Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''யாரிடம் இருக்கிறது 1,000 ஏக்கர்..?'' - கேள்வி எழுப்பும் அய்யாக்கண்ணு

அய்யாகண்ணு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழக அரசு. “எங்கள் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

டெல்லியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு போராடியபோது, ''உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறோம் என்று உறுதிகொடுத்த தமிழக அரசு, விவசாயக் கடன் தள்ளுபடிக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறதே” என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆவடி குமாரிடம் கேட்டோம்.

“சிறுகுறு விவசாயிகளின் பயிர்க்கடனை நாங்கள் எப்போதோ தள்ளுபடி செய்துவிட்டோம். இவர்கள் நீதிமன்றம் சென்று வழக்குப் போட்டது, பெரிய விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லித்தான். நீதிமன்றமும் தள்ளுபடி செய்யச் சொல்லிவிட்டது. இது, தமிழக அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடுவதைப்போன்றது. அதனால்தான் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம். உரமூட்டை, விதை நெல்லுக்காகக் கடன் வாங்கிப் பயிர் செய்யும் சிறுகுறு விவசாயிகளின் நலனில் தமிழக அரசு எப்போதும் அக்கறைகொண்டுள்ளது. அதனால்தான் அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வைத்திருக்கும் பெரிய நிலப்பிரபுக்களின் விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்வது எந்தவிதத்தில் நியாயம்? விதை நெல் வாங்கக் காசு இல்லாமல் கடன் வாங்கிய விவசாயி எங்கே... நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களை உழுவதற்கு இயந்திரம் வாங்கும் பெரிய விவசாயி எங்கே? நீதிமன்றம் சென்று அவர்களின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய முயன்றால் அதைத் தமிழக அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது” என்றார்.

இதுதொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணுஅய்யாக்கண்ணுவிடம் பேசினோம். ''யார் பெரிய விவசாயி? என்னிடம் 20 ஏக்கர் நிலம் இருக்கிறது. நான் பெரிய விவசாயி என்று சொல்லலாமா? முதலில் விவசாயிகள் எப்படித் தரம் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரிய வேண்டும். பயிர் செய்யும் நிலம் சொந்த நிலமாகவோ அல்லது குத்தகை நிலமாகவோ இருக்கலாம். குறுவிவசாயிகள் என்றால், இரண்டரை ஏக்கர் நிலத்தில் பயிர் செய்பவர்; சிறுவிவசாயி என்றால், ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிர் செய்பவர்; அதற்கு மேல் இருந்தால், அவர் பெரிய விவசாயி. அப்படி என்றால் ஐந்து ஏக்கருக்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாமா என்றால், அதுதான் இல்லை. தமிழ்நாட்டில் நில உச்சவரம்புச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதாவது, 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் மட்டுமே ஒரு தனிநபர் வைத்திருக்க முடியும். புஞ்சை நிலமாக இருந்தால், அந்த 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் அப்படியே இரண்டு மடங்காகக் கணக்கிடப்படும். அதாவது, 30 ஏக்கர். அதே, நஞ்சை நிலமாக இருந்தால், 15 ஏக்கர் வெறும் 15 ஏக்கராகவே கணக்கிடப்படும். ஆக, ஒரு விவசாயி நஞ்சை நிலத்தில் 15 ஏக்கரும், புஞ்சை நிலத்தில் அதிகபட்சமாக 30 ஏக்கரும் மட்டுமே வைத்திருக்கும்போது, இவர்கள் சொல்வதுபோல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை எப்படி வைத்திருக்க முடியும்? இது ஒருபுறம் இருக்க, தற்போது, கூட்டுறவு வங்கிகளில் சிறுகுறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை மட்டுமே அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. அதே வங்கியில் வாங்கிய பெரிய விவசாயிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை? கூட்டுறவு வங்கிகளில் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய்வரை மட்டுமே கடன் வாங்கமுடியும். கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கிய 3 லட்சம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்ய அரசால் முடியும். ஆனால், நாள் முழுவதும் களத்துமேட்டில் கிடக்கும் விவசாயி வாங்கிய மூன்று லட்சம் ரூபாயைத் தள்ளுபடி செய்ய முடியாதா?  விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவர், ஐந்து ஏக்கர் ஒரு சென்ட் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்தார். அது, அவரது சொந்த நிலம்கூட இல்லை. ஆனால், ஐந்து ஏக்கருக்கு ஒரு சென்ட்  நிலம் அதிகமாக இருந்ததால், அவருக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதை எதிர்த்துதான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். வெள்ளம் வந்தால் சிறுகுறு விவசாயிகளைப் பாதிப்பதைப்போலத்தான் பெரிய விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். பெரிய விவசாயி என்று சொல்லி எங்களைப் பெரிய நிலப்பிரபுவாகக் காட்ட முயல்கிறார்கள். அது, உண்மை இல்லை. எங்களிடம் 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. அவ்வளவுதான், எங்களால் வைத்துக்கொள்ளவும் முடியும். அதைத்தான் சட்டமும் சொல்கிறது. நாங்களும் சாதாரண விவசாயிகளே என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா? தமிழகத்தில் இன்றைய தேதியில், அரசியல்வாதிகள்தான், பள்ளி, கல்லூரி, தொண்டுநிறுவனங்கள் பெயரில் ஆயிரம், ரெண்டாயிரம் ஏக்கரில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள். விவசாயி யாரும் அப்படி விவசாயம் செய்வதில்லை. ஆக, அந்தப் பெரியபெரிய அரசியல்வாதிகளை வேண்டுமானால், பெரிய விவசாயிகள் என்று சொல்லி அவர்களின் கடனைத் தள்ளுபடி செய்யாமல் இருங்கள். நாங்கள் விவசாயிகள். எங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும்வரை நாங்கள் போராடிக்கொண்டேதான் இருப்போம்” என்றார்.

விருத்தகிரிஇதுதொடர்பாக அகில இந்திய விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் விருத்தகிரியிடன் பேசினோம். “தமிழகத்தில் இருக்கும் விவசாயிகள், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களின் மொத்தத் தொகை ஒன்பதாயிரம் கோடி ரூபாய். அதை மாநில அரசால் நிச்சயம் தள்ளுபடி செய்ய முடியும். மத்திய அரசைக் கைகாட்ட வேண்டிய அவசியம் இல்லை. தமிழக டாஸ்மாக்கின் மூலம் ஆண்டுக்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் லாப வருமானம் வருகிறது. ஆக, அ.தி.மு.க அரசின் ஆட்சிக்காலத்தில் மட்டும், டாஸ்மாக் வருமானம் கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்பதாயிரம் கோடியைக் கொடுத்து விவசாயிகளின் பயிர்க்கடனை அடைக்கலாமே? ஏன் டாஸ்மாக்கையும், விவசாயிகளையும் சொல்கிறேன் என்றால், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள் கரும்பில் இருந்துதான் கிடைக்கிறது. முதல் மூலப்பொருள் எரிசாராயம். அந்த எரிசாராயம் மொலாசஸ் மூலம் கிடைக்கிறது. அந்த மொலாசஸ் கரும்புக் கழிவுகளில் இருந்து பெறப்படுகிறது. ஆக, கரும்பு விவசாயிகளால்தான் டாஸ்மாக் மூலம் இவ்வளவு பெரிய வருமானம் அரசுக்குக் கிடைத்திருக்கிறது. இதில் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையான 2 ஆயிரம் கோடி ரூபாயை அரசு இன்னும் கொடுக்கவில்லை.

ஒருமாநிலம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சமீபத்திய மூன்று உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு பதவிக்கு வந்தவுடன், 70 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தார். அதுமட்டுமல்லாமல், கிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்திருக்கிறார். எல்லாம் இயந்திரங்கள் மூலமாக நடந்தது. ஓர் இயந்திரம் மண்ணை வெட்டிப் பாதை அமைக்க, மற்றோர் இயந்திரம் அந்தப் பாதையில் சிமென்டைக் கொட்டி நேர்த்தியான, உறுதியான வழித்தடத்தை அமைக்கும். இரண்டு ஆண்டுக்கான திட்டம் அது. ஆனால், வெறும் 10 மாதங்களில் பணி முடிக்கப்பட்டது. ஒரு மாநில அரசுதானே இதைச் செய்தது? இரண்டாவது உதாரணம், தெலங்கானா மாநிலம். அங்கே முதல்வர்  சந்திரசேகர ராவ், இதுவரை 17 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறார். புதிய கடன்களும் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது உதாரணம்,  சமீபத்தில், யோகி ஆதித்யநாத் பதவியேற்ற உத்தரப்பிரதேச மாநிலத்தில் 37 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அங்கேயும் புதிய பயிர்க்கடன்கள் கொடுக்கிறார்கள். ஆக, இந்தியாவில் இருக்கும் மூன்று மாநில முதலமைச்சர்கள், விவசாயத்தின் தேவை கருதி, விவசாயிகளைக் காக்க, அவர்களின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யும்போது, தமிழக அரசு ஏன் செய்யக் கூடாது? ஏன் மத்திய அரசைக் கைகாட்ட வேண்டும்? மிக எளிமையாகச் செய்ய வேண்டிய விஷயத்தை இப்படி இழுத்தடித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்குவது கண்டனத்துக்குரியது” என்றார் நிறைவாக.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close