Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுவாதி கொலையில் தீவிரவாத தொடர்பு? - மீண்டும் சர்ச்சையாகும் ராம்குமார் மரணம்

ராம்குமார்


சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார், சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், 'ராம்குமார் தற்கொலை செய்யவில்லை; திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்' என அப்போதே சர்ச்சைகள் கிளம்பின.

தற்போது இவ்விவகாரத்தில், காவல்துறையும், நீதித்துறையும் உரிய தகவல்களைத் தர மறுப்பதாகவும், எனவே அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்போவதாகவும் ராம்குமாரின் தந்தை பரமசிவன் முடிவு செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர், ராம்குமார். கடந்த 2016 ஜூன் 26 ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென்பொருள் பொறியாளரான சுவாதி, பட்டப்பகலில் பலரது முன்னிலையில், படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், குற்றவாளி என்று முடிவுசெய்யப்பட்ட ராம்குமாரை ஜூலை 1 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். இந்தக் கைது சம்பவத்தின்போதே ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், செப்டம்பர் 18 ஆம் தேதி சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இச்சம்பவத்தில் மர்மம் இருப்பதாக ராம்குமாரின் பெற்றோரும் வழக்கறிஞரும் குற்றம் சாட்டினர்.  ராம்குமார் தற்கொலையுடன் சுவாதி கொலை வழக்கின் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலே முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ், இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ''ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருக்கின்றன. அதனால், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தர வேண்டும் என்று ராம்குமாரின் பெற்றோர் கடந்த 7 மாதங்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், ராம்குமார் தொடர்பான எந்த ஆவணங்களையும் எங்களுக்குத் தர மறுக்கிறார்கள். காவல்துறை மட்டும் அல்லாமல் நீதிமன்றமும் ராம்குமார் குறித்த ஆவணங்களைக் கொடுக்க மறுக்கிறது.

கீழமை நீதிமன்றம் மட்டும் அல்லாமல் உயர் நீதிமன்றமும் திட்டமிட்டே ராம்குமார் தொடர்பான ஆவணங்களைக் கொடுக்க மறுக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நாங்கள் மீண்டும் நீதிமன்றத்திடம்தான் முறையிட வேண்டிய நிலைமை. ஆனால், நீதிமன்றங்கள் எதையோ மறைக்க விரும்புவதால் ஆவணங்களைத் தர மறுக்கின்றன. அதனால், ராம்குமாரின் பெற்றோர் இன்று செங்கோட்டை காவல்நிலையத்துக்குச் சென்று காவல்துறை, நீதித்துறை மீது கொலை வழக்குப் பதிவு செய்யுமாறு புகார் கொடுக்க இருக்கிறார்கள். 

ராம்குமாரை அவரது வீட்டுக்கு வந்து காவல்துறையினர் பிடித்துச் சென்றபோதே கழுத்தை அறுத்துக் கொண்டதாகச் சொன்னார்கள். பின்னர், நீதிமன்றத்தின் பாதுகாப்பில் இருந்த அவர் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார்கள். அவரது பாதுகாப்புக்கு நீதிமன்றம்தானே பொறுப்பு ஏற்று இருக்க வேண்டும்? அப்படியானால், சிறைக்குள் அவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நீதிபதிதானே புகார் செய்திருக்க வேண்டும்? அப்படி நடக்காதது ஏன்?

அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டிய சட்டம், மற்றவர்களுக்கு ஒரு விதமாகவும் பட்டியல் இன மக்களுக்கு வேறு விதமாகவும் செயல்படுகிறது. குற்றவியல் சட்டத்தின்படி, ஒரு குற்றம் எங்கிருந்து தொடங்குகிறதோ அதில் தொடங்கி, அது  எங்கு முடிவடைகிறதோ அங்கு வரை எந்த இடத்திலும் புகார் செய்யலாம். அதன்படி இந்த வழக்கு தொடங்கிய செங்கோட்டை காவல்நிலையத்தில் ராம்குமாரின் பெற்றோர் புகார் அளிக்க உள்ளனர். சாமான்ய மக்களான ராம்குமாரின் பெற்றோர்களால் சென்னைக்குச் சென்று புகார் அளிக்க இயலாது என்பதால், இங்கேயே புகார் கொடுக்கிறார்கள். 

சுவாதி கொலை வழக்கின் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அதன் பின்னணியில், தீவிரவாத இயக்கங்களுக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்கிற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது. அதனால், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும். இதில் நீதித்துறைக்கும் தொடர்பு இருப்பதால், சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணையைக் கோருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.

அதற்கு முன்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டு உள்ளோம். ஏற்கெனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்து எங்களது கோரிக்கை குறித்துப் பேசினோம். இன்னும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இந்த வழக்கில், உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவோம். ராம்குமார் மரணத்தின் பின்னணியை திட்டமிட்டு மறைக்க முயற்சிப்பவர்களை அம்பலப்படுத்துவோம்” என்றார் ஆவேசமாக. 

நீதித்துறையினர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

    

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close