Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சதமடித்த வெங்காயம் விலை..! ஏன்? என்ன தீர்வு?

வெங்காய விலை

‘‘வெங்காய சட்னி ஊத்துங்க"னு ஏதாவது உணவகம் ஒன்றில் போய் வெள்ளந்தியாய் கேட்டு  விடாதீர்கள். அந்த ஓட்டல்காரன் உங்களை ஆள் வெச்சு அடிச்சு துரத்தினாலும் அதில் ஆச்சர்யம் இல்லை. உரிப்பவர் கண்களில் மட்டும் கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம் இப்போது அதன் விலையை கேட்பவர் கண்களிலும் கண்ணீரை வரவைக்கிறது. ஆமாம்,  சாம்பார்  வெங்காயம் என்றழைக்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலை இன்றைய தேதியில் கிலோ 100 ரூபாயை தொட்டுள்ளது.

கடந்த ஆண்டுவரை வயல்வெளி கொள்முதல் விலையாக 15 ரூபாய் என்கிற விலையில் இருந்த சாம்பார் வெங்காயம் கடந்த 6 மாதங்களாக அம்பானிகளும் அதானிகளும் கூட வாங்கி சாப்பிட யோசிக்கும் உச்சக்கட்ட விலையில் எகிறிக் கிடக்கிறது. இந்த திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்? 

பல வருடங்களாக சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வரும் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதி விவசாயி செல்வராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

செல்வராஜ் ‘‘கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் பல ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடவு செய்த 60-வது நாளில் அறுவடைக்கு வந்துவிடும் குறுகிய கால பணப்பயிர் இது. மென்மையான பயிரான வெங்காயம் குளிர்ந்த சீதோஷ்ண நிலை கொண்ட மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் சரியான விளைச்சல் கொடுக்காது. மேலும் சுவையான பாசன நீரில் மட்டும்தான் இதில் நல்ல மகசூல் எடுக்க முடியும். 

ஏக்கருக்கு சராசரியாக 5000 முதல் 7,000 (ஏழாயிரம்) கிலோ வரை மகசூல் கொடுக்கும் சாம்பார் வெங்காயத்தை விவசாயிகளின் ஜாக்பாட் என்று வேடிக்கையாக சிலர் சொல்வதுண்டு.

குறைந்தபட்சம் கிலோ 15 ரூபாய் விலைக்கு விற்றால் கூட ஏக்கருக்கு 60 நாளில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பார்க்க முடியும் என்பதால் சாம்பார் வெங்காய சாகுபடியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை வயல்வெளி விலையாக கிலோ 65 ரூபாய்க்கும் அதிகமாக எந்த விவசாயிடமும் கொள்முதல் செய்யப்படவில்லை. ஆனால், இந்த வருஷம் வயல்வெளி விலையே கிலோ 95 ரூபாயை தொட்டுள்ளது. அதாவது 60 நாளில் ஏக்கர் ஒன்றில் கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாய் வருமானம் எடுத்துள்ளார்கள் வெங்காயம் பயிர்செய்துள்ள விவசாயிகள் சிலர். இது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும்.  நுகர்வோர் பக்கம் இருந்து பார்க்கையில் பாமர மக்கள் நினைத்துப்பார்க்காத உச்சத்தில் வெங்காய விலை உயர்ந்திருப்பது வருத்ததையும் ஏற்படுத்துகிறது.

பருவமழை போச்சு... வெங்காயம் பவுன் விலையாச்சு..!

நடைபாதை கடையில் விற்கப்பட்ட வெங்காயம் இன்று நகைக்கடையில் விற்கவேண்டிய அளவுக்கு விலை ஏறியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்ற நமது கேள்விக்கு தமிழக விவசாயிகள் விழிப்புஉணர்வு இயக்கத்தின் மாநிலத்தலைவர் உடுமலை வேலாயுதம் பதில் அளித்தார்.

”வரலாறு காணாத வெங்காய விலைக்கு முக்கிய காரணம் மழைதான்.  குறிப்பாக பருவமழையை நம்பித்தான் வெங்காய சாகுபடி நடக்கும். கடந்த மூன்று வருடங்களாக பருவமழை சுத்தமாக பொய்த்துப்போனது. சின்ன வெங்காய சாகுபடி முழுக்க முழுக்க கிணற்றுப்பாசனத்தை நம்பியே மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக வெங்காயம் பயிர்செய்யப்படும் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கும் கீழ் போய்விட்டது. அதையும் தாண்டி போர்வெல் அமைத்தும் சொம்பு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. எனவே ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் இருபோகம் பயிர்செய்யப்படும் வெங்காயம் கடந்த ஆண்டு வெறும் 300 ஏக்கரில் கூட பயிர் செய்யப்படவில்லை என்பது வருத்தமான ஒன்று.

மேலும் தமிழ்நாட்டில் வெங்காயம் பற்றாக்குறை ஏற்படும்போது ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிரம் மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும். அங்கிருந்து லாரி லாரியாக வந்திறங்கும் வெங்காயம் தமிழ்நாட்டின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும். ஆனால், இந்த ஆண்டு அந்த மாநிலங்களிலும் வரலாறு காணாத வறட்சி. குடிநீருக்கே ரயில் தண்ணீரை நம்பியிருந்த சோகம் அங்கு நிலவியது. அதனால் அங்கும் வெங்காயம் விளையவில்லை.

தண்ணீர் வசதியுள்ள சில விவசாயிகள் வெங்காயம் பயிர் செய்ய ஆர்வம் காட்டினாலும், விதை வெங்காய விலை விண்ணைத்தொட்டு நிற்கிறது. கிலோ 75 ரூபாய் விலை போகிறது விதை வெங்காயம்.ஏக்கருக்கு 1000 கிலோ விதை தேவைப்படும். ஏக்கருக்கு 75,000 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலைமை நம் விவசாயிகளுக்கு இல்லை.

நதிகளும் காய்ந்து, அணைகளும் வறண்டு, நிலத்தடி நீரும் குறைந்து போய்கொண்டிருக்கும் சூழலில் வெங்காயம் மட்டுமல்ல அனைத்து விளைபொருட்களின் விலையும் விண்ணைத்தொடும் காலம் வரலாம்."

வெங்காயம்

வீட்டுத்தோட்டம் இருக்க பயமேன்!

கோயம்புத்தூரை சேர்ந்த வீட்டுத்தோட்ட வல்லுநர் கிருத்திகா கனகராஜ் இதுபற்றி கூறுகையில்

"எந்த காய்கறி விலை ஏறினாலும் எங்களுக்கு கவலை இல்லை. வீட்டுத்தோட்டம் அமைச்சு அதுல வெங்காயம் மட்டுமல்ல கீரை ,காய்கறிகள்னு வளர்த்து வர்றோம்.  ஒரு வீட்ல 10 தொட்டி இருந்தா போதும். ஜம்னு காய்கறி வளர்க்கலாம். நாங்க நாலுதொட்டியில சாம்பார் வெங்காயம் வெச்சிருக்கோம். சுழற்சி முறையில அறுவடைக்கு வரும்படி நடவு செஞ்சிருக்கோம். எங்க வீட்டுக்கு தேவையான வெங்காயம் வருஷம் முழுசும் எங்களுக்கு கிடைக்கு. சாம்பார் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்றாலும் சரி, விதை வெங்காயம் கிலோ 75 ரூபாய்க்கு விற்றாலும் சரி... எங்களுக்கு கவலை இல்லை. அறுவடை செய்யும் வெங்காயத்தில் ரெண்டுகிலோ அளவுக்கு காற்றோட்டமான இடத்துல பரப்பி வெச்சிடுவோம். மூணு மாசத்துல அதுல இருக்கும் நீர்ச்சத்து குறைஞ்சு பழைய வெங்காயமா மாறிடும். அதை எடுத்து விதை வெங்காயமா நடவு செய்திடுவோம். 60 நாளில் அறுவடைக்கு வந்திடும்.வெங்காய பற்றாக்குறைக்கு இது ஒரு சிறந்த வழி "

எது எப்படியோ... இந்த ஆண்டாவது நல்லமழை பெய்து வெங்காயம் அதிக விளைச்சல் கண்டு விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் கட்டுபடியாகும் விலை கிடைக்க வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close