Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மின்வெட்டு குறித்து ஆர்.டி.ஐ.யில் தகவல்கேட்டால் ஆள் காலி...  தொழிற்சங்கத்தலைவர்  பரபரப்பு பேட்டி!



                                                     

க்களை நேரடியாகப் பாதிக்கும்  பிரச்னைகளாக நீர், மின்சாரம் இவை இரண்டையும் முக்கியமாகச் சொல்லலாம்.   அண்மையில் ஓர்  இரவு முழுவதும் இருந்த மின்சாரத்தடை, மக்களை  மனப்புழுக்கத்தில் தள்ளியிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறை மந்திரியாக இருந்த ஆர்க்காடு வீராசாமி, "இந்த மின் பிரச்னையால் கழக ஆட்சிக்கே கெட்ட பெயர் வந்து விடும் போலிருக்கிறதே" என்று குமுறலுடன் சொன்னார். அந்தளவுக்கு ஆட்சியாளர்களுக்கு 'ஷாக்' கொடுக்கிற துறையாக மின்சாரத்துறைதான் இருக்கிறது. மின்வாரிய அதிகாரிகளை எப்போது கேட்டாலும், "தென் மேற்குப் பருவக்காற்று தொடர்ந்து வீசுகிறது. காற்றாலை மின் உற்பத்தி சீராக உள்ளது. காற்றாலை மின்சாரத்தின் சீரான அதிகரிப்பால், சென்னையில் மின் வெட்டு நேரம் 30 நிமிடமாகவும், மற்ற மாவட்டங்களில் ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்படலாம்" என்று  சூழலுக்கேற்ப  பதில் சொல்கிறார்கள். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம்  அடிக்கடி ஒரு செய்திக்குறிப்பை வெளியிடும். நாள், மாதம் ஆண்டுகளை மட்டும் மாற்றிப் படித்துக் கொண்டால் போதும், இது  எந்தக் காலத்துக்கும் ஒரே மாதிரியான அறிக்கைதான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.அந்த மாதிரி அறிக்கையின் டேஷ், டேஷ் இடங்களில் அந்தந்த அரசியல் சூழலுக்கேற்றபடி விபரங்களைப் பூர்த்தி செய்து கொண்டால் அந்த அறிக்கை இப்படித்தான் இருக்கும். "தமிழ்நாட்டில் மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் மற்றும் மின் தொடரமைப்புக் கழகம் மேற்கொண்ட பெரு முயற்சியினாலும், காற்றாலையில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு அவ்வப்போது அதிகரிப்பதாலும்  அதிகபட்ச மின்தேவையை தடையின்றி பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.  கடந்த--- மாதம் காற்றாலை மூலம் சராசரியாக ----- மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆனது. தற்போது  காற்றாலைகள் மூலம் தினமும்------ மெகாவாட் முதல் ----- மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி ஆகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு ----மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே சராசரியாக ---- மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி ஆகும் என்று (?) கணிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரத்தின் நிலையற்ற தன்மையால் கடந்த ஒரு வார காலத்தில் நாள் ஒன்றுக்கு பெறப்படும் மின்சாரத்தின் அளவு --- மில்லியன் யூனிட் முதல்------ மில்லியன் யூனிட் ஆக வேறுபடுகிறது. இதன் காரணமாக, அவ்வப்போது காற்றாலை மின்சார வரத்து குறையும். அப்படி குறையும் நேரங்களில் கூடுதலாக மின்சாரம் தடை  ஆகிறது. புதிய மின்திட்டங்களான கூடங்குளம், வடசென்னை, வல்லூர் கூட்டுமுயற்சி அனல்மின் திட்டம், மேட்டூர் நிலை​ 3 மற்றும் புனல் மின்திட்டங்கள் ஆகியவை மின்உற்பத்தியை முழுமையாகத் தொடங்கும்போது தமிழகத்தில் மின் பற்றாக்குறை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றே அந்த அறிக்கையில் இருக்கும்.


  சென்னையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி, நள்ளிரவு 12 மணியளவில் மின்சாரம் முழுதாய் துண்டிக்கப்பட்டது.  ஆளுங்கட்சியின் மிக முக்கியமான இணைப்புப் பேச்சு வார்த்தைகூட இதனால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். ஆட்சியில் இருக்கும் அணியில் மின்சாரத்துக்கான  மந்திரி தங்கமணி இருப்பதால், அவர்களைப் பொறுத்தவரையில் இது  'இணைப்பு' பேச்சுவார்த்தைக்கு ஏற்பட்ட தடங்கல் மட்டுமே. அன்றைய தினம் மின்வெட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின் வாரிய அதிகாரிகள், " வடசென்னை அனல் மின்நிலையத்தில் இருந்து துணை மின்நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு செல்லும் உயரழுத்த கோபுரங்கள் திடீரென  கட்டுப்பாட்டை இழந்தது.  அது, கட்டுப்பாட்டை தொலைத்த இடத்தைக் கண்டுபிடிப்பதில்தான் வாரியத்துக்குச் சிக்கலே ஏற்பட்டது. இந்த மாதியான  தொடர் பிரச்னைகளால்தான் மின்சாரம் இல்லாமல் ஸ்தம்பித்துப் போகும் சூழ்நிலை உருவானது. காற்றாலை மின்சாரம் கைகொடுப்பதால், நிலைமையைச்  சமாளித்து வருகிறோம்." என்றனர். 

வல்லூர் அனல் மின்நிலையத்துக்குச் செலுத்த வேண்டிய பாக்கியால் 1066  மெகாவாட் இழப்பு, வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் 1,830 மெகாவாட்  இழப்பு என்று உண்மையைச் சொல்லாமல், ஒரே காரணமாக  'பழுது' என்றே அதிகாரிகள் சொன்னார்கள்.  மறுநாள், சென்னை அண்ணா சாலையிலுள்ள தலைமை மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை மந்திரி தங்கமணி, மின்வெட்டுக்கான ஆய்வை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மணலி - மயிலாப்பூர் இடையிலான உயர் மின் அழுத்த பாதையில் ஏற்பட்ட பழுது காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. பழுதை சீர் செய்யும் பணி துரிதமாக நடைபெறுகிறது. விரைவில் மின்சாரம் வழங்கப்படும்" என்று சொன்னார். மந்திரியும், மின்வாரிய அதிகாரிகளும் சொல்வது உண்மையா?  வருங்காலங்களில் இதே மாதிரி சென்னையை மூழ்கடிக்கும் மின்வெட்டு ஏற்பட்டாலும் இதுதான் காரணமாக இருக்குமா? என்ற கேள்விகளுடன், வல்லூர் அனல்மின்நிலையத்தின் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத் தலைவர் விஜயனை  சந்தித்தோம். அவர் நம்மிடம், "   தமிழக மின்வாரியமானது , மின் உற்பத்தி செய்துதரும் என்.டி.பி.சி  நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையைக் கொடுக்காத காரணத்தால்தான்  வல்லூரில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.  இதை மறைத்துவிட்டு மந்திரிகள் ஏதேதோ பேசுகிறார்கள்.  ரூ.250 கோடி நிலுவைத் தொகையை 60 நாள்களுக்குள் செலுத்துவதாக  உறுதியைக் கொடுத்த பின்னரே மின் சப்ளை சரி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கோடைக்கால மின் தேவை 14  ஆயிரம் மெகாவாட். அதில், சென்னைக்கு மட்டும் 2,500 முதல் 3 ஆயிரம் மெகாவாட்  மின்சாரம் தேவை. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வல்லூர் அனல் மின்நிலையத்தில் 3  யூனிட்டுகளில் மின் உற்பத்தி நடக்கிறது. ஒரு யூனிட்டுக்கு  500 மெகாவாட் மின்சாரம் என 1,500 மெகாவாட் மின்சாரம் இங்கிருந்து கிடைக்கிறது.


 வடசென்னை அனல்மின் நிலையத்தின் மூலம்,  3  யூனிட்டுகளில் தலா 210 என 630 மெகாவாட்டும், 2 யூனிட்டில் தலா 600 மெகாவாட்  1200 மெகாவாட்டும் கிடைக்கிறது. வல்லூரில்  கிடைக்கும் 1,500 மெகாவாட்டில் 1,066 மெகாவாட் மின்சாரம்  தமிழ்நாட்டுக்காக கொடுக்கப்படுகிறது. மின் உற்பத்திக்கான  திரவ எரிபொருளாகட்டும், நிலக்கரியாகட்டும் அவர்களுக்கு இலவசமாகவா கிடைக்கிறது. மின் உற்பத்திக்கு தேவையான அடிப்படைப் பொருள்களோடு அதற்காக உழைக்கும் ஊழியர்களுக்கான ஊதியம் என்ற அம்சமும் இருக்கிறதே. 'சூரியசக்தி மூலம் மின்சாரத்தை தருவித்துக் கொள்வோம், அதனால் சுற்றுச்சூழல்' மாசுபடாது என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா ஒப்புதல் அளித்துவிட்டு மரபுசாரா எரிசக்தியை இன்னும் செயலாக்கத்தில் கொண்டு வராமல் இருக்கிறதே. சூரிய ஒளி, காற்றாலை மூலம் மின் உற்பத்தி, நீர்வழி மின்சாரம் என்று சுற்றுச்சூழலை பாழ்படுத்தாமலும், எரிபொருளுக்கான தேவை இல்லாமலும் மின்சாரத்தை தயாரிப்பதில் அக்கறை இல்லாமல் இருப்பதுதான் மொத்த விவகாரத்துக்குமான பொதுவான காரணம் எனலாம். மின்சாரத்துறை என்பது அந்தத் துறையின் மந்திரிகளுக்கு மிகவும் பிடித்தமான வெள்ளையானை என்றுதான் சொல்ல வேண்டும்...  இந்தத் துறைக்கு தேவையான பொருள்களை வாங்காமல் தட்டிக் கழிப்பதும், தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதும் என்ற அவர்களின் கொள்கையில் இருந்தே கொள்ளைக்கான முதல் அடி எடுத்து வைக்கப்படுகிறது. ஆர்.டி.ஐ.யில் இது குறித்து தகவல் கேட்பவர்களை மொத்தமாக காலி செய்வது சாதாரணமான நிகழ்வாகி விட்டது. மின்வாரியத்துக்கு தலைமைப் பொறியாளராக யாரைப் போஸ்டிங் போட வேண்டும் என்பதை மின்வாரிய அமைச்சருக்கு 'சப்ளை' செய்யும் சப்ளையர்கள்தான் காலந்தோறும் தீர்மானிக்கிறார்கள்... கடந்த ஆட்சிக் காலங்களிலும் இதுவேதான் நடைமுறையில் இருந்தது, இப்போதும் எப்போதுமாய் அதுவே தொடர்கிறது." என்றார்.நதிநீர் இணைப்பில் ஆந்திராவும், தடுப்பணைகள் கட்டுவதில் குஜராத்தும், அணைகள் கட்டுவதில் கர்நாடகமும், ஆற்றுமணல் திருட்டை தடுப்பதில் கேரளாவும், மழைநீர் சேமிப்பு, சொட்டுநீர் பாசனத்தில் ராஜஸ்தானும் முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாய் உடைந்த ஆளுங்கட்சியை ஒன்றாக ஒட்டுவதில் முதல்மாநிலமாக மட்டுமே இப்போதைக்கு தமிழகம் இருக்கிறது... இதனால் மக்களுக்கு என்ன நன்மை என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்... கண்டிப்பாக நம்மிடம் பதில் இல்லை.

- ந.பா.சேதுராமன்.

படங்கள் : க.பாலாஜி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close