும், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்த காரணத்தினாலும் பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு, உடனடியாக துறை ரீதியிலான விவாதங்கள் நடைபெறவில்லை. இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், கூடிய விரைவில் துறை ரீதியிலான விவாதங்கள் சட்டமன்றத்தில் நடைபெறும். பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, அமைச்சர்கள் தெள்ளத்தெளிவாக அவ்வப்போது உடனுக்குடன் பதிலளித்துள்ளார்கள். இப்படி அமைச்சர்கள் பதில் அளிப்பதை விரும்பாத தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், அமளியில் ஈடுபட்டு வருவதை நாடே அறியும். நிலைமை இப்படியிருக்க, இப்படிப்பட்டக் கேள்வியை எழுப்பியிருப்பது விந்தையாக உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, 16.2.2017 அன்று பதவியேற்ற முதல் நாளிலேயே 5 சிறப்புத் திட்டங்களுக்கான கோப்புகளில் ஆணையிட்டார். ஐந்து திட்டங்களுக்கும் உடனுக்குடன் அரசாணை வெளியிடப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்தத் தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப, தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும். தமிழ்நாட்டில் இயற்கை பொய்த்ததால், இதுவரை வரலாறுகாணாத வகையில், வறட்சி ஏற்பட்டுள்ளது என்பதை நாடே அறியும். கடந்த 140 ஆண்டுகளில் இதுபோன்ற வறட்சியை தமிழ்நாடு சந்தித்ததில்லை. இயற்கை இன்னல்களான வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை அரசும் சிறப்பாக எடுத்து வருகிறது. 

*அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய 1426-ம் பசலி ஆண்டுக்குரிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்து ஆணையிடப்பட்டுள்ளது. 

*குடிநீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணையிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

* 32,30,191 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக 2,247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக விடுவிக்கப்பட்டு வருகிறது.

* நீர் நிலைகளை பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் புனரமைக்க "பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு" புத்துயிர் அளித்து முதல்வர் உத்தரவிட்டார்.

* பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு, அக்குடும்பங்களின் வறிய நிலையை மட்டும் கருத்தில் கொண்டு 2 கோடியே 46 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணமாக வழங்கப்பட்டது. 

* தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தற்போது நடைமுறையிலுள்ள நியாயமான மற்றும் வெளிப்படையான சேர்க்கை முறையைத் தொடர ஏதுவாக, இரண்டு சட்ட முன்வடிவுகள் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்காக, இரண்டு முறை பிரதமரை முதல்வர் சந்தித்தார்.

* தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1.1.2017 முதல் நான்கு சதவிகிதம் உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 

* பொது விநியோகத் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கில், ரூ. 330 கோடி செலவில், 1.89 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் திட்டம், 1.4.2017 அன்று முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

* தமிழ்நாடு அரசின் தொடர் கண்காணிப்பால், கடந்த மூன்று மாதங்களில் அத்தியாவசியப் பொருள்களான அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

 முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்ற பிறகு தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தும், நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

* முதலமைச்சர் 16.02.2017 அன்று பொறுப்பேற்ற தினத்திலிருந்து இன்றுவரை, 1,560 கோப்புகளில் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தற்போது, முதலமைச்சர் அலுவலகத்தில் நிலுவையில் எந்தக்கோப்புகளும் இல்லை. இந்தக் குறுகிய காலத்திற்குள், பல புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு நேரடியாகவும் கடிதங்கள் வாயிலாகவும் கொண்டு சென்று, முதலமைச்சர் முனைப்பாகச் செயலாற்றி வருகிறார் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close