Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மரங்கள்... இது சேலம் இளைஞர் குழுவின் நம்பிக்கை

 

கடந்த வருடங்களைக் காட்டிலும் இந்த வருடம் அதிக வெப்பநிலை, சரியாகப் பெய்யாத பருவமழை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு மற்றும் சுவாசிக்க நல்ல காற்று இல்லாதது போன்ற பல பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் காடுகளிலும் நம்மைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள மரங்களை அழித்ததுதான்.

இந்தப்  பிரச்னைகளுக்குத்  தீர்வு காணும் வகையில், சேலம் இளைஞர் குழு சார்பில் சேலம் மாநகர் முழுவதும் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மரங்களை நடுவது என இலக்கு நிர்ணயித்து, அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையில், 'சேலம் இளைஞர் குழு'வைச் சேர்ந்த இளைஞர்களைச் சந்தித்துப் பேசினோம்.

ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மரங்கள் நடுவது பற்றிக் கூறுங்கள்?

சேலம் மாநகர் முழுவதும் பசுமையை உருவாக்கவும் சுற்றுச்சூழலைக் காக்கவும், எங்களுடைய சேலம் இளைஞர் குழு சார்பில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மரங்கள் நடுவது என முடிவுசெய்து, அரசிடம் அனுமதி பெற்று, இதுவரை சேலம் அம்மாப்பேட்டை பொண்ணம்மாபேட்டை காலனி போன்ற இடங்களில் நூறு மரங்களை நட்டுள்ளோம். இதற்கான செலவுகள், தன்னார்வலர்கள்மூலம் பெறப்பட்டு, இப்போது வரை மரம் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நிறைய தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவி வருகின்றனர். ஒரு லட்சம் மரங்கள் நடுவது மட்டுமே எங்கள் இலக்கு இல்லை. நட்ட மரங்களைப் பாதுகாக்கவும், நீர் ஊற்றவும் தன்னார்வலர்களை நியமித்துள்ளோம். மரங்கள் நட்ட பின்பு, ஆடு மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து காக்க வேலியும் அமைத்துவருகிறோம். இந்த மரங்கள் வளர்ந்த பின்புதான், எங்கள் இலக்கை அடைந்ததாக அர்த்தம்.  ஏராளமான இளைஞர்கள் மரம் நடுவதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். பெண்களும் இந்தப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகின்றனர்.

சேலம் இளைஞர் குழு பற்றி...?

கடந்த சில வருடங்களாக தன்னார்வலர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து சேலம் மாநகர் முழுதும் பல்வேறு சமூக சேவைகள் செய்து வந்தோம். இந்நிலையில், 'சேலத்தில் உள்ள  வீராணம் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றித் தருகிறோம் என அரசிடம் அனுமதி கேட்டபோது', 'அரசு அதிகாரிகள் உங்கள் குழுக்களுக்கு என்று ஒரு அரசு அங்கீகாரம் வாங்கிக்கொள்ளுங்கள், பிறகு அனுமதி தருகிறோம்' என்றனர். இந்நிலையில் தன்னார்வலர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து,  'சேலம் இளைஞர் குழு' என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம்தான் முறைப்படி அரசு அனுமதி பெற்றோம். அதன் பிறகு, வீராணம் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி தரப்பட்டது. நாங்களும் வீராணம் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றினோம். சேலம் மாநகர் முழுவதும் 'சேலம் இளைஞர் குழு' -வின்மூலம்  ஏராளமான சமூக சேவைகள் செய்துவருகிறோம்.

வீராணம் ஏரித் திட்டம் பற்றிக் கூறுங்கள்?

'சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகில் 60 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் வீராணம் ஏரியில், சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள சீமைக் கருவேல மரங்களை எங்கள் இளைஞர் குழு சார்பாக அகற்றினோம். இந்தத் திட்டத்துக்காக இளைஞர்கள், பெண்கள் ஏராளமானோர் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

தன்னார்வலர்கள் எப்படி ஒன்று கூடுகிறீர்கள்?

வார விடுமுறை நாள்களில் செய்யவேண்டிய பணிகள் பற்றி ஒரு வாரங்களுக்கு முன்னரே திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவோம் இந்தப் பதிவுகளைப் பார்த்து, ஏராளமான இளைஞர் தாமாகவே முன்வந்து இது போன்ற சமூக சேவைகளைச் செய்துவருகிறோம்.

இவர்கள் செய்துவரும் சமூக சேவைகள், நமக்கு மட்டுமன்றி நம் சந்ததியினருக்கும் சேர்த்துதான். இன்னும் சில வருடங்களில், சேலத்தில் நிழல் தரும் மரங்கள் சொல்லும், சேலம் இளைஞர் குழுவின் பெருமைகளை.

- லோ.பிரபுகுமார் , மாணவப் பத்திரிகையாளர்

படங்கள்:  க.மணிவண்ணன், மாணவப் பத்திரிகையாளர்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close