Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அரசுக்கும்.. மக்களுக்கும் மத்தியில் எங்கள் உயிர் ஊசலாடுகிறது!' -விசும்பும் டாஸ்மாக் ஊழியர்கள்

டாஸ்மாக்

‘டாஸ்மாக் வேண்டாம்’ என்ற அழுத்தமான கோரிக்கையோடு தமிழகம் முழுக்க வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்களால், நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டம் என்பது  தமிழ்நாடு இதுவரையிலும் பார்த்திராத புதுவகையான போராட்டக் களம்.

சேலத்தில், தாசில்தார் காலில் விழுந்து 'டாஸ்மாக் வேண்டாம்' என்று ஒரு பெண் கதறுகிறார்; சென்னையில் 7 வயது சிறுவன் வீதிக்கு வந்து போராடுகிறான்; காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை துவம்சம் செய்கிறார்கள்; தர்மபுரியைச் சேர்ந்த அனுமந்தபுரத்தில், டாஸ்மாக் கடையைச் சூறையாடிய பெண்கள் ஒவ்வொரு பாட்டிலையும் தனித்தனியாக கையில் எடுத்து உடைப்பதை பார்க்கும்போது தெரிகிறது... ஒவ்வொரு பெண்ணும் உள்ளுக்குள் எவ்வளவு ஆத்திரங்களை ஆதங்கங்களை அடக்கி வைத்திருக்கிறார் என்று.  “உன்னால்தானே என்புருஷன் செத்தான். உன்னால்தானே என் குடும்பம் குட்டிச்சுவராகப் போச்சு. உன்னால்தானே என் புள்ளையோட எதிர்காலம் நாசமாச்சு” என்று உரக்கக் கத்தியபடி பெண்கள் உடைக்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பின்னால் ஓராயிரம் சோகக்கதைகள் ஒளிந்திருக்கின்றன. 

டாஸ்மாக்

 

''மூடிய கடைகளை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது அரசு. கொந்தளித்துக் கிடக்கும் மக்களோ எந்தப் பக்கம் போனாலும்  அடித்து விரட்டுகிறார்கள். இதற்கிடையில் எங்கள் உயிர் ஊசலாடுகிறது'' என்று புலம்புகிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரிடம், 'எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்' என்று மனு கொடுத்திருக்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர். என்ன பிரச்னை? என்று டாஸ்மாக் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்... 

வேலை பாதுகாப்பு கருதி பெயர் வெளியிட விரும்பாமல் பேசியவர்கள், “மக்களின் ஜனநாயகரீதியான போராட்டங்களை நாங்கள் மனதார மதிக்கிறோம். அவர்களின் கோபம் எங்களுக்கு நன்றாகவே புரிகிறது. ஏனென்றால், மக்களைவிட  அனுதினமும் அதிகமான குடிகாரர்களை நாங்கள் எதிர்நோக்குகிறோம். இதுமட்டுமல்ல... எங்கள் டாஸ்மாக் ஊழியர்களே நிறையபேர்  மதுவுக்கு அடிமையாகி இறந்து போயிருக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களும் அனாதையாக நிற்கின்றன. எனவே, மதுவால் ஏற்பட்டிருக்கிற இழப்பு என்பது ஈடு செய்யமுடியாதது என்பதை நாங்களும் முழுமையாக உணர்ந்தே இருக்கிறோம். முன்பெல்லாம் வீதிக்கு ஒரு குடிகாரர் இருந்தார். மக்கள் அவனை ஒதுக்கி வைத்திருந்தார்கள்.  பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இப்போது  வீட்டுக்கு மூணு குடிகாரர்கள் இருக்கிறார்கள். குடிக்காதவர்களை குடிகாரர்கள் ஒதுக்கி வைக்கும் அளவுக்கு குடி சகஜமாகிவிட்டது. அரசாங்கம்தான் சாராயத்தை சத்து டானிக்போல  டார்கெட்மேல் டார்கெட் வைத்து விற்கச் சொல்கிறது. 15 வயசு பையன்கூட டாஸ்மாக் கஸ்டமராகி இருப்பதற்கு இதுதான் காரணம். கேரளாவில், 18 வயதுக்கும் குறைவானவர்கள் சரக்கு வாங்கவே முடியாது. மேலும், மது விற்பனைக்காக அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில், கேரளாவின் எந்த இடத்திலும் சரக்கு கிடைக்காது. ஆனால்,  இங்கு  டாஸ்மாக் திறந்திருக்கும்போதாவது டாஸ்மாக்கில் மட்டும்தான்  சரக்கு கிடைக்கும். இரவு 10 மணிக்குப் பிறகுதான் மூலைக்கு மூலை கிடைக்கிறது. இதெல்லாம்தான் தமிழ்நாட்டு ஆண்கள்  குடிவெறியர்களாக மாறியதற்கும், பெண்கள் இவ்வளவு தீவிரமாக வெகுண்டு எழுந்ததற்கும் காரணம்'' என்று விளக்கம் கொடுத்தவர்கள்... விஷயத்துக்கு வந்தார்கள்.

டாஸ்மாக்

''மதுவுக்கு எதிரான கோபத்தை டாஸ்மாக் ஊழியர்கள் மீது காட்டுவதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. பல இடங்களில் டாஸ்மாக் கடையை உடைக்கும்போது டாஸ்மாக் ஊழியர்களையும் இழுத்துப் போட்டு அடிக்கிறார்கள். பல இடங்களில் எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. யாராவது வந்து அடிச்சிருவாங்களோன்னு ஒவ்வொரு நிமிஷமும் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கோம். நாங்கள் என்ன பாவம் செய்தோம்?  நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்ட கடைகளை வேறு இடத்தில்  திறக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. அரசு சொல்வதை அதிகாரிகள் கேட்டுத்தானே ஆகவேண்டும்? மக்கள் ஒருபக்கம் மதுக்கடைகளை மூடுவதற்காக வீதியில் போராடிக்கொண்டிருக்க, அரசாங்கமோ மதுக்கடைகளைத் திறக்க வேறு இடங்களைத் தேடச் சொல்லி எங்களை வீதிவீதியாக அலைய வைக்கிறது. இந்தச் சூழலில், எங்கள் மனநிலை என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்?

நீங்கள் போராடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், வன்முறையைக் கையில் எடுக்காமல் போராடுங்கள். மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தில் எங்களுக்கும் மாற்றுக்கருத்து இல்லைதான். உங்களுக்கு வேற வேலை தர்றோம்னு அரசாங்கம் சொல்லிடுச்சின்னா அடுத்த நிமிஷமே கடையை இழுத்துப் பூட்டிவிட்டு வந்துகிட்டே இருப்போம். எங்களுக்கு மட்டுமென்ன எல்லாரையும் குடிகாரனாக்கணும்னு ஆசையா என்ன? நாங்களும் மனுசங்கதான்னு மக்கள் உணரணும்'' என்றவர்கள் கடைசியில் ஒரு தகவலைச் சொல்லி முடித்தார்கள். ''இத்தனை மதுக்கடைகளை மூடியதால், குடிகாரர்கள் குடிக்காமல் இருக்கிறார்கள் என்றோ, டாஸ்மாக் சேல்ஸ் குறைந்துவிட்டது என்றோ தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள். பத்து கடையில் ஆன சேல்ஸ் இப்போது ஒரே கடையில் நடக்கிறது. அந்தக் கடையில் குவியும் கூட்டத்தைப் பார்த்து அந்தப் பகுதி மக்கள் அச்சமடைகிறார்கள். இது வேறுவிதமான விளைவுகளை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது!''


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close