Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தண்டபாணியே பணத்தை எங்களிடம் கொடுத்தார்!' - போலீஸ் சொல்லும் எஃப்ஐஆர் கதை #VikatanExclusive

ரியல் எஸ்டேட் அதிபர் தண்டபாணி வீட்டிலிருந்து 45 கோடி பழைய ரூபாய் நோட்டுக்களை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் பதிவுசெய்த எஃப்ஐஆரில்... சோதனையின்போது தண்டபாணி, தானே முன்வந்து தன் வீட்டில் மறைத்துவைத்திருந்த பணத்தைக் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 சென்னை சூளைமேடு, ஜக்காரியா காலனி, 2-வது தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி. ரியல் எஸ்டேட், எம்.பி.ராமலிங்கம் அண்கோ என்ற பெயரில் கடை நடத்திவந்தார். இவரது வீட்டில், செல்லாத 1,000 மற்றும் 500 பழைய ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அதிரடி சோதனை நடத்தி 44 கோடியே 79 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தண்டபாணியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 


இந்த வழக்கு தொடர்பாக, கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு, முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பதிவுசெய்துள்ளார். அதில், 'தண்டபாணி, தானே முன்வந்து, தன்வீட்டில் மறைத்துவைத்த 1,000 மற்றும் 500 செல்லாத ரூபாய் நோட்டுக்களை எடுத்து ஆஜர்படுத்தினார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிகள், பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 எஃப்.ஐ.ஆர். விவரம் பின்வருமாறு: "கடந்த 17ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், தி.நகர், துணை கமிஷனருக்கு கிடைத்த தகவலின்படி தி.நகர் உதவி கமிஷனர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கிரி, சப்-இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன் மற்றும் போலீஸார் கண்ணன் ஆகியோர் கதவு எண் 10/21ல் ஜக்காரியா காலனி, இரண்டாவது தெரு, சூளைமேடு என்ற விலாசத்துக்குச் சென்றனர். அந்த வீட்டில், சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. சைதாப்பேட்டை நீதிமன்ற அனுமதியுடன், சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினோம். சோதனையின்போது, தண்டபாணி தானே முன்வந்து தன் வீட்டில் மறைத்து வைத்ததாக 1,000, 500 ரூபாய் செல்லாத நோட்டுக்களை எடுத்து ஆஜர்படுத்தினார். பணம் யாருடையது என்று கேட்டபோது, அவர் தன்னுடையது இல்லை என்று மட்டும் பதில் சொன்னார். இது எப்படி வந்தது, செல்லாத ரூபாய் நோட்டுகளின் உரிமையாளர் யார்... எதற்காக பணம் வந்தது? என்ற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். மேலும், செல்லாத ரூபாய் நோட்டுகள் தொடர்பாக, சரியான முகாந்திரம் மற்றும் அதை வைத்திருந்த விதம், சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, செல்லாத ரூபாய் நோட்டுக்களை சட்டவிரோதமான செயலில் ஈடுபடுத்த வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றின. இதனால் ஏற்பட்ட உறுதியான சந்தேகத்தில், மேற்படி தண்டபாணி ஆஜர்படுத்தியது செல்லாத ரூபாய் நோட்டுகள். சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டன. 500 ரூபாய் பழைய நோட்டுக்கள் 1072 கட்டுக்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு, ரூ 5,36,00,000 ஆகும். 1,000 பழைய ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு ரூ 39,43,00,000 ஆகும். இவற்றின் மொத்த மதிப்பு 44 கோடியே 79 லட்சம் ரூபாயாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக, இதுபோன்ற வழக்குகளில் போடப்பட்ட எஃப்ஐஆர் பதிவில், போலீஸார் சோதனை நடத்தி பணம் கைப்பற்றியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இந்த எஃப்ஐஆரில் தண்டபாணியே பணம் கொடுத்தாகச் சொல்லப்பட்டுள்ளதால், அவர் கைகாட்டும் நபர் மீது மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தண்டபாணி வாக்கு மூலத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை, மத்திய பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்கள். இதனால், இந்த வழக்கு, விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close