Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு - கறுப்புத்துணி கட்டி போராட்டம்..!

புதுச்சேரி சட்டமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 


புதுச்சேரியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே அதிகாரப் போர் உச்சகட்டத்தில் நடந்துவருகிறது. எம்எல்ஏ-க்களின் செயல்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துப்  பதிவிட்டுவருகிறார் கிரண்பேடி. அதேபோல ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களும் கிரண்பேடியை விமர்சித்துவருகிறார்கள். குறிப்பாக, அமைச்சர் கந்தசாமி, 'புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
 
 மார்ச் மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பேசுவதற்கு அனுமதி கேட்டு, சபாநாயகர் வைத்திலிங்கத்துக்குk கடிதம் எழுதியிருந்தார் கிரண்பேடி. ஆனால், சபாநாயகர் அதற்கு அனுமதி தரவில்லை. மோதல் தொடர்ச்சியாக நீடித்து வந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கிரண்பேடிக்கு எதிராகக் குரல் எழுப்பிவந்தனர். மத்திய அரசு, கிரண்பேடியைத் திரும்பப் பெற தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் எம்எல்ஏ-க்கள் குரலெழுப்பினார்கள்.


 
இப்படியான சூழலில்தான், புதுச்சேரியின் 14-வது சட்டப்பேரவையின் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டனர். அ.தி.மு.க எம்எல்ஏ-க்களான அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் உள்ளிட்டவர்கள், கவர்னர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கறுப்பு உடை அணிந்து வந்தனர். கிரண்பேடி தனது உரையைத் துவக்கிய சிறிது நேரத்தில், 'மாநில வளர்ச்சியில் அக்கறை இல்லாமல் செயல்படும் ஆளுநர், மலிவு விளம்பரத்தைத் தேடி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தொடர்ந்து அவமதித்துவருகிறார்' என்று கூச்சலிட்டவாறு கிரண்பேடியை முற்றுகையிட முயற்சிசெய்தனர்.

மேலும், 'மக்கள் பிரதிநிதிகளை அவமதித்துவரும் கிரண்பேடியே திரும்பப் போ' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவர்னர் உரைக்கும், சட்டப்பேரவையில் அமைதியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு வெளிநடப்பு செய்தனர். இதனால், பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 11.05-க்கு கிரண்பேடி தனது உரையை முடித்தார். 45 நிமிடங்கள் நடைபெற்ற கூட்டத்தொடரை, நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

படங்கள்: அ.குரூஸ்தனம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close