Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘டார்கெட் பத்தாயிரம் கோடி...!’ - தயாராகும் தமிழ்நாடு அரசு கடற்கரை தாதுமணல் நிறுவனம்? #VikatanExclusive

தலைமை செயலகம்

மிழகத்தில் தனியார்களின் ராஜ்ஜியத்தில் இருந்துவந்த தாதுமணல் வர்த்தகம் அடியோடு முடங்கிக் கிடக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் களத்தில் இறங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால், நிலைகுலைந்துபோய் உள்ளனர் தாதுமணல் வர்த்தக அதிபர்கள். 'வருடத்துக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் தாதுமணல் மூலம் வருவாய் கிடைக்கிறது. 'அரசே ஏற்று நடத்த வேண்டும்' என தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரன்' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.

தென்மண்டல கடற்கரையில் உள்ள 25 கிலோமீட்டர் பரப்பளவை மையமாக வைத்துச் செயல்பட்டு வந்தன வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட சில தாதுமணல் வர்த்தக நிறுவனங்கள். 2013-ம் ஆண்டில் தாதுமணல் வர்த்தகத்துக்குத் தடை விதித்தது தமிழக அரசு. இதன்பின்னரும் சட்டவிரோதமான முறையில் தாதுமணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. தூத்துக்குடியிலிருந்து துபாயில் உள்ள ஜபேல் அலி துறைமுகத்துக்கு அனுப்பப்பட இருந்த 420 மெட்ரிக் டன் கார்னட் மணலுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவரின் கையெழுத்தை மோசடியாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, வி.வி.மினரல்ஸ் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. இதுதொடர்பாக, ஆய்வு நடத்திய தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான குடோன்களுக்கு சீல் வைத்தார். இதன்பிறகு, 'தாதுமணலைப் பிரித்தெடுக்கும் சுத்திகரிப்பு மையங்களை முறையான அனுமதி இல்லாமல் வி.வி.மினரல்ஸ் இயக்கிவருகிறது' எனக் கடுமையைக் கூட்டினார் நெல்லை கலெக்டர் கருணாகரன். ‘இருக்கான்துறை மற்றும் லெவிஞ்சிபுரம் கிராமத்தில் S.F. No.211, S.F. No.480, 481 ஆகிய எண்களில் இரண்டு தாதுமணல் பிரித்தெடுக்கும் பிளாண்டுகளை வி.வி.மினரல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறது. அதேபோல், ராதாபுரத்தில் (S.F No:77/17&21, 50/1A2) உள்ள வல்லான்வில்லை கிராமத்தில் தாதுமணல் பிரித்தெடுக்கும் பிளாண்டையும்  நடத்தி வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அனுமதியில்லாமல்தான், இந்த நிறுவனம் மின் மோட்டார்களை இயக்கிவருகிறது. அரசின் எந்த அனுமதியையும் இவர்கள் பெறவில்லை' எனக் கூறி, அந்த பிளாண்டுகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.

தாதுமணல் வர்த்தகம்

இந்நிலையில், 'தாதுமணல் வர்த்தகத்தை தனியார் நடத்துவதால் அரசுக்கு எந்தவித லாபமும் இல்லை. அரசே ஏற்று நடத்தினால் பெரும் லாபம் கிடைக்கும். தொழிலாளர்களுக்கும் நல்ல ஊதியம் கிடைக்கும்' என, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் கலெக்டர் கருணாகரன். அந்தக் கடிதத்தில், 'சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தாதுமணல் குவாரிகளின் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. மிகப் பெரிய அளவில் சுத்திகரிக்கப்பட்ட தாதுமணல்களை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்துள்ளனர். ராதாபுரம் தாலுகாவில் உள்ள திருவேம்பலாபுரம், விஜயாபதி கிராமங்களில் இண்டஸ்ட்ரியல் மினரல் கம்பெனி என்ற நிறுவனம் 13 லட்சத்து 70 ஆயிரத்து 409 மெட்ரிக் டன் அளவுக்கு தாதுமணலை எடுத்துள்ளது. இதனை மைனிங் சர்வலைன்ஸ் சிஸ்டத்தின் வழியாக, சுரங்க விதிகளின்படி ஆய்வு நடத்திக் கண்டறிந்தோம். இந்தக் கம்பெனிக்கு சுரங்க குத்தகை உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு சுரங்கம் மற்றும் தாதுமணல் சட்டப் பிரிவு 21(5), 1957-ன்படி ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கினோம். இதில், 1 லட்சத்து 87 ஆயிரத்து 718 மெட்ரிக் டன் தாதுமணலை ஏற்றுமதி செய்துள்ளனர். 2012-13 முதல் 30.9.2016 வரையில் தாதுமணல் எடுக்கப்பட்டுள்ளது. தாதுமணல் கொள்ளை தொடர்பாக, நீதிமன்றமும் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. கடந்த ஆட்சியில், 'தாதுமணல் வர்த்தகத்தை அரசு ஏற்று நடத்துவது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும்' என, சட்டமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. எனவே, தமிழ்நாடு அரசு கடற்கரைத் தாதுமணல் நிறுவனத்தைத் தொடங்கினால், அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

கருணாகரன் ஐ.ஏ.எஸ்.இந்தக் கடிதம் குறித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம் பேசினோம். "உயர் நீதிமன்றத்தில் தாதுமணல் வர்த்தகம் தொடர்பான வழக்கு நடந்துவருகிறது. 'எவ்வளவு தாதுமணலை எடுத்துள்ளனர்?' என்பதைக் கண்டறிய பாஸ்கராச்சாரி இன்ஸ்ட்யூட் ஆஃப் ஸ்பேஸ் மூலம் ஆய்வு நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தோம். தாதுமணல் வியாபாரத்தின் மூலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இது தோராயமான மதிப்புதான். தனியார்கள் தாதுமணல் வர்த்தகத்தை நடத்துவதன் வழியாக பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. தாதுமணல் பிரித்தெடுக்கும்போது கிடைக்கும் கார்னட், இலுமனைட்டுடன் சேர்த்து மோனோசைட்டும் கிடைக்கிறது.

அணு ஆயுதத் தயாரிப்புகளில் இந்த மோனோசைட் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது தவறானவர்கள் கைகளுக்குச் சென்று சேருகிறது. அரசே தாதுமணலை ஏற்று நடத்தும்போது, இப்படிப்பட்ட தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை. இங்குள்ள தாதுமணல் பிளாண்டுகளில் 50, 100 ரூபாய் எனக் குறைவான தினக் கூலிகளுக்கு ஆட்களைப் பணியில் அமர்த்துகின்றனர். அவர்களிடமிருந்து அதிகப்படியான உழைப்பை வாங்குகின்றனர்.  தவிர, நிரந்தரப் பணியாளர்களாக இவர்கள் யாரையும் வைத்துக்கொள்வதில்லை. அரசாங்கம் ஏற்று நடத்தும்போது, தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்கும். அரசாங்கம் நடத்தும்போது, 'எவ்வளவு தாதுமணல் செல்கிறது?' என முறையான கணக்குகளும் பராமரிக்கப்படும். தனியார்களின் கணக்கு வழக்குகளை மிகவும் சிரமப்பட்டுத்தான் கண்டறிய முடிகிறது. அரசின் கைகளில் இருந்தால், விதிகளின்படி அனைத்தும் சரியானமுறையில் நடக்கும். எனவேதான், தலைமைச் செயலாளருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினோம். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தாலும், தாதுமணலை அரசே ஏற்று நடத்துவதில் எந்தவிதச் சிரமங்களும் இல்லை" என்றார் தெளிவாக.

தாதுமணல்

இதற்கிடையில், சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்டுள்ள தாதுமணல் அளவு குறித்துக் கணக்கெடுக்க மகேசன் காசிராஜன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தது உயர் நீதிமன்றம். 'இந்தப் பணியில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை' என தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார் மகேசன் காசிராஜன். இதையடுத்து, சத்யபிரதா சாகு என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த மாதம் 28-ம் தேதி தூத்துக்குடியில் தாதுமணல் கணக்கெடுப்பைத் தொடங்கினார். நாளை காலை திருநெல்வேலியில் ஆய்வு நடத்த இருக்கிறார் சத்யபிரதா சாகு. " ஆய்வு முடிவுகளை ஓரிரு மாதத்தில் நீதிமன்றத்தில் அவர் அளிக்க இருக்கிறார். இதன்பிறகு, அரசு தாதுமணல் நிறுவனம் உயிர்த்தெழுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். 

இதுகுறித்து, தாதுமணல் வர்த்தக நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் ஒருவரைத் தொடர்பு கொண்டோம். "ககன்தீப் சிங் பேடியோடு எங்களுக்குச் சில முரண்டுபாடுகள் இருந்தன. 'பழிவாங்கும்போக்கில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்' என நீதிமன்றத்திலேயே தெரிவித்தோம். கருணாகரனும் அப்படித்தான் செயல்படுகிறார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் சட்டரீதியாகவே எதிர்கொள்வோம்" என்றார் உறுதியாக.

ககன்தீப் சிங் பேடி அறிக்கை; நெல்லை கலெக்டர் கருணாகரனின் அதிரடி; தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமாரின் நடவடிக்கைகள் என நீண்டுகொண்டிருந்த தாதுமணல் ஆட்டம், சத்யபிரதா சாகு ஐ.ஏ.எஸ் முன்பு வந்து நிற்கிறது. அரசியல் கட்சிகளின் ஆட்சியைவிட, நீதியரசர்களும் ஆட்சிப் பணியாளர்களுமே சூழலியல் மீதான அக்கறையை தினம்தினம் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close