Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘தேர்வில் ஜெயிச்ச பிறகும் புறக்கணிக்கிறது தமிழக அரசு!’’ - கலங்கும் திருநங்கை ஸ்வப்னா

திருநங்கை

திருநங்கைகள் என்றாலேயே வேறுபடுத்திப் பார்க்கும் மனோபாவம் இந்தச் சமூகத்தில் நிலவுகிறது. உடல் மற்றும் உளவியல் ரீதியாக தங்களைப் பெண்ணாக உணர்ந்து, வெளிப்படுத்திக்கொள்ளும்போது அவர்கள் சந்திக்கும் சவால்களை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பெற்றோர், உறவினர், நண்பர்கள் என ஒட்டுமொத்த சமூகமே ஒதுக்கி வைக்கும். ஒரு மனிதராக வாழ்வதற்கே தினம் தினம் பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் எனத் தள்ளப்படுவார்கள். இதையெல்லாம் தாண்டி படிப்பு, வேலை என சமூகத்தில் துணிவோடு வாழ்ந்து சாதித்த திருநங்கைகள் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கின்றனர். சமீபத்தில் சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி எஸ்ஐ., தேர்வில் வெற்றிபெற்றும், நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டத்தின் மூலமே பணியில் சேர்ந்துள்ளார். இப்படி ஒவ்வொரு இலக்கை அடையவும் திருநங்கைகள் மற்றவர்களைவிட ஆயிரம் மடங்கு போராட வேண்டியுள்ளது. இதோ, இன்னொரு போராட்ட நாயகியாக ஸ்வப்னா. 

திருநங்கை

மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா, ஆணாகப் பிறந்து, தன்னைப் பெண்ணாக உணர்ந்த தருணம் முதல் கல்வி கற்பதில் பல சவால்களைச் சந்தித்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தர். தொலைதூரக் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்று, முதுகலை படித்து வருவதோடு, தமிழக அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதி வருகிறார். இதில், மூன்று போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்றும் தமிழக அரசு, வேலைக்கான உத்தரவை வழங்காமல் புறக்கணித்து வருகிறது. 

''நேர்மையாக வாழத்துடிக்கும் எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு அரசின் நடவடிக்கை அதிர்ச்சியை அளிக்கிறது. என்னைத் திருநங்கையாக உணர்ந்த நாளிலிருந்து தினமும் சவால்களைச் சந்தித்து வருகிறேன். பள்ளியில் படிக்கும் காலத்தில் சக மாணவர்களின் கிண்டல், கேலியால் அவமானப்பட்டேன். கோபப்படவும் முடியாமல், தாங்கிக்கொள்ளவும் முடியாமல் துடித்தேன். பல சமயங்களில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தலைதூக்கி இருந்தது. நாளடைவில் அவமானங்கள் பழகிப்போனது. பிளஸ் டூவுக்குப் பிறகு நல்ல மதிப்பெண் பெற்றும் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் தொலைதூரக் கல்வியில் படித்து வருகிறேன். 

அரசு வேலைக்குச் செல்ல விண்ணப்பிக்கும்போது, அரசின் தேர்வாணையத்தில் திருநங்கைகள் தேர்வெழுத அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. அதற்காக நீதிமன்றத்தில் போராடித் தேர்வு எழுதும் உரிமையைப் பெற்றேன். தற்போது குரூப் 2-ல் பதிவாளர் பணி, உயர்நீதிமன்ற ரீடர், தஞ்சாவூர் மாவட்டத்தில் வி.ஏ.ஓ., என மூன்று தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றும் தமிழக அரசு இதுவரை வேலை வழங்கவில்லை. என்னோடு தேர்வு எழுதிய பலரும் பணியில் சேர்ந்துவிட்டனர். திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக என் தகுதியும், திறமையும் ஒதுக்கப்படுகிறது. இடஒதுக்கீட்டிலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை. தற்போது, திருநங்கைகளை எம்.பி.சி. பிரிவில் தமிழக அரசு இணைத்துள்ளது விந்தையாக உள்ளது. அவரவர் சாதிப் பிரிவு என்னவோ அந்த அடிப்படையில்தான் திருநங்கைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். திருநங்கைகள் என்ற காரணத்துக்காக சாதியையே மாற்றுவது எந்த வகையில் நியாயம்... எஸ்.சி./எஸ்.டி. பிரிவில் வரக்கூடிய திருநங்கைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், தமிழக அரசின் அரசாணை எண் 28-ஐ மாற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. பல வழக்குகளை அவசர வழக்காக எடுத்து நீதி வழங்கும் நீதிமன்றம், எங்கள் விஷயத்திலும் உடனடியாகத் தலையிட்டு நீதி வழங்க வேண்டும். 

எங்களுக்கும் சக மனிதர்களைப் போல லட்சியத்துடன் வாழும் ஆசை உள்ளது. கலெக்டராக வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காகத் தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுதி வருகிறேன். பணி வழங்கினால் பொருளாதாரச் சுமையின்றி தொடர்ந்து படிக்க முடியும். அதோடு, என்னை முன்னுதாரணமாக்கி பல திருநங்கைகள் வாழ்வில் உயர வழி கிடைக்கும். செய்யுமா அரசு?'' என்றார் கலங்கிய விழிகளுடன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close