Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஃபேஸ்புக்ல லைக் போட்டாதான், ரஜினி கூட போட்டோவா?!’ - ரஜினி ரசிகர் மன்ற சர்ச்சை 2.0 #VikatanExclusive

ரஜினி

ரஜினி ரசிகர் சைதை ரவியை நீக்கி அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் இன்று அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பத்திரிகைகளுக்கு யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த், நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இது, அரசியலுக்கு முன்னோட்டமாகவே ரசிகர்கள் கருதினர். ஆனால், ரஜினி தரப்பில் அதற்கான எந்தவித உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை. தற்போது, ரஜினி, காலா படப்பிடிப்பில் பிஸியாக இருந்துவருகிறார். 
இந்தச் சூழ்நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்திலிருந்து சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரசிகர் சைதை ரவியை நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவர் எதற்காக நீக்கப்பட்டார் என்று வி.எம்.சுதாகரிடம் கேட்டோம். "மன்ற கட்டுப்பாட்டுக்கும், ஒழுக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் ரவி செயல்பட்டுவந்தார். அவர்மீது பல புகார்கள் தலைமை மன்றத்துக்கு வந்துள்ளன. அந்த புகாரின் அடிப்படையில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றவரிடம் என்ன புகார் என்று கேட்டதற்கு பிறகு பதில் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். 
இதையடுத்து ரஜினி ரசிகர் மன்ற வட்டாரத்தில் விசாரித்தோம். "கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்துடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்தனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சைதை ரவிக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், அவர், மன்ற தலைமைக்கு ஒரு கோரிக்கைவிடுத்திருந்தார். அதில் ஆரம்ப கால ரசிகர்களை மன்றம் மதிப்பதில்லை. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் போடுபவர்கள் மட்டுமே ரஜினியுடன் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவே அவரை நீக்கியதற்கு காரணம். சைதை ரவி சொன்ன கருத்துகள் சரியாக இருந்தாலும் அதை அவர் வெளிப்படுத்தியவிதம்தான் தலைமை மன்ற நிர்வாகிகளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்திய பிறகு அவரது ஒப்புதலுடன் சைதை ரவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் யாரும் மீடியாக்களுக்குப் பேட்டி மற்றும் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கும் இதுவே காரணம். 
ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்களாகிய நாங்கள் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்திவருகிறோம். ஆனால், அதற்கான நேரம் இப்போதுதான் வந்துள்ளது. சூப்பர் ஸ்டார், கட்சி தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். சைதை ரவி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் எங்கள் தலைவருக்கு ஏற்பட்டுள்ளது" என்றனர். 

  ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற  அறிக்கை

 

ரஜினிகாந்த் மன்றத்தில் நீண்ட காலமாக இருக்கும் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கபாலி பட வெளியீட்டு விழாவிலிருந்து சைதை ரவிக்கும், தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு உள்ளது. அது, தற்போது பூதாகரமாக வெடித்துவிட்டது. அரசியல் கட்சி என்று உறுதியான முடிவை ரஜினிகாந்த் எடுக்காத சூழ்நிலையில் ஏராளமான இளைஞர்களை சேர்க்கும் முயற்சியில் சைதை ரவி தரப்பு ஈடுபட்டது. இது தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள் கவனத்துக்கு வந்ததும் அவரை அழைத்து எச்சரித்தோம். இருப்பினும் அவர் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால்தான் அவர் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்"என்றார்.

சைதை ரவியிடம் கருத்துக் கேட்க அவரைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரது கருத்தையும் வெளியிடத் தயாராக உள்ளோம். 

சைதை ரவி தரப்பில் பேசியவர்கள், "ரஜினியின் தீவிர ரசிகர் சைதை ரவி. தென்சென்னையில் ரஜினியின் பட வெளியீட்டின்போது அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்வார். ரஜினி அரசியலில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தினார். தற்போது, ரசிகர்களை ரஜினி சந்தித்துப் புகைப்படம் எடுத்தவுடன், இளைஞர்களை அதிகளவில் மன்றத்தில் சேர்க்க முயற்சித்தார். இது, மன்றத்தில் சிலருக்குப்பிடிக்கவில்லை. மேலும், தென்சென்னை மாவட்ட ரசிகர்களுடன் ரஜினி புகைப்படம் எடுக்காதது குறித்து தலைமை மன்ற நிர்வாகிகளிடம் தட்டிக்கேட்டார். இதையெல்லாம் காரணம்காட்டி சைதை ரவியை நீக்கிவிட்டார்கள். இந்தத் தகவல் தலைவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அவரை நீக்கியது எங்களுக்கு மனவருத்தமளிக்கிறது" என்றனர். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close