Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க பரிசுகள் அளித்து அசத்தும் தலைமையாசிரியர்! #Inspiring

`இந்தப் பள்ளியில் சேரும் மாணவனுக்கு, ஒரு கிராம் தங்க நாணயம், அல்லது மிக்ஸி, கிரைண்டர் அல்லது வருடத்துக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சேர்ந்தால் பீரோ. அதுமட்டுமல்லாமல் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் பெற்றுத்தரப்படும்' - தனியார் பள்ளி சார்பில் இப்படி ஒரு விளம்பரம், சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. தென்காசிக்கு அருகே சிந்தாமணியில் உள்ள ஆனந்தா தொடக்கப் பள்ளியின் விளம்பரம்தான் அது.

 

 

அதிசயப் பள்ளி

மாணவர்களை, தனியார் பள்ளிகளில் சேர்க்கச் செல்லும் பெற்றோர்களிடமிருந்து சொத்தையே எழுதி வாங்கிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், பணம், பொருள்களோடு கல்வியையும் போதிக்கும் பள்ளியின் விளம்பரத்தைப் பார்த்து அசந்துபோனோம்.

பள்ளி நிர்வாகியும் தலைமை ஆசிரியருமான ஏ.பி.சரவணன் அவர்களிடம் பேசினோம், "ஆமாம் சார். எங்களுடைய பள்ளி விளம்பரம்தான் அது. ஆங்கிலவழிக் கல்வி மோகத்தில் நம் மக்கள் விழுந்துகிடக்கும் கொடுமையைப் பார்த்து, தமிழ்வழிக் கல்வியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்படி விளம்பரம் செய்தேன்.

எங்க ஊர்ப் பகுதியில் வசதியானவர்கள் மட்டுமல்ல, கூலித் தொழிலாளர்களும் வட்டிக்குப் பணம் வாங்கி தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். பிறகு, கடனை அடைக்க முடியாமல் தெருவில் நிற்கிறார்கள். இன்னும் சிலரோ, பிழைப்புக்காக வெளியூர் செல்லும்போது பிள்ளைகளைப் பாட்டி வீட்டில் விட்டுச் செல்கிறார்கள். பாட்டிகளால் பிள்ளைகளுக்குச் சோறுதான் கொடுக்க முடியும்; நல்ல கல்வியைக் கற்பிக்க முடியாது. இதையெல்லாம் பார்த்துதான் இந்தப் பள்ளியைத் தொடங்கினேன்.
தாய்மொழியில் படித்து மற்ற மொழிகளைக் கற்றால்தான் பிள்ளைகள் சிறப்பாக வளர்வார்கள். எடுத்தவுடன் ஆங்கிலவழிக் கல்வியில் சேர்த்தால், ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் அவர்கள் வாழ்க்கையே வீணாகிவிடுகிறது.
அதனால்தான் தனியார் ஆங்கிலப் பள்ளிகளின் விளம்பரத்தில் மயங்கி சேர்க்கக் கூடாது என்பதற்காக இப்படி விளம்பரம் செய்தேன்.
தமிழ்வழிக் கல்வி என்றாலும் ஆங்கிலமும் சொல்லிக்கொடுப்போம்" என்றார்.

"இதற்கெல்லாம் ரொம்ப செலவாகுமே?"

 

அதிசயப் பள்ளி

"ஆம். எனக்கு இறைவன் ஓரளவு செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். அதனால் என் கைக்காசைப் போட்டு இந்தப் பகுதி பிள்ளைகளைப் படிக்கவைக்க எண்ணியுள்ளேன். இந்தப் பகுதி, மிகவும் பின்தங்கிய பகுதி; சாதாரண ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதி. அவர்களுக்காவே இந்தப் பள்ளியைத் தொடங்கினேன்.


தென்மாவட்ட விவசாயிகளுக்குத் தன் சொந்தப் பணத்தைப் போட்டு முல்லைப்பெரியாற்றில் அணை கட்டினார் பிரிட்டிஷ்காரரான பென்னி குயிக். அவரைப் பற்றி நம்மவர்களுக்கு எப்போது தெரியும் என்றால், முல்லைப்பெரியாறு வழக்கு வரும்போதுதான்.
அப்படிப்பட்ட வெளிநாட்டுக்காரரே நம் மக்களுக்கு நன்மை செய்தபோது, நான் செய்வதெல்லாம் சாதாரணம். எனக்கு முன்மாதிரி பென்னி குயிக்தான்" என்று பூரித்துப்போனார்.

"இப்போது எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள்?"

"இவ்வளவு விளம்பரம் செய்தும் இருபது பேர்தான் சேர்ந்துள்ளார்கள்." என்றார் ஆதங்கத்துடன்.

மனம் தளராதீர்கள். நிச்சயம் வெல்வீர்கள் சரவணன்!

இவ்வளவு இலவசங்களைக் கொடுக்கும் இந்தப் பள்ளியில் சேர்வதற்கு, கட்டணம் எவ்வளவு என தெரியுமா ? அனைத்தும் இலவசம் என்கிறார் சரவணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close