Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூட்டணி அறிவித்த ஒரு மணிநேரத்தில் மனம் மாறிய பன்னீர்செல்வம்!

பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பதுபோல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அந்தப் பதிவு வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில், அதற்கு மறுப்பு தெரிவித்து மற்றொரு ட்விட் பதிவு செய்யப்பட்டது. தற்போது, இரண்டு பதிவுகளும் ட்விட் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக அ.தி.மு.க. பிரிந்தது. சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராகிவிட்டார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணிக்கு பல வகையில் நெருக்கடியைக் கொடுத்துவருகிறது. இந்தச் சமயத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட இரண்டு அணிகளும், அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரியதால், சின்னம் முடக்கப்பட்டது. தற்போது, சின்னத்தை மீட்டெடுக்க இரண்டு அணிகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

இதற்கிடையில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து ஓரங்கட்ட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சில அமைச்சர்கள் முடிவுசெய்தனர். அதோடு, ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அ.தி.மு.க-வில் உள்ள இரண்டு அணிகளையும் ஒன்றிணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சி இதுவரை கைகூடவில்லை. இரண்டு அணிகளிலும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால், ஒன்றிணைவதில் சிக்கல் நீடித்துவருகிறது. 

இந்தச் சூழ்நிலையில், டெல்லிக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார். தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து, கட்சியில் உள்ள செல்வாக்கு மற்றும் நிலைப்பாடுகுறித்து விளக்கமளித்தார். இதன்பிறகு, பிரதமர் நரேந்திரமோடியை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் நேற்றிரவு சந்தித்துப் பேசினர். முன்னதாக, சசிகலா அணியில் உள்ள தம்பிதுரை எம்பி-யும் மோடியைச் சந்தித்தார். இது, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடியைச் சந்தித்த அடுத்த நாளான இன்று, ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர்  பக்கத்தில், கூட்டணி தொடர்பாக காலை ஒன்பது மணியளவில் ஒரு பதிவு வெளியானது. அதில், ‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்குப்  பல கமென்ட்டுகள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எதிராகக் குவிந்தன. அந்தப் பதிவுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், காலை 10.26 மணிக்கு மற்றொரு பதிவு போடப்பட்டது. அதில், 'உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு எந்தக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று ஆலோசிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் திடீர் மனமாற்றத்துக்கு பல காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து, ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்பி-யிடம் பேசினோம். "ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் பக்கத்தில் பதிவான கருத்துக்கு உடனடியாக மறுப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. விவரம் தெரியாதவர்கள் அப்படியொரு பதிவைப் போட்டுள்ளனர்" என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியினர்

பெயரைக் குறிப்பிட விரும்பாத ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பதை எங்கள் அணியில் சிலர் விரும்பவில்லை. இதற்கு ஆரம்பத்திலிருந்தே அவர்கள் முட்டுக்கட்டை போட்டுவருகின்றனர். இருப்பினும், மக்கள் செல்வாக்கு எங்கள் அணிக்கு இருப்பதால், தனித்துப் போட்டியிட அவர்கள் விரும்புகின்றனர். கூட்டணி என்பது தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அப்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டும் அணியில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்தும் முடிவு எடுக்கவேண்டிய ஒன்று. அதற்கான நேரம் இப்போது இல்லை. தற்போது, குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலிலும் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் பெயர் வெளியிட்ட பிறகே, எங்கள் அணியின் ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவிப்போம்.

இதற்கிடையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க. சிக்கிவிடக்கூடாது என்ற குறிக்கோளாடு நாங்கள் செயல்பட்டுவருகிறோம். அதற்கான நேரம் கனிந்துவருகிறது. இரண்டு அணிகளிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. இருப்பினும், ஒரு வார காலத்தில் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து, தமிழக அரசியல்குறித்து விவாதித்துள்ளோம். நல்ல முடிவுக்காகக் காத்திருக்கிறோம்"என்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரபூர்வ ட்விட் பக்கத்தில், கூட்டணிகுறித்த பதிவுகள் காலை 11.40 மணியளவில் எடுக்கப்பட்டுவிட்டது. அந்த ட்விட்டைப் பதிவுசெய்த ஐடி விங்க்கில் உள்ளவர்களுக்கு, ஓ.பன்னீர்செல்வம் அணியின் தலைமை கடும் டோஸ் விட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close