Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிலருக்கு ரகசியம் தெரிந்தது எப்படி? - நீட் தேர்வு குறித்து கொந்தளிக்கும் மாணவி

 நீட் தேர்வு

தேசிய அளவில் நடத்தப்பட்ட மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு சர்ச்சைகளின் சமுத்திரமாகியிருக்கிறது. குஜராத் மாநிலத்தவருக்கு மட்டும் எளிமையான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதில் தொடங்கி தினம்தோறும் ஏதாவதொரு  வினாத்தாள் தொடர்பான குளறுபடிகள்  வெளிவந்து கொண்டே இருக்கின்றன. உடனடியாக இந்தத் தேர்வை ரத்துசெய்யக்கோரி  மாணவர்கள் ஆங்காங்கே போராடிக்கொண்டிருக்கும் சமயத்தில், மேலும் ஒரு புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது.

 

தேர்வை ஆங்கிலத்தில் எழுதாமல் அந்தந்த பிராந்திய மொழிகளில் எழுத விருப்பம் தெரிவித்தவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களும், ஆங்கிலத்தில் எழுத விருப்பம் தெரிவித்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களும் முற்றிலும் வேறுபட்டிருக்கிறது  என்று முதலில் ஒரு குற்றச்சாட்டு வெளிவந்தது. அதிலும் குறிப்பாக, தமிழ் வினாத்தாள்களுக்கும் ஆங்கிலத்தில் இருந்த வினாத்தாள்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்றும் தமிழில் இருந்த வினாத்தாள்கள் மிகவும் எளிமையானதாகவும், நேரடியாக பதிலளிக்கும் வகையிலும் இருந்ததாக  குற்றம்சாட்டினார்கள். தமிழில் எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் நமக்கு நல்லதுதானே? மத்திய அரசு தமிழக மாணவர்கள் மீது கரிசனம் காட்டியிருக்கிறதுதானே? என்று தோன்றலாம்.  ஆனால், என்ன நடந்திருக்கிறது தெரியுமா.?

கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவி இலக்கியா ஆத்திரத்தோடு பேச ஆரம்பித்தார், " நான் நீட் தேர்வுக்காக 30 ஆயிரம் பணம் கட்டி கேரளாவில் உள்ள ஒரு இன்ஸ்ட்டிட்யூட்டில் படிச்சேன். அந்த இன்ஸ்ட்டிட்யூட்டில் கிட்டத்தட்ட ஷிஃப்ட் அடிப்படையில் 25,000 மாணவ மாணவிகள் பயிற்சிபெற்றார்கள். அவர்கள் அத்தனை பேருமே தேர்வை ஆங்கிலத்தில் எழுதுவதற்குத்தான் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ஏனென்றால், தமிழுக்கு ஒரு கொஸ்டீனும் இங்கிலீஷுக்கு ஒரு கொஸ்டீனும் செட் பண்ணுவாங்கன்னு யாருக்குமே தெரியாது. அப்படி எந்த இடத்திலும் சொல்லப்படவும் இல்லை. தேர்வு முடிந்த பிறகுதான் எங்களுக்கு இந்த விஷயமே தெரிஞ்சது.

தமிழில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அத்தனையுமே ப்ளஸ் டூ லெவலில்தான் இருந்துச்சு. எல்லா கொஸ்டீனுக்குமே நேரடியா ஆன்ஸர் பண்ணிடலாம். எழுதி முடிச்சிட்டு  ஒரு மணி நேரம் மிச்சமிருக்கும் வகையில் இருந்த அந்த கொஸ்டீனைப் பார்த்து நாங்களெல்லாம் அதிர்ச்சியாகிட்டோம். ஏன்னா எங்களுக்கு வந்த கொஸ்டீனுக்கெல்லாம் ஒர்க் அவுட் பண்ணாம ஆன்ஸர் பண்ண முடியாது. இங்கிலீஷ் மீடியம் படிக்காத, இங்கிலீஷ் புரியாத கிராமத்து மாணவர்களுக்காகத்தான் இப்படியான கொஸ்டீன் செட் பண்ணிருக்காங்கனு நெனைச்சு மனச தேத்திக்கிட்டோம். ஆனாலும், ஆதங்கம் தாங்க முடியல.  அவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சிருக்கோமே.  தமிழ்ல பரீட்சை எழுதிய யார்கிட்டயாவது  பேசணுமேன்னு ஒவ்வொருத்தர்கிட்டயா விசாரிச்சப்பதான்,  நாமக்கல்ல இருக்கிற ஒரு மிகப்பெரிய பள்ளியில் படிக்கும் என் ஃப்ரெண்டுகிட்ட பேசினேன். அவ, நான்  தமிழ்லதான் எக்ஸாம்  எழுதுனேன்னு சொன்னா. ஏன்... எதுக்குன்னு கேட்டதுக்கு. எங்க ஸ்கூல்ல எல்லாருமே தமிழ்லதான் எழுதினோம்னு சொன்னா பாருங்க. அப்டியே எங்களுக்கு ஷாக் ஆகிடுச்சி. ஆரம்பத்துல இருந்து இங்கிலீஷ் மீடியம் படிச்சிட்டு ஏன் தமிழ்ல எழுதுனீங்க. தமிழுக்கு தனி கொஸ்டீன் குடுப்பாங்கனு உங்களுக்கு முன்னாடியே தெரியுமானு கேட்டதுக்கு. அந்த பொண்ணு சொன்ன பதில் எங்களை ஆத்திரத்தில் தள்ளிருச்சி. 

அந்த ஸ்கூல்ல ஸ்டூடன்ட்ஸ் யாருமே அப்ளிகேஷனை ஃபில் பண்ணலையாம். ஸ்கூல்லயே ஃபில் பண்ணிட்டு ஸ்டூடன்ட்ஸ்கிட்ட கையெழுத்தை மட்டும் வாங்கியிருக்காங்கன்னு கேள்விப்பட்டதும் அப்படியே ஆடிப்போய்ட்டோம். அவங்களுக்கு மட்டும் எப்படி இந்த ரகசியம் தெரிஞ்சதுன்னு தீவிரமா விசாரணையில் இறங்கினா, நாமக்கல்ல இதுமாதிரி மூணு ஸ்கூல்ல பண்ணியிருக்காங்க. இதை எப்படி ஏத்துக்கிறது.? உண்மையாவே இங்கிலீஷே தெரியாத ஒரு கிராமத்து மாணவனுக்கு இப்படியான எளிமையான கேள்வி கேட்கப்படுவதைக்கூட ஏத்துக்கலாம். பொதுத்தேர்வுங்கிறது எல்லாருக்கும் பொதுவானதுதானே.? இதில் மிகப்பெரிய கோல்மால் நடந்திருக்கிறது. தேர்வு எழுதிய 85,000 பேர்ல, அந்த ஸ்கூல்களில் மட்டும் 2,500 பேர் தமிழ்ல எழுதியிருப்பதா சொல்றாங்க. தமிழ் மீடியத்தில் படித்தவர்களில் நீட் தேர்வு எழுதினவங்களே கொஞ்சம் பேர்தான் இருப்பாங்க. இதுகுறித்து தமிழ்ல தேர்வு எழுதினவங்க எத்தனை பேர் எந்தெந்தப் பள்ளிகளில் இருந்து எழுதியிருக்காங்க என்ற தகவலை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்மூலம் கேட்டிருக்கிறோம். அந்தத் தகவல் வந்ததும், அந்தப் பள்ளிகளின் முகத்திரையை சட்டப்படி கிழித்தெறிவோம். ஆனால், அதற்குள் ரிசல்ட் அறிவிச்சிருவாங்களேங்குறதுதான் எங்களின் பயமே!" என்று கலங்குகிறார்.

இப்போது, ரேங்க் முறையை ஒழித்து கிரேட் முறையைக் கொண்டுவந்திருக்கிறது தமிழக அரசு. மார்க்கை வைத்து தங்களது ட்ரேட் மார்க்கை நிறுவும் தனியார் பள்ளிகளுக்கு இது பேரிடி.  நீட் தேர்வு போன்ற தேர்வுகளில் அதிக மாணவர்களைத் தேர்ச்சிபெறச் செய்வதன் மூலம், அந்தப் பள்ளிதான் அறிவை வளர்க்கும் பள்ளி என்று உறுதிப்படுத்துவதற்காகவும், தனியார் பள்ளிகளின் மோகம் குறையாமல் இருபதற்காகவும் சில தனியார் பள்ளிகள் இப்படியான தகிடுதத்தங்களைச் செய்ய அதிகமான  வாய்ப்பிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு நிச்சயம் ஆராயப்பட வேண்டும்.  அதை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close