Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமுருகன் காந்தியும், ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைக்கும் எடப்பாடி பழனிசாமியும்! #Analysis

திருமுருகன் காந்தி

2014 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில், ஜெயலலிதா  இப்படிச் சொன்னார்... “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆவணக் காப்பகத்தின் கணக்குப்படி தமிழகத்தில், 2012 ஆம்  ஆண்டு மட்டும் 21,232 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகம். உண்மையில், இதை தமிழகத்தில் நிலவும் வளமான ஜனநாயகத்தைப் பிரதிபலிப்பதாக பார்க்கிறேன்” என்றார். 

அவர் மனதில் இருந்துதான் இந்த வார்த்தைகளைச் சொன்னாரா...? உண்மையில், அவர் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் அதிகளவில் நடப்பதை விரும்பினாரா...? என்றெல்லாம் தெரியாது. ஆனால், அவர் உயிரோடிருந்த வரையில், தரவுகளின்படி தமிழகத்தில் அதிகளவில் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறார். 2015-ல் தமிழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை 20,450. இதுவும் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான போராட்டங்கள். 

ஆர்ப்பாட்டமும், ஜனநாயகமும் :

ஜெயலலிதா சட்டமன்றத்தில் சொல்லியது போல, உண்மையில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும்தான் வலுவான ஜனநாயகத்துக்கு அடித்தளம். அரசு எந்த அளவுக்கு ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்கிறதோ, அந்தளவுக்கு அந்த மாநிலத்தில், ஜனநாயகம் செழித்தோங்குகிறது என்று பொருள்.  14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டாவின்ஸி சொல்வார்,  “மெளனத்தைவிட வேறெதுவும் அடக்குமுறை, அதிகாரத்தை வலுப்படுத்தாது” என்று. இதை நாம் 'நல்ல ஆட்சி என்பது நெகிழும்தன்மையுடன்  இருக்கவேண்டும்' என்ற பொருளில் புரிந்து கொள்ள முடியும். அதாவது, ஒரு சிறப்பான ஆட்சி, சமூகத்தின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். 'அரசு தவறு செய்கிறது' என்று அவர்கள் நம்பும் விஷயத்தைப் பேச அனுமதிக்க வேண்டும். அவர்கள் அதற்காகப் போராடினார்கள் என்றால், அதற்கான வெளியை அளிக்க வேண்டும். அப்போதுதான் அங்கு ஓர் உரையாடல் நிகழும். சமூகம் ஒரு அடியாவது முன் நகரும். 

திருமுருகன் காந்தி மே 17

இவ்வளவு தத்துவார்த்தமாகவெல்லாம் புரிந்து கொள்ளாவிட்டாலும், போராட்டங்களை  மனிதனின் அழுத்தங்களிலிருந்து விடுவிக்கும் ஒரு செயல் என்ற அளவில் புரிந்துகொள்ளலாம். ஒருவர் தன்னை வருத்தி போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம், அகவிடுதலையை அடைகிறார். அந்த அகவிடுதலைதான் ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கான அடிப்படை.  சத்தியத்தை விரும்பாத, பாதுகாப்பற்றச் சூழலில் இருக்கும் ஒரு அரசுதான் போராட்டங்களை விரும்பாது. அனைத்து வழிகளிலும் போராட்டங்களை அடக்க முனையும்.

இந்தப் பின்னணியில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகனின் கதையையும், இந்த அரசையும் புரிந்துகொள்ளுங்கள். ஓர் ஆரோக்கியமான, வலுவான அரசுதான் போராட்டங்களை அனுமதிக்கும், உரையாடலை விரும்பும். தினம் தினம் ஆட்சிக் குறித்த அச்சத்தில் இருக்கும் ஓர் அரசு எப்படி நியாயமான போராட்டங்களை விரும்பும்? உரையாடலை முன்னெடுத்துச் செல்ல முனையும்?  

அதனால்தான், ''இது ஜெயலலிதாவின் ஆட்சி, அவரது விருப்பங்களை நிறைவேற்றும் ஆட்சி'' என்று திரையரங்கு ‘நியூஸ் ரீலில்’ பிதற்றும் எடப்பாடியாரால், ரியலில் அதன்படி நடந்துகொள்ள முடியவில்லை. 'கடல் அலையின்  ஆற்றலை உள்வாங்கி மெழுகுவத்திகூட காட்டுத்தீயாக மாறும்' என்று அஞ்சுகிறார்.  ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைக்கிறார்.

ஜனநாயகத்துக்கான சவக்குழி

மெரினாஒரு பக்கம் போராட்டங்களை அதிகளவில் அனுமதித்ததற்காக ஜெயலலிதாவை கொண்டாடினாலும், 2014 ஆம் ஆண்டு குண்டாஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து ஜனநாயகத்தின் கழுத்தை கீறியவரும் அவரேதான். ஆங்கிலத்தில், ‘habitual offender' என்று ஒரு பதத்தை பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தை, போலீஸ் முதல் தகவல் அறிக்கையில் அதிகளவில் பயன்படுத்தப்படும். இதன் பொருள் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுபவர். இவர்கள் மீது மட்டுமே குண்டாஸ் சட்டத்தை பயன்படுத்த முடியும் என்று இருந்த நிலையை, 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் மாற்றி அமைத்தார். அதாவது, தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று இல்லாமல், முதல் முறை குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களையேகூட இந்தச் சட்டத்தின் மூலம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். 

இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டபோதே செயற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். 'இது செயற்பாட்டாளர்களையும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் ஒடுக்க மட்டுமே பயன்படும்' என்று அச்சம் தெரிவித்தார்கள். இன்று அந்த அச்சம் உண்மையாகி இருக்கிறது. வெளிப்படையாக அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டவர் மீது குண்டாஸை பாய்ச்சி இருப்பது... ஜனநாயகத்தின் கழுத்தில் கத்தி வைப்பது. 
 
“மக்களுக்கு அசெளகர்யமாக அரசு இருக்கும்போது, மெளனமாக இருப்பதைவிட பெருங்குற்றம் எதுவும் இல்லை” என்றார் காந்தி. ஆனால், இந்த அரசு நியாயமான கேள்விகள் மூலம் தனக்கு அசெளகர்யம் தரும் திருமுருகன் காந்திகள் மீது அடக்குமுறையை ஏவி வருகிறது. இந்த குண்டாஸ் மூலம், அரசு சொல்ல வரும் செய்தி... 'இன்று காந்தி, நாளை நீங்கள்! அரசுக்கு அசெளகர்யமான கேள்வியை யார் எழுப்பினாலும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்வோம்” என்பதுதான். 

இது நிச்சயம் வலுவான ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close