Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ரூ.40 கோடிக்கு விலை போகும் துணைவேந்தர் பதவி?!' - சாதியால் சீர்கெடும் அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

' அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் யார்?' என்ற கேள்விக்கு, ஆளுநர் மாளிகை இன்னமும் விடை அளிக்கவில்லை. ' துணைவேந்தர் பதவிக்காக நாற்பது முதல் அறுபது கோடி ரூபாய் வரையில் விலை பேசிக்கொண்டிருக்கிறார்கள். சாதிரீதியான அடையாளத்தை முன்வைத்து, தொழிலதிபர்கள் கூட்டணியுடன் மிகப் பெரிய அளவில் ஏலம் நடந்துகொண்டிருக்கிறது. ஆளுநர் நேரிடையாகத் தலையிட வேண்டும்' என ஆதங்கப்படுகின்றனர் கல்வியாளர்கள். 

துணைவேந்தர் பதவிக்கு மிகச் சிறந்த கல்வியாளர்களை அடையாளம் கண்டுபிடிக்க, தமிழக அரசால் 'தேடுதல் குழு' அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவினர் அடையாளம் காட்டும் மூன்று பேரில் ஒருவர் பெயரைத் தேர்வு செய்வார் ஆளுநர். இந்த மூவரில் ஒருவர், ஆளும்கட்சியின் பலத்த சிபாரிசின் அடிப்படையில் இடம் பெற்றிருப்பார். அவருக்கே அந்தப் பதவி சென்று சேரும் வகையில் ஆளும்கட்சி நிர்வாகிகள் பார்த்துக்கொள்வார்கள். " கடந்த பல ஆண்டுகளாக துணைவேந்தர் பதவிகள் ஏலமிடப்பட்டு வருகின்றன. மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் வரையில் விலை பேசப்பட்டு வந்த வி.சி பதவிகள், தற்போது உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றன" எனக் கவலையோடு விவரித்த அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், " கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே புதிய தேடுதல் குழுவை அமைத்திருக்க வேண்டும். துணைவேந்தர் பதவிக் காலம் முடியும் நேரத்தில், புதிய துணைவேந்தர் பதவிக்கு வந்துவிடுவார். இதனால், பல்கலைக்கழக நிர்வாகமும் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் நகரும்.

ராஜாராம்ஆனால், துணைவேந்தராக இருந்த ராஜாராம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன் நல்ல நட்பில் இருந்தார். அந்த அடிப்படையில், 'எனக்கு ஒரு வருடம் பதவி நீட்டிப்பு கிடைக்கும்' எனப் பேசி வந்தார். தேடுதல் கமிட்டி நியமிக்கப்படுவதையும் ஒத்தி வைத்துக்கொண்டே வந்தார். ஆனால், அரசியல் சூழல்கள் பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக இல்லாததால், ராஜாராமின் கனவு நிறைவேறவில்லை.  இதன்பின்னர், துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதை அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்ததையடுத்து, மூன்று பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. இதுதவிர, பல்கலைக்கழகத்தையும் மூன்று பேர் கொண்ட கமிட்டிதான் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கமிட்டியில் பேராசிரியர் நாராயணசாமி, தொழில்நுட்பக் கல்வி இயக்ககச் செயலர், உயர்கல்வித்துறைச் செயலர் ஆகியோர் இருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக, 'இந்தக் கமிட்டியும் கலைக்கப்பட்டுவிடும்' என்ற பேச்சு அடிபடுகிறது. ' துணைவேந்தர் பதவிக்கு, நாங்கள் விரும்புகின்றவர்தான் வர வேண்டும்' எனப் பேராசிரியர்கள் வரிந்துகட்டிக்கொண்டு களம் இறங்கியுள்ளனர். 40 முதல் 60 கோடி வரையில் கொடுப்பதற்கும் அவர்கள் தயாராக இருக்கின்றனர். 'பதவிக்கு வந்துவிட்டால், 100 முதல் 150 கோடி வரையில் சம்பாதிக்கலாம்' என, தொழிலதிபர்கள் சிலரிடம் பேசியுள்ளனர். அவர்களின் துணையோடு ஆளும்கட்சியை சரிக்கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன" என்றார் அதிர்ச்சியோடு. 

இதையடுத்து, நம்மிடம் பேசிய உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர், " துணைவேந்தராகப் பதவிக்கு வருகின்றவர்கள், 'பத்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும்' என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதி. இந்த அடிப்படையில் தனக்குத் துணைவேந்தர் பதவி கிடைக்காது என்பதை அறிந்த பதிவாளர் அலுவலக அதிகாரி ஒருவர், தனக்கு நெருக்கமான முன்னாள் துணைவேந்தர் ஒருவரைப் பதவிக்குக் கொண்டு வர முயன்றுகொண்டிருக்கிறார். அந்த முன்னாள் துணைவேந்தர் நெல்லையில் இருந்தபோது சர்ச்சையில் சிக்கியவர். அவர் பதவிக்கு வந்துவிட்டால், 'அவருக்கு அடுத்துள்ள பதவிக்கு வந்துவிடலாம்' எனக் கணக்குப் போடுகிறார் பதிவாளர் அலுவலக அதிகாரி. ' அப்படி வந்துவிட்டால், அவருக்கு அடுத்தபடியாக துணைவேந்தராகவும் பதவி வகிக்கலாம்' என நினைக்கிறார். எனவேதான், ' இதுநாள் வரையில் பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் துணைவேந்தர் பதவியில் இருந்திருக்கிறார்கள். 'இந்த' சமூகத்திலிருந்து யாருக்கும் பதவி கொடுத்ததில்லை. 'இந்த' சமூகத்துக்குப் பதவி வழங்கப்படுவதை தி.மு.கவும் எதிர்க்காது. இதற்காக எவ்வளவு பணம் தேவையோ, அதைக் கொடுக்கிறோம்' எனத் துறையின் மூத்தவரிடம் பேரம் பேசியிருக்கிறார்கள்.

' இந்தக் கோரிக்கைக்கு உயர்கல்வித்துறையின் மூத்தவர் செவி சாய்த்துவிட்டாரா?' என்பது புதிய துணைவேந்தர் பெயர் வெளியாகும்போதுதான் தெரியும். துணைவேந்தர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும். அதில், எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. தங்களுக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்துக்காக, சாதியைத் துணைக்கு அழைப்பதுதான் வேதனையாக இருக்கிறது. இதைவிடக் கொடுமை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் ஏ.சி டெக், கிண்டி கேம்பஸ் உள்பட நான்கு கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடும் பதிவாளர் அலுவலகத்தின்கீழ்தான் வருகிறது. இந்தக் கல்லூரிகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் வாரிசுகள் படிக்கிறார்கள். இவர்களது மொத்தப் பட்டியலையும் கையில் வைத்துள்ள அந்த அதிகாரி, அந்த மாணவர்களில் சுமார் ரகத்தைச் சேர்ந்தவர்களிடம், ' கல்லூரிக்கு மட்டும் நீங்கள் வந்தால் போதும். மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அப்பாவிடம் எங்கள் கோரிக்கையைப் பற்றிச் சொல்லுங்கள்' என டிமாண்ட் வைக்கிறார்கள். அனைத்து வகையிலும் தங்களுக்கு சாதகமான விஷயங்களை அலசி ஆராய்கிறார்கள் இந்தக் கல்வியாளர்கள்" என்றார் நொந்துபோய். 

இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழக துறைத் தலைவர் ஒருவரிடம் பேசினோம். " பல்கலைக்கழகத்துக்கு வழிகாட்டும் குழுவில் இருந்த பேராசிரியர் நாராயணசாமி ஓய்வு பெற்றுவிட்டதால், கீதா என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். எந்தவிதச் சிரமமும் இல்லாமல் பல்கலைக்கழகப் பணிகள் நடந்துவருகின்றன. தேர்வுக் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் புதிய துணைவேந்தரை ஆளுநர் அறிவிப்பார். மற்றபடி, சாதியை முன்வைத்து துணைவேந்தர் பதவி ஏலம் விடப்படுவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை" என்றார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close