Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஐ.ஐ.டி வளாக வன்முறைக்கு பி.ஜே.பியே காரணம்!” கொதிக்கும் மாணவர்கள் #SpotReport

சூரஜ்

மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற மாணவர் சூரஜை கொடூரமாகத் தாக்கியவர்களை ஐ.ஐ.டி-யில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று இடதுசாரி மாணவர் அமைப்புகள், சென்னை ஐ.ஐ.டி-யை முற்றுகையிட்டனர்.  மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் விற்பனைக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதைக் கண்டித்து சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மே 29 ஆம் தேதி மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது. அதில், ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங்கில் பிஎச்.டி ஆய்வுப்பட்டம் மேற்கொண்டுவரும், கேரளாவைச் சேர்ந்த மாணவர் சூரஜ் கலந்துகொண்டார். மறுநாள் ஐ.ஐ.டி. கேன்டீனில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சூரஜை,  ஓஷன் இன்ஜினீயரிங் பிரிவில் ஆய்வுப்பட்டம் மேற்கொள்ளும், வட இந்தியாவைச் சேர்ந்த மனிஷ் உள்ளிட்ட மாணவர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். சூரஜின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சூரஜின் இரண்டு கண்கள் பகுதிகளிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. 

குவிக்கப்பட்டிருந்த காவலர்கள்

மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், அவரைத் தாக்கிய மனிஷ் உள்ளிட்டோரை ஐ.ஐ.டி-யிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் மாணவர் முன்னணி (RSYF), இந்திய மாணவர் சங்கம் (SFI), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் சென்னை ஐ.ஐ.டி-யை இன்று (மே 31) தேதி முற்றுகையிட்டன. காலை 7 மணி முதல், ஐ.ஐ.டி-யின் இரு வாயில்கள் முன்பாக நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். மாணவர்கள் தவிர வேறு யாரும் ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. காலை 10.15 மணி முதல் ஒவ்வொரு அமைப்பினராக வந்து ஐ.ஐ.டி வளாகத்தை முற்றுகையிட்டனர். சூரஜைத் தாக்கிய மனிஷ் மற்றும் அவரின் நண்பர்களை ஐ.ஐ.டி-யில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை, போலீஸார் கைது செய்தனர். அப்போது, புரட்சிகர இளைஞர் மாணவர் முன்னணியினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், புரட்சிகர இளைஞர் மாணவர் முன்னணியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கையைக் காவலர் ஒருவர் பலமாக முறுக்கிய சம்பவம் தொடர்பான காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆர்பாட்டக்காரர்கள்

சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஐ.ஐ.டி மாணவர்களில் ஒரு தரப்பினர், வளாகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். மாணவர்களுடன் ஐ.ஐ.டி-யின் டீன் சிவகுமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஐ.ஐ.டி நிர்வாகம், மனிஷ் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க முன்வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், ‘மனிஷ் மற்றும் அவரின் ஐந்து நண்பர்கள் என அனைவரையும் உடனடியாக ஐ.ஐ.டி-யை விட்டு நீக்க வேண்டும். இதற்கு சம்மதம் என்றால், நாங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம். இல்லையென்றால் போராட்டத்தைத் தொடர்வதோடு, தினமும் மாட்டிறைச்சி விழாவை நடத்துவோம்’ என்று கூறியுள்ளனர். ஐ.ஐ.டி-க்கு வெளியேயும், உள்ளேயும் போராட்டம் நடந்து வருகிறது. 

இந்த பரபரப்பான சூழலில், சென்னை ஐ.ஐ.டி-யில் படித்துவரும் சதீஷ் என்ற மாணவரிடம் பேசினோம். "மாட்டிறைச்சிக்கு எதிராக மத்திய அரசு தடை விதித்துள்ளதைக் கண்டித்து, ஐ.ஐ.டி வளாகத்தில் மாட்டிறைச்சித் திருவிழாவை நடத்தினோம். அதில், ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டனர். மறுநாள் மதியம் 2.30 மணியளவில் ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜெயின் சதீஷ்கேன்டீனில் சாப்பிட சூரஜ் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மனிஷ் ‘நேற்று நீ மாட்டுக்கறி தின்றவன் தானே... அதனால் எங்களுடைய கேன்டீனில் சாப்பிட உனக்கு அனுமதி கிடையாது... வெளியே போ’ என்று கூறியுள்ளார். அதற்கு சூரஜ், ‘ஐ.ஐ.டி வளாக கேன்டீனுக்குள் அசைவம் சாப்பிடக்கூடதென்று சட்டமில்லை. அது அவரவர் விருப்பம். இப்போது, நான் அசைவம் சாப்பிடவில்லை. சைவம் தான் சாப்பிடுகிறேன்’ என்று சொல்லியுள்ளார். அதனால் கோபமடைந்த மனிஷ், வெளியே சென்று ஐந்து பேருடன் திரும்பி வந்துள்ளார். அவர்கள், சூரஜை மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில் சூரஜின் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள் பலமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், என்றார். மேலும், அவர் கூறுகையில், "இந்த வன்முறை தொடர்பாக இன்று காலை பத்து மணிக்கு ஐ.ஐ.டி. கேரள சமீதியும், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டமும் இணைந்து அமைதியான உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. அதில் நிர்வாகத்திடம் மூன்று முக்கியக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. 'தாக்குதலில் ஈடுபட்ட மனிஷ் மற்றும் அவருக்கு உதவி செய்த மனிஷின் நண்பர்கள் அனைவரையும் உடனடியாக சஸ்பெண்டு செய்யவேண்டும் எனவும், விரிவான விசாரணையை மேற்கொண்டு இந்தத் தாக்குதலில் தொடர்புடைய அனைவரின்மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விரிவான விளக்கத்தை மாணவர் அமைப்புகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று கோரிக்கைகளையும் நிர்வாகம் ஏற்காத நிலையில் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களுடன் மாட்டிறைச்சி திருவிழாவும் நடைபெறும்' என்று அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தெரிவித்துள்ளது" என்று சதீஷ் நம்மிடம் தெரிவித்தார். 

ஆர்பாட்டத்தில் குழந்தைகள்

பெயர் சொல்ல விரும்பாத இன்னொரு மாணவர், "“சூரஜைக் கொலைவெறியோடு தாக்கிய மனிஷ், ‘தன் கை எலும்பை முறித்துவிட்டார்கள்’ என்று பொய் சொல்லி மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். மனிஷை காப்பாற்றுவதற்காக ஐ.ஐ.டி நிர்வாகம் இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். ஐ.ஐ.டி நிர்வாகத்தில் பலர் மாட்டிறைச்சிக்கு எதிரான வலதுசாரி கட்சி ஆதரவாளர்கள். சூரஜைத் தாக்கிய மாணவர்கள், ‘விவேகானந்தர் மாணவர் வட்டம்’, ‘வந்தே மாதரம் மாணவர் வட்டம்’ போன்ற அமைப்புகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுகிறது. மேலிடத்தில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதால் இவர்கள் ஐ.ஐ.டி-யில் ஆட்டம்போட்டு வருகிறார்கள். இதுபோன்ற அராஜக நடவடிக்கையில் மனிஷ் ஈடுபடுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக மூன்று முறை நிர்வாகத்தாலும், மாணவர்களாலும், அவர் கடுமையான கண்டிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனால், அரசியல் மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் ஒவ்வொருமுறையும் தப்பி வருகிறார். இந்த முறையும் எப்படியாவது அவரைக் காப்பாற்ற ஐ.ஐ.டி நிர்வாகத்தில் உள்ள சிலர் முயன்றுவருகிறார்கள். மனிஷ் மற்றும் அவரின் நண்பர்கள் ஐந்து பேரையும் ஐ.ஐ.டி-யில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படவில்லையென்றால், எங்கள் போராட்டம் வேறு மாதிரியானதாக மாறிவிடும்." என்று கூறினார்.

படங்கள்ப.பிரியங்கா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close