Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அதிர்ச்சியில் முதல்வர்... ஆறுதல் சொன்ன அமைச்சர்கள்'  - ரெண்டு டீ குடிக்க, ரெண்டேகால் மணிநேரம்!  #VikatanExclusive

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வருக்கு, அமைச்சர்கள் ஆறுதல் சொன்னதோடு சில முடிவுகளையும் அதிரடியாக எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் தலைவிரித்தாடுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக்குக் 'கெடு' வைக்கும் வேலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுவருகின்றனர். கட்சியில் செல்வாக்கான மூத்த நிர்வாகிகள், தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதிர்ச்சிவைத்தியம் கொடுத்துவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், 20 ஆதிதிராவிட எம்எல்ஏ-க்கள் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து, தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ தலைமையில், அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 11 பேர் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் சட்டசபையைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து ஊழியர்கள், அரசு ஊழியர்கள், டாஸ்மாக் விவகாரம் ஆகியவை, அரசுக்கு பெரும் சவாலாக உள்ளன. 
இதைத் தவிர, ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அவ்வப்போது குடைச்சலைக் கொடுத்துவருகின்றனர். இதுதொடர்பாக ஆலோசனை நடத்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் முடிவுசெய்தனர். சென்னை ராயபேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை 5.45 மணியளவில் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அவருக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை. அடுத்து, மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என விரல்விட்டு எண்ணும் வகையிலேயே நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, சில அதிரடி முடிவுகளை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டம்

 
இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகையில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பெரும்பாலான அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவில்லை. டி.டி.வி.தினகரன் ஆதரவு மாவட்டச் செயலாளர் வெற்றிவேலைத் தவிர, சென்னையில் உள்ள மற்ற மாவட்டச் செயலாளர்கள் வந்திருந்தனர். அதுபோல, முதல்வரை ஆதரிக்கும் அமைச்சர்களும் எம்எல்ஏ-க்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முகத்தில் உற்சாகம் இல்லை. அமைதியாகவே கூட்டத்தில் இருந்தார். அதைக் கவனித்த மூத்த அமைச்சர் ஒருவர், முதல்வருக்கு ஆறுதல் சொன்னதோடு, சில ஆலோசனைகளையும் தெரிவித்தார். அந்த முடிவுக்கு, கூட்டத்தில் பங்கேற்றவர்களும் சம்மதம் தெரிவித்தனர். 


அதாவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேலைசெய்யும் கட்சியின் நிர்வாகிகளை எப்படிச் சமாளிக்கலாம், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை எப்படிக் கையாளலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து செயல்படும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன என்று தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த மூத்த அமைச்சர் ஒருவர், தற்போதுள்ள சூழ்நிலையில் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது. நமக்கு எதிராகச் செயல்படுபவர்களிடம் பேசிப்பார்ப்போம். அவர்களுக்குப் பின்னாலிருப்பவர்களைக் 'கவனித்தால்' இவர்கள் அமைதியாகிவிடுவர் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். (கவனிப்பு என்பது சோதனையாம்)"என்றார்.  


கூட்டம் 8 மணிவரை நீடித்துள்ளது. ரெண்டே கால் மணிநேர இடைவெளியில், ரெண்டு டீ மட்டும் பரிமாறப்பட்டுள்ளது. ரெண்டு டீ குடித்த உற்சாகத்தில் பேசிய எம்பி ஒருவர், விரைவில் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைந்துவிட்டால், பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பக்கத்திலிருந்த அந்த மூத்த அமைச்சர், அவரது காதில் அடிக்கடி ஏதையோ கிசுகிசுத்துக்கொண்டிருந்தார். அதை அமைதியாக முதல்வர் கேட்டார். அதன்பிறகே, ஆலோசனைக் கூட்டத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர். 


கூட்டம் முடிந்து வெளியே வந்த வைத்தியலிங்கம் எம்பி, "இரண்டு அணிகளும் இணையும் நம்பிக்கை உள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்பது தொடர்பான பிரமாணப்பத்திரங்களைப் பெறுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது"என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close