Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''நிர்வாணம் வேண்டாம்னு டெல்லிக்கே போய் கெஞ்சினேன்..!’’ - அய்யாக்கண்ணு மனைவி சந்திரலேகா!

போராட்டத்தில் அய்யாக்கண்ணு

''ன்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் 
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...'' அன்று டிராக்டர் மீது சுற்றிக்கொண்டே பாடினார் எம்.ஜி.ஆர். ஆனால், வெளிநாட்டில் அல்ல, சொந்த நாட்டின் தலைநகரிலேயே கையேந்தி நின்றார்கள் அய்யாக்கண்ணு தலைமையிலான நம் விவசாயிகள். 

சமீபத்தில் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிப்போட்ட விவசாயிகளின் போராட்டத்தை டெல்லி ஜன்தர் மந்தரில் முன்னின்று நடத்தியவர் அய்யாக்கண்ணு. “விவசாயிங்கதானே போராடுறாங்க. அதெல்லாம் ஒரு வாரத்துக்கு மேல தாக்குப்பிடிக்காது” என நினைத்தவர்களுக்கு மத்தியில் நாற்பது நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். 

விவசாயிகள் போராட்டம்

போராட்டத்திற்காக டெல்லியில் இருந்த அந்த நாட்களில் அவர் குடும்பம் என்ன செய்து கொண்டிருந்தது. அய்யாக்கண்ணுவின் மனைவி சந்திரலேகாவிடமே கேட்கலாம் என்று தொலைபேசியில் அழைத்தோம். “வணக்கங்க... யாரு நீங்க?” என்றவரிடம்  “விகடனிலிருந்து பேசுறேன்மா” என்றதுமே, “பத்திரிகையில இருந்தா பேசுறீங்க. நேருல வந்தீங்கணா, சாப்ட்டு ஆர அமர உக்காந்து பேசலாமே” என்ற அவரின் அன்பு பொங்கிய அந்தப் பேச்சிலேயே உள்ளம் குளிர, தொடர்ந்து பேசினோம். 

மனைவியுடன் அய்யாக்கண்ணு

“என் வீட்டுக்காரரு நாளெல்லாம் காடு, கழனின்னு சுத்திட்டே இருப்பாரு. பல நாளா  ராவுலகூட வரப்புலயே படுத்து கெடந்து பொழுது விடிஞ்சதும் வீட்டுக்கு வருவாரு. நெதம் நெதம் மனுசன் சாப்டும்போதெல்லாம் ஒரே பொலம்பல்தான். 'நம்ம நாட்டுல விவசாயியா மட்டும் பொறந்துடக்கூடாதுமா. ஊழல் பண்றவனுக்கும் திருடித் திங்குறவனுக்குந்தான் இந்த சர்க்கார் துணை போவுது. நாமெல்லாம் என்ன பாவம் பண்ணுனோமோ தெரியல'ன்னு அடிக்கடி சொல்லிச் சொல்லி வருத்தப்படுவாரு. ஊர் முழுக்க நெல்லு வௌஞ்சு பச்சப் பசேலுன்னு இருக்க வேண்டிய வயக்காடெல்லாம் தண்ணி இல்லாம காஞ்சிக் கெடக்குறத பாக்கும்போது எந்த வெவசாயிதான்யா தெம்பா இருப்பான். கடன் தொல்லை. கை கொடுக்கவும் யாரும் முன்வரல. அதான் வாழ வழியில்லாம அடுத்தடுத்து உசுர மாச்சிக்கிட்டாங்க. அந்த சம்பவங்கதான்யா இவர ரொம்ப பாதிச்சிடுச்சு. 

அப்போதான் திடீர்னு ஒருநாள் என்கிட்ட வந்து நான் டெல்லிக்குப் போராட போறேன்னு சொன்னாரு. இதுக்கு முன்னாடி எத்தனையோ முறை போயிருக்காரு. ஆனா, எனக்கு ஒன்னுமே தோணுனதில்ல. போராட்டத்துக்குன்னு சொன்னதும்தான் மனசு கெடந்து அடிச்சுது. சரி ரெண்டு மூணு நாள்ல திரும்பி வந்துடுவாருன்னுதான் நெனைச்சேன். நாள் போகப்போக டி.வியில பாக்கும்போதுதான் அங்க அவரு பெரிய ஆபத்துல மாட்டிக்கிட்ட மாதிரி தோணுச்சு.

விவசாயிகள் போராட்டம்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டத்த பண்ணுனாங்க. ஏன்யா இதெல்லாம் நமக்கு எதுக்கு. நீங்க எப்படி போராடுனாலும் பிரதமர் வந்து பாக்கப் போறதில்ல. திரும்பி வந்துடுங்கய்யான்னு போனுல சொல்லி அழுதேன். 'அதெல்லாம் இல்லம்மா. போராட்டம்னு எறங்கியாச்சு. என்ன நம்பி நம்ம சனங்கள்லாம் வெயில்லயும் மழையிலயும் கெடக்குறாங்க. இதுக்கு ஒரு முடிவு கெடைக்காம நான் அங்க வர மாட்டேன்'னு சொல்லிட்டாரு. 

ஒருநாள் போன்ல துணியில்லாம போராடப்போறோம்னு சொன்னதும் என் மூச்சே நின்னுடுச்சு. வீட்டுல ராசா மாதிரி இருந்தவரு. துணியில்லாம ரோட்டுல ஓடிடக்கூடாதேன்னு புள்ள குட்டிகளையெல்லாம் கூட்டிட்டு சொல்லாம கொள்ளாம டெல்லி கெளம்பி போயிட்டோம். டி.வியில பாக்குறத விட நேருல பாக்கும்போது ரொம்ப கவலையா இருந்துது. அந்த எடமே போலீசும் கெடுபிடியுமா இருந்துச்சு. அதையெல்லாம் பாத்துட்டு மக்களுக்காக சர்க்காரை பகைச்சிக்கிட்டு போராடுறாரே. தெரியாத ஊருல யாரும் அவரை எதுவும் பண்ணிடக்கூடாதேன்னு அழுதேன். ஆனா, அவரு ஒரே ஒரு நாள்தான் எங்களை அங்க இருக்க வச்சாரு. சாயந்திரமே ரயில்ல அனுப்பி வச்சிட்டாரு. ரயில்ல ஏறினப்பக்கூட என் பேத்தி 'ஆயா, தாத்தாவ உள்ள வச்சி பூட்டிடுவோம். நான் டிரைவர்ட்ட சொல்லி ரயில எடுக்க சொல்லிடுறேன்'னு அழுதுச்சு. கவலையோடதான் திரும்பி வந்தோம். 

விவசாயிகள் போராட்டம்

வீட்டுக்கு வந்த ரெண்டாவது நாளே அங்க எல்லாரும் துணியில்லாம ஓடுறத டி.வியில போட்டுக்காட்டுனாங்க. எது நடக்கக்கூடாதுன்னு எதிர்பாத்தோமோ அது நடந்துடுச்சேன்னு வேதனையா இருந்துச்சு. அக்கம்பக்கத்துல எல்லாரும் வீட்டுக்கே வந்து கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒருபக்கம் போலீஸ்காரங்க எதுவும் பண்ணிடக்கூடாதேன்னு பயம் இருந்தாலும்  என் வீட்டுக்காரரு மக்களுக்காகத்தானே போராடுறாரு. கண்டிப்பா அவர நான் கும்புடுற குலசாமி பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடும்னு நம்புனேன். அடுத்த கொஞ்ச நாள்லயே விட்டுக்கு வந்துட்டாரு. பத்திரமா வந்தது அவரு மட்டுமில்ல... என் உசுரும் வீட்டுல உள்ளவங்களோட சந்தோஷமும்தான்”.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close