Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘வள்ளுவரின் குறள், டார்வினின் விதியைவிட மேலானது’ - குமரி அனந்தன்

நாகர்கோவிலில், அனைத்துலக திருக்குறள் மாநாடு இன்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, திருவிதாங்கூர் சமஸ்தான மகாராணி கௌரி பார்வதி பாய் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். விழாவில் வி.ஜி.சந்தோஷம், குமரிஅனந்தன் போன்றோர் கலந்துகொண்டு பேசினார்கள். திருக்குறள் மாநாட்டுக்கு மகாராணி கௌரி பார்வதி பாய் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சில தமிழ் அமைப்புகள் கண்டன போஸ்டர்களை நேற்று நாகர்கோவில் பகுதிகளில் ஒட்டினர். இன்று மகாராணி கௌரி பார்வதி பாய்க்கு எதிர்ப்பு தெரிவிக்க, மாநாட்டு வளாகத்துக்குள் நுழைய முயன்ற  `நாம் தமிழர்' கட்சியினர் ஒன்பது பேரை, போலீஸார் தடுத்துத் திருப்பி அனுப்பினர்.

நிகழ்ச்சியில் கௌரி பார்வதி பாய் பேசும்போது, ``இந்த மாநாட்டுக்கு நான் வந்தது எனக்குக் கிடைத்த வரம். 1956-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து குமரி மாவட்டம் பிரிந்து, தமிழகத்தோடு இணைந்தது.1956-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆரல்வாய்மொழி செக்போஸ்ட் வரை உள்ள பகுதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டதாக இருந்தது. நான்  வருடத்துக்கு ஒருமுறை பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள அம்மனைத் தரிசிக்க வருவேன். கன்னியாகுமரி மாவட்டத்துக்குப் பல வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. இப்போது அனைத்துலக திருக்குறள் மாநாடும் இங்கேதான் நடக்கிறது. எனக்குத் தமிழ் புரியும்; பேசுவதுதான் கடினம். எனது மகனுக்குத் தமிழ் தெரியும். தமிழில் நன்றாகப் பாடுவான். யசோதாவின் மகனாகக் குறும்புக்கார கண்ணன் பாடல் முதல் ஆண்டாள் திருப்பாவை வரை தெரியும்.

திருக்குறள், பல தத்துவங்களை உள்ளடக்கியது. எங்களுடைய அரண்மனை நூலகத்தில் முதலில் விவிலியமும், இரண்டாவதாக திருக்குறளும்தான் உள்ளன. திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்தார் என்றும், மதுரையில் பிறந்தார் என்றும், இங்குள்ளவர்கள் குமரியில் பிறந்தார் என்றும் சொல்கிறார்கள். அவர் எங்கு பிறந்தாலும் எல்லா இடங்களிலும் குறள் மணம் பரவ வேண்டும். ரிக் வேதம் 'அ' வார்த்தையில் தொடங்குகிறது. திருக்குறளும் 'அ' வார்த்தையில் தொடங்குகிறது. குழந்தையும் முதலில் 'அ' அம்மா என்றுதான் பேசத் தொடங்குகிறது. என்னைக் கவர்ந்த 291-வது குறள், நீர் பிரச்னை குறித்துச் சொல்கிறது. அதுதான் மக்களின் இப்போதைய முக்கியமான பிரச்னை. பல பகுதிகளில் நீர் கொடுக்க மறுக்கிறார்கள். மொழி, மக்களைப் பிரிக்கிறது. எல்லா மொழிகளையும் நாம் மதிக்க வேண்டும். ஒற்றுமையுடன் வாழ வேண்டும். திருக்குறள் இதைத்தானே வலியுறுத்துகிறது'' என்று பேசினார்.

 

திருக்குறள்

அடுத்து வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி.சந்தோஷம் பேசும்போது...


``மக்கள் குறள் வழி நடக்க வேண்டும். வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கம் மூலம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நாங்கள் திருவள்ளுவர் சிலையை அமைத்து, அவரின் புகழைப் பரப்பிவருகிறோம். குறள் இல்வாழ்க்கையைக் குறித்துத் தெளிவாகப் பேசுகிறது. `2000 ஆண்டுகளுக்கு முன்பே குறளை எப்படி அற்புதமாக எழுதினார்?' என ஆச்சர்யப்படவைக்கிறது. திருக்குறள், உலகில் அதிகமான மொழிகளில் அச்சிடப்பட வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். இந்த மாநாட்டில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க, தீர்மானம் போட வேண்டும். வள்ளுவம் வழி வாழ்வோம். வையத்துள் உயர்ந்து நிற்போம்'' என்றார்.

பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் பேசும்போது...

``உலகம் முழுவதும்  தமிழ்தான் இருந்தது. ஆனால், இப்போது அது இல்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரிமாவட்டம் இருந்தபோது, நேசமணி தலைமையில் தமிழ் உணர்வாளர்கள் போராடி ரத்தம் சிந்தி, தமிழகத்தோடு குமரியை இணைத்தனர். இன்று தமிழை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் நம்பக் கூடாது. `தமிழ் வாழ்க' எனச் சொல்வதை விட்டுவிட்டு, `தமிழன் வாழ்க' எனச் சொல்ல வேண்டும்'' என்றார்.

குமரி அனந்தன் பேசும்போது...

``திருக்குறள், பனை ஓலையில் எழுதப்பட்டது. அது வாடாது. அதுபோல குறளும் வாடவில்லை. எக்காலத்திலும் திருக்குறள் மறைந்துவிடாது. வள்ளுவத்தை வைத்துக்கொண்டு உலகை நம் வசம் கொண்டுவர முடியும். குறளைத் தேசிய நூலாக மாற்ற வேண்டும். வள்ளுவரின் குறள், டார்வினின் விதியைவிட மேலானது. மிகச்சிறிய அளவு முதல் பல அளவுகளில் குறள் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதுதான் திருக்குறளின் அற்புதம். குறளை உலகமயமாக்கம் செய்ய வேண்டும். பாரதி சொன்னதுபோல பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். தமிழிலிருந்தும் பல நூல்களை மொழிபெயர்க்க வேண்டும். தேன் தமிழைப் பரப்ப வேண்டும். உலகில் 6,600 மொழிகள் இருக்கின்றன. அத்தனை மொழிகளிலும் திருக்குறளைக் கொண்டு செல்ல வேண்டும். மாணவர்கள் கல்வியைத் தாய்மொழியிலும், உலகப் பொதுமொழியிலும் கற்க வேண்டும். கணியன் பூங்குன்றனார் சொன்ன 'யாதும் ஊரே  யாவரும் கேளீர் ' என்பதை வசப்படுத்துவோம்'' என்றார்.

படங்கள்: ரா.ராம்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close