Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சசிகலா, டி.டி.வி.தினகரன் பெயரை உச்சரிக்காத எடப்பாடி பழனிசாமி!’ - மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு பின்னணி #VikatanExclusive

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. அம்மா அணி ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரனின் பெயர்கள் உச்சரிக்கப்படாததற்கு, அவர்களது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

அ.தி.மு.க. அம்மா அணியினரின் ஆலோசனைக் கூட்டம், நேற்று ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகு, மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக, உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்டச் செயலாளர்கள் சிலர், "அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குவந்த சீனியர் அமைச்சர்களில் ஆறுபேர் மட்டும் துணைப் பொதுச் செயலாளர் அறையில் அமர வைத்தனர். மற்றவர்கள் அனைவரையும் முதல்தளத்தில் உள்ள கான்ஃபரன்ஸ் அறைக்குள் செல்லுமாறு தெரிவித்தனர். அதற்கு, டி.டி.வி.தினகரன் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். துணைப் பொதுச் செயலாளர் அறையில் உங்களுக்கு என்ன வேலை என்று அறையின் முன்பு அந்த மாவட்டச் செயலாளர்கள் சத்தம் போட்டதால், சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவர்களைச் சமரசப்படுத்தி கான்ஃபரன்ஸ் அறைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு வந்தார். அவரும் துணைப் பொதுச் செயலாளர் அறைக்குச் சென்று, அங்கிருந்த சீனியர் அமைச்சர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, சீனியர் அமைச்சர்கள் புடைசூழ கான்ஃபரன்ஸ் அறைக்கு வந்தார் முதல்வர். அங்கு ''எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நம்மை விட்டுப்பிரிந்து சென்றவர்களே சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டிருக்கும்போது, நாம் அதைவிட வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும்'' என்று பேசினார்.

இதையடுத்து, சீனியர் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன்பிறகு மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, “நீங்கள் எல்லோரும் இந்த ஆட்சிக்கு ஆதரவளித்தால் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படமுடியும். இல்லையெனில் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சிக்கல், சிரமம்தான் ஏற்படும்'' என்று மனம்விட்டுப் பேசினார். அதை மாவட்டச் செயலாளர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். அதன்பிறகு, அவர் கிளம்பிச் சென்றார்.

மாவட்டச் செயலாளர்களிடம் முதல்வர் இப்படிச் சொன்னதற்குப் பின்னால், சில உள்ளர்த்தங்கள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஏனெனில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ஜ.க-வால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு வகையில் நெருக்கடிகள் இருக்கின்றன. மேலும், சசிகலா ஆதரவாளர்கள் தரப்பிலிருந்தும் முதல்வருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டச் செயலாளர்களின் மனதை அறிய அவ்வாறு பேசினார். அதற்கு எந்தவித எதிர்ப்பும் கிளம்பவில்லை. அந்த அமைதி, தனக்குப் பலம் என்று முதல்வர் பழனிசாமி தரப்பு கருதுகிறது" என்றனர்.

இதற்கிடையில், அ.தி.மு.க. அம்மா அணி கூட்டம் நடப்பதற்கு முன், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சிலர் ரகசியக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். அதில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமியைவிட  ஓ.பன்னீர்செல்வம் எவ்வளவோ பரவாயில்லை' என்று பேசியிருக்கின்றனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள், முதல்வரும், கட்சியின் சீனியர் அமைச்சர்களும்,  சசிகலா, டி.டி.வி. தினகரனின் பெயரை  கூட்டத்தில் உச்சரிக்காததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சசிகலா, டி.டி.வி.தினகரனிடம் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர்கள் முடிவுசெய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close