Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வன விலங்குகள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க திணறிய வனத்துறை அமைச்சர்! 

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நெல்லையில் நேற்று செய்தியாளர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாமல் திணறினார். வன விலங்கு கணக்கெடுப்புப் பட்டியலில் சிங்கம் இருப்பதாகச் சொன்னதைக் கேட்டு அனைவரும் திகைத்துப் போனார்கள். 

dindugal sreenivasan

நெல்லை மாவட்ட வனப்பகுதிகளில் செயல்பட்டு வரக்கூடிய மகளிர் சூழல் மேம்பாட்டுக் குழுக்களுக்கு மாற்றுப் பணிக்கான கடனுதவி வழங்கும் விழா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுப் பணியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். மொத்தம் 122 கிராமங்களில் செயல்பட்டு வரக்கூடிய குழுக்களுக்கு 87,73,000 மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது.  

பின்னர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழக வனப்பகுதி வழியாக கொண்டு வந்து கொட்டப்படுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ‘இது தொடர்பாக அதிகாரிகளிடம் கலந்து பேசி, கழிவுப் பொருட்கள் கொண்டு வரப்படுவது உண்மை என்பது தெரிய வந்தால் உடனடியாக அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை செய்யப்பட்ட விவகாரம் பற்றிப் பேசுகையில், ‘‘இது தொடர்பாக கேரளாவில் உடனடியாக முடிவு எடுத்து இருக்கிறார்கள். மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதை அவர்கள் ஏற்க மறுத்து உள்ளார்கள். அங்கு உள்ள அரசியல் நிலவரம் அது. ஆனால், நாம் உடனடியாக எதையும் சொல்ல முடியாது. இது தொடர்பாக கலந்து பேசி உரிய முடிவை அறிவிப்போம்’ என்றார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், வனத்துறையில் பணிகள் வழங்கும்போது அங்குள்ள ஆதி திராவிட, பழங்குடி இன மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் சமீபத்தில் 206 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. இது குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமல், அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்து ஒதுங்கிக் கொண்டார். ‘இது மாதிரியான டெக்னிக்கலான கேள்விகள் தொடர்பாக செய்திக் குறிப்பு அளிக்கச் சொல்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை திறப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களை எல்லாம் உருவாக்கிய தலைவரான அவருக்குச் செய்யும் கடமை என்பதால் நாங்கள் நிச்சயமாக அவரது உருவப் படத்தைத் திறப்போம். இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்ப்புத் தெரிவிப்பதை கண்டுகொள்ளத் தேவையில்லை. அவருக்கு இப்போது கட்சியில் பொறுப்பு இல்லை. அதனால் தன்னை முன்னிலைப்படுத்தி எப்படியாவது பொறுப்புக்கு வர வேண்டும் என்பதற்காகவே இப்படி எல்லாம் பேசுகிறார். 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்று இருக்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அவர் சிஸ்டம் சரியில்லை என்று சொன்னதை ஏற்க முடியாது. அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவதற்குத் தயாராகவே இருக்கிறோம். எங்களிடம் அதிகமான எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. தொடர்ந்து இந்த ஆட்சி நடைபெறும்’’ என்றார்.

பின்னர், வன விலங்குகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘காட்டில் இருக்கும் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவது பற்றி கேட்கிறீர்கள். ஊருக்கு உள்ளேயே தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பிறகு காட்டுக்குள் எப்படி தண்ணீர் இருக்கும்? அதனால் தான் விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைகின்றன. வன விலங்குகள் கணக்கெடுப்பு நடந்து முடிந்து இருக்கிறது. அதில், என்னென்ன விலங்குகள் எவ்வளவு இருக்கின்றன? என்பது பற்றி இங்கே வைத்துச் சொல்ல முடியாது. எங்கே வந்து கேட்க வேண்டுமோ அங்கே வந்து கேட்டால் சொல்ல முடியும்.

கணக்கெடுப்பில், காட்டுக்குள் எத்தனை சிங்கங்கள் இருக்கின்றன? எத்தனை புலிகள் இருக்கின்றன? மற்ற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது பற்றிய விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. சிங்கம், புலி, யானை, கரடி போன்றவை எத்தனை இருக்கின்றன என்பதை விரைவில் வெளியிடுவோம்’’ என்று சொன்னதைக் கேட்டு செய்தியாளர்கள் மட்டும் அல்லாமல் அதிகாரிகளும் நகைத்தனர். ‘தமிழக வனப்பகுதிகளில் சிங்கம் இல்லை என்கிற அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் வனத்துறை அமைச்சர் இருக்கிறாரே!’ என அனைவரும் பேசியபடி கலைந்து சென்றனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close