Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுக்கடைக்கு எதிரில் அடுப்புமூட்டிய பெண்கள்! #BanTasmac

மதுக்கடை

மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. மது போதையில் வரக்கூடிய குடும்பத் தலைவர்கள் மற்றும் உறவினர்களால் நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாவது பெண்களே என்பதால், மதுக்கடைகளுக்கு எதிராக அவர்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. மதுக்கடைகளை மூட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டதால் பெண்களும் குழந்தைகளும் பெரிதும் மகிழ்ந்தனர். ஆனாலும், மூடப்பட்ட கடைகளை அருகிலுள்ள மாற்று இடத்தில் திறக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. மேலும் விற்பனையில் இருக்கும் கடைகளையும் அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கான போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் நடப்பதுடன், மதுக்கடைகளைப் பெண்களே அடித்து உடைத்து அகற்றும் கிளர்ச்சியும் வெடித்து வருகிறது.

நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள வைத்திலிங்கபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில், டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்த பல கடைகள், நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டதால் குடிமகன்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து மொய்க்கத் தொடங்கினர். இதனால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டன. மதுக்கடை வழியாகச் செல்லும் பெண்களிடம் வம்பு இழுப்பதையும் குடிமகன்கள் வாடிக்கையாக வைத்து இருந்தனர். இது பெண்களை அச்சப்படுத்தியது. இதனால், இந்த மதுக்கடையை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

தங்கள் கோரிக்கை கேட்பாரற்று கிடப்பதை உணர்ந்த பெண்கள், டாஸ்மாக் மதுக்கடை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையின் முன்பாக சாமியானா பந்தல் அமைத்து குழந்தைகள், வயதானவர்களுடன் வந்து அமர்ந்த பெண்கள், மதுக்கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கடந்த மூன்று நாள்களாக இந்தப் போராட்டம் தொடர்கிறது.

பின்னர், அங்கேயே அமர்ந்து பீடி சுற்றும் தொழிலைச் செய்கின்றனர். மதிய உணவு அங்கேயே தயாரிக்கப்படுகிறது. அதை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். அமைதியான முறையில் நடைபெறும் இந்தப் போராட்டம் அரசின் காதுகளை எட்டும் எனப் பெண்கள் நம்புகின்றனர். ஆனால், போராடும் பெண்களிடம் பேச்சுவாரத்தை நடத்தக் கூட அதிகாரிகள் முன்வரவில்லை.

மதுக்கடை

பெண்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வகையில், போராட்டத்தைத் தொடர்வது என முடிவெடுத்திருக்கின்றனர். இது குறித்து, வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்த தங்கம் என்பவரிடம் பேசியபோது, ‘’சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்த கடைகள் அகற்றப்பட்டதால், இந்தக்கடைக்கு மாலை நேரங்களில் எக்கச்சக்கமான கூட்டம் வருகிறது. மது போதையில் தலை தெறிக்கும் வேகத்தில் பைக்கில் செல்கிறார்கள். வெளியூர்களிலிருந்து வரக்கூடிய இளைஞர்கள் பைக்கில் செல்லும்போது விபத்து ஏற்படுத்துகிறார்கள். அடிக்கடி அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு உருளுகிறார்கள். இரவு நேரங்களில் அவர்களின் அடாவடிகளுக்கு அளவே இல்லாமல் போகிறது. மது போதையில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கூட இந்தப் பகுதிக்கு வருவதில்லை. அதனால் நாங்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைமை உள்ளது. அதனால்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கடையை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார் ஆவேசமாக.

தொடர்ந்து பேசிய பரிபூரணம், “இந்த மதுக்கடையால் தினமும் நாங்கள் அவதிப்படுகிறோம். மதுபோதையில் உடைகள் கலைந்து அலங்கோலமாக பலர் விழுந்து கிடக்கிறார்கள். இந்த மதுக்கடையிலிருந்து 700 மீட்டர் தூரத்தில் பள்ளிக்கூடம் இருக்கிறது. மதுக்கடை வழியாக முந்நூறுக்கும் மேற்பட்டோர் தினமும் செல்கிறார்கள். அவர்களைப் போதைக் கும்பல் வம்புக்கு இழுக்கிறது. கேலி கிண்டல் செய்வதால் பெண் குழந்தைகள் அந்த இடத்தைக் கடக்கவே அச்சப்படுகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவிகள் இந்தப் பாதையில் செல்லவே பயப்படுகின்றனர்.

இப்படி ஒரு மதுக்கடை தேவை தானா? பொதுமக்களை சிரமப்படுத்தி அதிகாரிகள் என்ன சாதிக்கப் போகிறார்கள்? அரசின் கவனம் பொதுமக்கள் மீது இருக்க வேண்டுமே தவிர வருமானத்தின் மீது இருக்கக் கூடாது. கடந்த மூன்று நாள்களாக நாங்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இங்கேயே பந்தலிட்டு குடும்பத்துடன் அமர்ந்து இருக்கிறோம். ஆனால், ஓர் அதிகாரி கூட வந்து பார்க்கவில்லை. நாங்கள் என்ன அந்த அளவுக்கு அரசுக்கு வேண்டாதவர்களா?

இந்தப் பகுதியில் மதுக்கடை வந்த பிறகு பல ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி வேலைக்குப் போவதையே நிறுத்தி விட்டார்கள். பெண்கள் பீடி சுற்றிச் சம்பாதிப்பதையும் அடித்து உதைத்துப் பிடுங்கிச் செல்லும் அவலமும் பல குடும்பங்களில் நடக்கிறது. பல இளைஞர்கள் குடிக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களும் மதுக்குடிக்கும் அவலமும் நடக்கிறது. அதனால்தான் இந்த மதுக்கடையை இழுத்து முட வேண்டும் என்று சொல்கிறோம். அதிகாரிகளாகக் கடையை மூடாவிட்டால் பெண்களே ஒன்று சேர்ந்து மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார் கோபத்துடன்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய பெண்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. பக்கத்து கிராமங்களிலிருந்து பெண்கள் குடும்பத்துடன் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அத்துடன், சமையலுக்குத் தேவையான அரிசி, காய்கனிகளை பொதுமக்கள் தரப்பிலிருந்து இலவசமாகவே கிடைத்து வருகிறது. சிலர் பழங்களை வாங்கி வந்து கொடுக்கிறார்கள். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டு ஆடுகளைக் கொடுத்து அசைவ விருந்து படைத்து உள்ளார். இப்படியாக வீரியம் குறையாமல் தொடர்ந்து நடக்கும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வழி தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

தேர்தலில் மக்களின் தீர்ப்புக்குத் தலை வணங்குவதைப் போல இந்த மதுக்கடை எதிர்ப்பிலும் மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளலாமே!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close