Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 'எங்களை ஞாபகமிருக்கா முதல்வரே?... தமிழக மக்களின் மனம் திறந்த  மடல் ! 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்  ஓ.பன்னீர்செல்வம்

'மக்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்து, மக்களை மேம்படுத்தும்  ஆட்சி நடத்துவேன் '  என்று முதல்வராக பொறுப்பேற்றபோது ஓ.பன்னீர்செல்வமும், அதன் பின் எடப்பாடி பழனிசாமியும் உறுதிமொழி அளித்தார்.  இந்த உறுதிமொழியின் இன்றைய நிலை என்ன? உண்மையில் அ .தி.மு.க-வின் ஆட்சி எந்த நிலையில் உள்ளது ? தமிழக மக்கள் உணர்வோடும், ஆதங்கத்தோடும் நம்மிடம் பகிர்ந்த பலவற்றில், சிறுதுளியை மட்டும் தொகுத்து  'மக்கள் தீட்டிய மடலாக' பதிவு செய்கிறோம்.  இனி மக்களின் கண்ணீர் குமுறலை வாசிக்கலாம். 

"மாண்புமிகு முதல்வர் அவர்களே,  நலிந்திருக்கும் மக்களின்  வாழ்வை மேம்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் மக்களாகியாக நாங்கள் உங்களுக்கு  வாக்களித்தோம். ஆனால், அந்த நம்பிக்கையைப் பொய்க்கச் செய்ததே உங்கள் ஆட்சியின் சாதனையாக இருக்கிறது.  ஜெயலலிதா மறைவுக்குப்  பிறகு அரியணைக்காக உங்களுக்குள் மோதிக்கொண்டீர்கள். பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யச் சொல்லி சசிகலா முதல்வராக முயன்றார். கடைசியில் எடப்பாடி பழனிசாமியாகிய நீங்கள்  'மாண்புமிகு முதல்வர் ' ஆனீர்கள் .  இருந்தாலும் உங்களிடமிருந்து நாற்காலியைப்  பிடிக்க ஓ.பி.எஸ் அவர்களும் , முதல்வர் பதவியைத் தக்க வைக்க நீங்களும் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இருவரையும் 'பொம்மையைப் போல மத்திய பி.ஜே .பி அரசு ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது ' என்றும் 'பி.ஜே .பி-யின் பினாமி ஆட்சி ' என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் அவர்களை விமர்சிப்பதும், அவர்கள் உங்களை விமர்சிப்பதும் வாடிக்கை. எனவே இந்த விமர்சனங்களைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால் எங்களின் முன்னுள்ள முதன்மையான கேள்வி என்னவென்றால், நாற்காலியைத் தக்கவைக்க பகீரத முயற்சி எடுக்கும் நீங்கள், அதில்  சிறு பங்கேனும் தமிழக மக்களின் துயர் துடைக்க முயற்சித்துள்ளீர்களா ? என்பதுதான். இத்தனை எம்.எல்.ஏ-க்களும் சட்டமன்றம்  செல்வதற்கும், அந்தஸ்தோடு பவனி வருவதற்கும்  காரணம் மக்கள் அளித்த வாக்குகளே. உங்கள் இருத்தலுக்கும் , பதவிக்கும் காரணமான மக்களை ஏன் மறந்தீர்கள்? தாம் உண்ட கனிகளுக்கு பிராயசித்தமாக தமது எச்சங்கள் மூலம் விதைகளைத் தூவி, காலி நிலங்களை பறவைகள் வனமாக்கும். இன்றும் பறவைகளை உதாரணம் காட்டியே, பிறருக்காகச் சேவை செய்யும் அறம் குறித்துப் போதிப்பார்கள். ஒரு பறவைக்கு இருக்கும் மதி நுட்பம், ஏன் மான்புமிகுவான  உங்களுக்கு இல்லை? இன்று அலங்கரிக்கப்பட்ட உங்கள் ஆட்சிக்கு  அடித்தளமாக இருக்கும் மக்களை ஏன் மறந்தீர் ? உங்கள் அதிகாரத்தைக் காக்க அடிக்கடி டெல்லிக்கு பயணிக்கும், உங்களுக்கு எங்களைப் பற்றி நினைவிருக்காது. எனவேதான் இந்த மடலின் மூலம் உங்களிடம் பேசுகிறோம்.

மதுக்கடை எதிர்ப்பு போராட்டம்

கேளுங்கள் எங்கள் கண்ணீர் கதையை...

"உங்கள் கட்சியின் கடந்த  ஆட்சியின் போது 2015-ம் ஆண்டு  பொங்கி வந்த வெள்ளம் எங்களின் கண்ணீருக்குக் காரணமானது. இப்போதைய ஆட்சியிலோ சுட்டெரிக்கும் வறட்சி எங்கள் கண்ணீருக்கு காரணமாக இருக்கிறது. இயற்கை காரணமென்று தப்பித்துக்கொள்ள வேண்டாம் . இயற்கை இந்தளவுக்கு தமது தீவிரத்தை வெளிக்காட்டுவதற்கு யார் காரணம்? எங்கெங்கும் முறைகேடான ஆலைகள், வேதியல் கழிவுகளை, ஓடும் நதிகளில்  கலக்கும்  சட்ட விரோதம், மண்ணை மலடாக்கும் மணல் கொள்ளை , பல லட்சம் கோடிகள் வர்த்தகம் கொண்ட தாது மணல் கொள்ளை இத்தியாதி இத்தியாதி காரணங்கள் இருக்கின்றன. மணல் கொள்ளையை தடுக்க எம்.சான்ட் மணலுக்கு மாறும் முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும் அதற்குப் பின்னால் உங்கள் ஆதரவு பெற்ற  தனியார் தொழிலதிபரின் நலன் இருப்பதாகச் சந்தேகம் எழுப்புகின்றனர் பலர். இதையெல்லாம் கூட இப்போது பேசவில்லை. இதற்கெல்லாம் ஆட்சியாளர்களிடம் விடை கிடைப்பது அரிதென்று நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் உடனடியாகத் தீர்க்க வேண்டிய பிரச்னைகளில் கூட நீங்கள் கவனம் செலுத்துவதில்லையே ஏன்?  நம் தமிழ்நாட்டில், வழக்கத்தைவிட, இந்தாண்டு 62 சதவிகிதம் அளவுக்கு மழை குறைந்துள்ளது. கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது.  வழக்கத்தை விட இம்முறை அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெப்பம் தீவிரமடைந்தது. இப்போது, வெளியே தலைகாட்ட முடியாத அளவு வெப்பம் வாட்டி வதைக்கிறது.  சென்னை மாநகரத்தில்  கடும் தண்ணீர் பஞ்சம் தொடங்கிவிட்டது. சட்டசபையில் , ‘தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுவதால், குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ரூ.977 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என அறிவித்தார்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அந்த நிதியை எந்தவகையில் செலவு செய்துள்ளீர்கள்?  இன்றும் காலி குடங்களுடன் தண்ணீருக்காக வீதியில் வரிசைக் கட்டி நிற்கின்றனர் பெண்கள். கிராம பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக தொலை தூரம் பயணிக்கின்றனர் .  சென்னையில் 1947 -க்கு முன்புவரை 50,000 குளம், குட்டை நீர்நிலைகள் இருந்தன. தற்போது அது 16000 என்றளவில் சுருங்கிவிட்டது.(சுருக்கப்பட்டுவிட்டது ) 3500-க்கும் மேற்பட்ட ஏரி , நதி, கால்வாய்களில் தற்போது மிக சொற்பமான அளவில் மாற்றப்பட்டுவிட்டன.  '2040-ல் 4-ல் ஒரு குழந்தை தண்ணீருக்காக அவதிப்படும், 600 மில்லியன் குழந்தைகள் போதிய குடிநீர் பெறுவதற்காக போராடுவதிலேயே நேரத்தைச் செலவிடுவர் . பலர் மன உளைச்சல் ஆவதற்கு தண்ணீர் பஞ்சம் காரணமாக இருக்கும். இந்தாண்டு 1.4 மில்லியன் குழந்தைகள் தண்ணீர் வறட்சியால் சாவின் விளிம்பில் உலகெங்கும் தவிக்கின்றனர்' என ஐ.நா மற்றும் யுனிசெப் எச்சரிக்கை செய்கிறது.   'தெர்மாகோல்' அமைச்சர்களுக்கு இவையெல்லாம் தெரியுமா?   நீங்கள் நாற்காலிச் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் இதே கனத்தில்தான் நாங்கள் தண்ணீருக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். லாரி தண்ணீருக்காக குடத்தோடு நிற்கும் போது  ஏற்படும் தள்ளுமுள்ளு சண்டைகள் ஏராளம். சில சண்டைகள் வெட்டு குத்து பகை வரை நீண்டுமிருக்கிறது. அக்கம் பக்கம் அன்பு பரிமாறும் இயல்புக்கு சொந்தக்காரர்களான நாங்கள், இப்படி  அடித்துக்கொண்டு ஹரி படத்தில் வரும் பகையாளிகள் போல பிரிந்து நிற்கக் காரணம் நீங்கள் தான் ஆட்சியாளர்களே. யானை பசிக்கு சோளப்  பொறி போல தண்ணீர் விநியோகம் செய்தால் எப்படி? 

தண்ணீர் பிரச்சனை

'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்' என்றார் அறிஞர் அண்ணா. மக்களின் புன்னகைக்கு ஓர் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இதைத் தெரிவித்தார் . ஆனால் அவரை கட்சி பெயரை தாங்கியிருக்கும் நீங்களோ, எங்களைக் கண்ணீரில் தள்ளிவிட்டீரே.    குளிக்காமல் கப்பு  தெரியாமல் இருக்க, தினம் சென்ட் அடித்து செல்ல நாங்கள்  ஒன்றும் பணக்கார வர்க்கமில்லையே . அன்றாடம் காச்சிகள். எங்களுக்கான நியாயத்தை உங்களிடம்தானே  கேட்க முடியும் . ஏனெனில், எங்கள் குடிசைகளுக்கு வந்து எங்கள் கைகளை பிடித்தும் , காலில் விழுந்தும் வாக்கு கேட்டவர்கள்  நீங்கள்தானே . ஆனால் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின்  நீங்கள் என்ன செய்கிறீர்கள்? குடிக்கத் தண்ணீர் கேட்டால் எங்கள் குலம்  அழிய 'தன்ணீர்' திறந்துவிடுகிறீரே !  ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு , எங்கள் அண்ணன்களையும், அப்பாக்களையும் , கணவரையும் குடிகாரர்களாக மாற்றி வருகிறீர்களே !. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால், நீங்களோ நெடுஞ்சாலைகளை, மாநகராட்சி சாலைகளாக மாற்ற முயற்சி செய்கிறீர்கள்.  'மது வேண்டாம்' என கூறும் மக்களுக்கு பாதுகாப்பில்லை, ஆனால்  உயிர் பறிக்கும் மதுக்கடைகளுக்கு முன் பாதுகாப்பிற்காக காவல்துறையை நிறுத்தி வைத்துள்ளீரே. கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் போராடும் பெண்களை அறைகிறாரே டி.எஸ்.பி. 'என்றைக்காவது ஊழல் செய்த அரசியல்வாதிகளை இப்படி தண்டித்திருக்கிறீர்களா ?' என சாமுராய் படத்தில் விக்ரம் கேட்கும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. எங்கள் குடியை அழித்து உங்கள் மது 'குடி'-யை காப்பாற்ற வேண்டுமோ !

பெண்கள் போராட்டம்

இன்று தமிழகப் பெண்களின் தாலிகள் அறுக்கப்படுவதற்கு காரணம் இந்த 'டாஸ்மாக் 'தான்.  ரஷியாவை ஆண்ட ஜார் மன்னனின் ஆட்சியில் பெரும் ஆலைகளுக்கு அருகிலேயே பைன்  மரத்திலான போதை பானங்கள் விற்பனை செய்யப்படுமாம். ஆலை  தொழிலாளி தமது கூலியை வாங்கிக்கொண்டு அருகிலேயே உள்ள மது கடைகளுக்குள் நுழைந்துவிடுவாராம். அந்த மதுகடைகள்,  அந்த ஆலை முதலாளிக்கு சொந்தமானது. தம்மிடம் பெற்ற கூலியை தம்மிடம் திரும்ப பெற்றுக்கொள்ளும் கொடூர சுரண்டல் என்று வரலாறு வர்ணித்தது. அப்படியான சுரண்டலையே இன்று தமிழக அரசு நிகழ்த்துகிறதோ என்று அச்சப்படுகிறோம். மது கடைகளை திறந்துவிட்டு, உழைத்த கூலிகளை பறிக்கிறது அரசு. இதனால் வீட்டில் உலை வைக்க அரிசியில்லை. குழந்தைகளை படிக்க வைக்க இயலவில்லை.  எங்கள் குழந்தைகள் நன்றாக வளரவேண்டும் என்ற அக்கறை இந்த அரசுக்கு இல்லையா? தினம், தினம் குடித்துவிட்டு வந்து அடிக்கும் கணவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது ?  ஜார் ஆட்சியை அங்குள்ள மக்கள் திரள் புரட்சி தூக்கியெறிந்தது . இங்கும் இன்று மதுக்கடைகளுக்கு எதிராக  பெண்குலம் வீதியில் இறங்கி போராடிக்கொண்டு இருக்கிறது. அடிபட்டு, குடியால் குடிகெட்டு  அழிவதை விட, ஒரேயடியாய் போராடி சாவது மேல் என போராடிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில்  லட்சக்கணக்கான குழந்தைகள் ஆசை இருந்தும் மருத்துவம் படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீட் தேர்வுக்காக  பயிற்சி நிலையங்களில் லட்சங்கள் செலவழித்து சேர்க்குமளவுக்கு எங்கள் பொருளாதார நிலை இல்லை. நீட் விலக்கு கேட்டு சட்ட மசோதா நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது.  ஆனால் நீட் நடக்குமா ? நடக்காதா? என்று குழப்ப நிலையிலேயே வைத்திருந்து, கடைசியாக நீட் தேர்வும் நடந்தது. பெற்றவர்கள் முன்பாகவே மாணவர்களின் சட்டை கிழிக்கப்பட்டும் , மாணவிகளின் கூந்தல் அறுக்கப்பட்டும் ,  பரிசோதனை என்ற பெயரில் கொடும் வன்முறையை நிகழ்த்தியுள்ளனர்.  மாணவ, மாணவிகள் மேல் நடந்த வன்முறைக்கு , கேரளாவின் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து சி.பி.எஸ்.இ-க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் நீங்களோ நம் மாணவச் செல்வங்களுக்காக  இதுவரை சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ஏன்? 

பெண்களை தாக்கும் காவல்துறை

'மத்திய அமைச்சர்கள் மனம் கோணும்படி யாரும் பேசாதீர்கள் ' என கட்டளையிட்ட மாண்புமிகு முதல்வரிடம், மாநில மாணவ செல்வங்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு நீதி கேட்பது என்பது ஓட்டை பானைக்கு நீர் ஊற்றுவது போன்றுதான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற மூடத்தனத்தை உடைத்து இன்று ஏராளமான பெண்கள் படித்துப் பணிகளுக்குச் செல்கின்றனர். ' ஒரு பெண் நள்ளிரவில் நகைகளுடன் தனியாக பிரச்சினையில்லாமல் நடந்து போக முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திர நாள் ' என்றார் காந்தி. ஆனால் இன்று தமிழகத்தில் பகலில் நடந்து செல்லக்  கூடப் பாதுகாப்பில்லை. 7 நிமிடத்துக்கு  ஒரு முறை எங்கோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு பெண் பாதிப்புக்குள்ளாகிறார் என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது. ரயில் நிலையங்களிலும் , பேருந்து நிலையங்களிலும் பெண்ணினத்தின்  எதிர்காலம் நிர்மூலமாக்கப்படுகிறது. பெண்கள் மீதான அமில வீச்சுகளும், கொலை வெறி தாக்குதல்களும் ஆணாதிக்கத்தின் உச்சம் மட்டுமல்ல அதை கண்டுகொள்ளாத அரசின் அலட்சியமுமல்லவா. நாள்தோறும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து வருகின்றன. அன்று நீதி கேட்டு கண்ணகி மதுரையை எரித்தாள் . இன்று பெண்ணினம் நீதி கேட்டு வீதிகளில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மதுக்கடைகளுக்கு எதிரான  போராட்டம், தமிழ்நாட்டு மக்கள்  மீது சுமத்தப்பட்ட அத்தனை அடிமை தளைகளுக்கும்  எதிரானதே. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தல் கூடாது என்பது தமிழர் மரபு. வாக்களித்த மக்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதே மாண்புமிகுக்களுக்கு அழகு. நீங்கள் மட்டுமல்ல, இனி வரும் ஆட்சியாளர்களும் இனியாவது இதை உணர்வார்களா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close