Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“எனக்காக ஸ்பெஷலா எக்ஸாம் வைச்சாங்க... ஏன் தெரியுமா?” குழந்தை நட்சத்திரம் வைஷ்ணவி

குழந்தை நட்சத்திரம் ஶ்ரீவைஷ்ணவி

டுத்தடுத்து முன்னணி ஹிரோக்கள் பலருடன் இணைந்து நடித்து வருகிறார், ஶ்ரீவைஷ்ணவி (எ) வைஷ்ணவி தமிழ் சினிமா குழந்தை நட்சத்திரங்களில் முக்கியமானவரான இவர், படிப்பு, நடிப்பு இரண்டிலும் அசத்தலாக வளம்வருகிறார். புன்னகையுடன் உற்சாகமாக பேசத் தொடங்குகிறார்.

"என்னோட மூன்றரை வயசுல, நடிகர் சூர்யா அங்கிள் நடிச்ச ஒரு பேபி ஆயில் விளம்பரத்தில் நடிச்சேன். ஆனா, அதுல என்னோட ஃபோர்ஷனையே கட் பண்ணிட்டாங்க. செம ஃபீலிங் ஆயிடுச்சு. அடுத்து, பூர்வீகா மொபைல், காஸ்மெடிக்ஸ், டிரஸ் விளம்பரங்களில் நடிச்சேன். நான் நடிச்ச விளம்பரத்தை நானே டிவியில் பார்க்கிறது ரொம்ப பிடிக்கும். அப்போதான் டைரக்டர் மிஸ்கின் சாரின் 'முகமூடி' படத்துக்கு சைல்டு ஆர்டிஸ்ட் தேவைனு தெரிஞ்சு என் போட்டோவை அம்மா அனுப்பிவெச்சாங்க. ஆடிஷன்ல அவங்க சொன்ன மாதிரி டயலாக் பேசி நடிச்சேன். என்னை செலெக்ட் பண்ணினாங்க. ஹீரோயினுக்கு (பூஜா ஹெக்டே) அக்கா பொண்ணு கேரக்டர். தினமும் நைட்டுலதான் ஷூட்டிங் நடக்கும். ஜீவா அங்கிள், பூஜா அக்கா எல்லோர்கூடவும் ஜாலியா விளையாடி, ஃப்ரெண்ட் ஆகிட்டேன். நடிக்க வந்திருக்கோம், சரியா செய்யணும் என்கிற பயமே இல்லை. ஆனா, படம் ரிலீஸ் ஆகுறப்போ, 'நம்ம நடிப்பைப் பற்றி ரசிகர்கள் என்ன சொல்லுவாங்களோ'னு ரொம்பவே பயந்தேன். 'உன் நடிப்பு சூப்பர்'னு எல்லோரும் பாராட்டின பிறகுதான் பப்ளிக் எக்ஸாம்ல பாஸ் ஆன மாதிரி நிம்மதி ஆச்சு'' என்று சிரிக்கிறார் வைஷ்ணவி. 

முகமூடி படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டர் பாண்டிராஜ், 'பசங்க 2' படத்துக்கு அழைத்திருக்கிறார். ''ஆரம்பத்துல அந்த நயனா கேரக்டர்ல நடிக்க எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. நிஜத்துல நான் அதிகம் குறும்பு செய்யமாட்டேன். ஆனால், அந்த கேரக்டர் பயங்கர சேட்டைப் பண்ணி, பேரண்ட்ஸ் ஹாஸ்டலில் சேர்க்கிற அளவுக்குப் போகும். 'நான் நல்ல பொண்ணு. என்னை எதுக்கு சும்மா சும்மா அழச் சொல்றீங்க?'னு பாண்டிராஜ் சார்கிட்ட கேட்டேன். அதனால், 'உங்க பொண்ணு முழுசா படத்துல நடிக்கிறது கஷ்டம்'னு அம்மாகிட்ட சொன்னார். எல்லோரும் என்னை சமாதானம் செய்து முழுக் கதையைச் சொல்லி நடிக்க வெச்சாங்க. 

குழந்தை நட்சத்திரம் ஶ்ரீவைஷ்ணவி

கொஞ்ச நாளிலேயே நயனா கேரக்டரில் ஆர்வமா நடிக்க ஆரம்பிச்சுட்டேன். அந்தப் படத்தில் நடிச்ச யாருக்குமே அவங்க நடிச்சதைப் போட்டு காட்டாத டைரக்டர் சார், நான் நடிச்ச சீன்ஸை மட்டும் காண்பிப்பார். தப்பா நடிச்சிருந்தா மறுபடியும் நடிக்கட்டுமான்னு கேட்டு நடிப்பேன். என்னோட பேரண்ட்ஸா நடிச்ச கார்த்திக் அங்கிள், பிந்து மாதவி அக்காவும் என்னை நிஜ பொண்ணு மாதிரி பார்த்துகிட்டாங்க. பிந்து அக்கா எனக்குக் கொடுத்த பாபி டாலை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன். சூர்யா அங்கிள், அமலா பால் ஆன்ட்டியும் என்கூட ஜாலியா சிரிச்சுப் பேசி, விளையாடுவாங்க. பெரிய ஹிரோ, ஹீரோயின்ஸ் என்கிற எண்ணமே இல்லாமல் ஃபேமிலி மெம்பர்ஸ்கூட இருக்கிற மாதிரியே ஃபீல் பண்ணினேன். முக்கியமான விஷயம், ஷூட்டிங்ல அடிக்கடி பசிக்கிதுன்னு ஏதாச்சும் கேட்டுகிட்டே இருப்பேன். என்னோடு ஷூட்டிங் வரும் பாட்டி சிவகாமி, நான் சாப்பிட கேட்குறதுக்கு முன்னாடியே சாப்பிட எதாச்சும் கொடுத்துகிட்டே இருப்பாங்க. அதைப் பார்த்து ஜாலியா கிண்டல் செய்யும் சூர்யா அங்கிள், 'நீ வெரி லக்கி கேர்ள். இந்த மாதிரி பாட்டி கிடைச்சுதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும்'னு சொன்னார். அந்தப் படத்துக்காக ரொம்ப நாள் நடிச்சதால, சரியா ஸ்கூலுக்குப் போக முடியலை. எங்க ஸ்கூலில் யாருக்குமே ரீ எக்ஸாம் வைக்க மாட்டாங்க. ஆனால், எனக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்து எழுத வெச்சாங்க'' என்கிற வைஷ்ணவி, திரைக்கு வரவிருக்கும் தன் புதிய படங்களைப் பற்றி சொல்கிறார். 

குழந்தை நட்சத்திரம் ஶ்ரீவைஷ்ணவி

“ஜீவா அங்கிள் நடிச்சிருக்கும் 'கீ' (Kee) படத்திலும், விஜய் சேதுபதி அங்கிளின் 'விக்ரம் வேதா' படத்திலும் தங்கச்சி கேரக்டரில் நடிச்சிருக்கேன். விஜய் சேதுபதி அங்கிள் செம ஜாலி டைப். என்கிட்ட காமெடி பண்ணிகிட்டே இருப்பாரு. சும்மா இருக்குறப்போ என்கூட விளையாடுவார். அடுத்து, மிஸ்கின் சாரின் 'துப்பறிவாளன்' படத்திலும், விஷால் அங்கிளின் படத்திலும் நடிச்சுகிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நாளில என்னோட குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் விஷால் அங்கிளும் வந்துடுவாரே" என்கிறார் குஷியாக. 

"ஷூட்டிங்னாலே புதுப்புது டிரெஸ் போடலாம், நல்லா மேக்கப் பண்ணிக்கலாம், வெரைட்டியான சாப்பாடு கிடைக்கும். ஷூட்டிங் போக வீட்டுக்கே கார் வரும். இதனாலே ஷூட்டிங்னா செம குஷி வந்துடும். இப்போ ஃபோர்த் ஸ்டாண்டர்டு முடிச்சுட்டேன். எதிர்காலத்துல பைலட், டீச்சர், ஹீரோயின்னு மூணு ஆசை இருக்குது. இதுல எது நடந்தாலும் சந்தோஷம்தான்" என புன்னகைக்கிறார் வைஷ்ணவி. 

படங்கள் : ரா.வருண் பிரசாத்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close