Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வணிக வளாக கட்டட விதிமீறல்களுக்கு யாரெல்லாம் காரணம்? - அரசுத் துறைகளின் அசட்டை

கட்டட விதிமுறை மீறல்களைத் தடுக்க சி.எம்.டி.ஏவுக்கு  மட்டுமல்ல, வருவாய்துறை, மாநகராட்சி, தீயணைப்புத்துறை, மின்வாரியம், காவல்துறை என அரசுத்துறைகளுக்கு அதிகாரம் இருந்தும் அசட்டையாக இருப்பதாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். 

 ஏதோ ஒரு அசம்பாவித சம்பவம் நிகழும்போது மட்டும்தான் விழித்துக் கொள்ளும் அரசு இயந்திரம், அதன்பிறகு அமைதியாகிவிடுவது வாடிக்கையாக உள்ளது. சென்னை, மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தபோது கட்டட வரன்முறைகள் குறித்து அதிகளவில் விவாதிக்கப்பட்டது. அதில் அதிகம் விமர்சிக்கப்பட்டது சி.எம்.டி.ஏ. தற்போது, தி.நகரில் நடந்த தீ விபத்து சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சம்பவத்தில் சி.எம்.டி.ஏ. நான்கு மாடிக்கு மேல் கட்ட அனுமதி வழங்கவில்லை என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் 5, 6, 7 ஆகிய மாடிகள் கட்டும் போது அதை ஏன் தடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலாக நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தடை வாங்கிவிட்டதாகச் தெரிவித்தார் அமைச்சர்   .
 
 கட்டடம் கட்டுவதற்கான விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளே விதிமீறல்களுக்கு முக்கியக் காரணம். அதை முறைப்படுத்தாத வரை விதிமீறல்கள் தொடர்கதையாவதையும் தடுக்க முடியாது. இது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசுக்கும் தெரிந்தாலும் 'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்ற நிலைமைதான் இந்த விதிமுறை பின்பற்றுவதில் உள்ளது. சென்னை பாரிமுனை பகுதிதான் வணிக மையமாக இருந்தது. அங்கு இருந்து தி.நகருக்கு வணிக மையம் மாறியது. தி.நகரில்  செயல்பட்ட உஸ்மான் சாலை வணிக மையம் குறுகிய, இடநெருக்கடியைக் கொண்டதாகும். இருப்பினும் மாம்பலம் ரயில் நிலையத்தால் தி.நகர் வணிக மையம் வளர்ச்சியடையத் தொடங்கியது. சில ஆண்டுகளிலேயே அசுர வளர்ச்சியை எட்டியது. புற்றீசல்கள் போல அடுக்குமாடி வணிக வளாகங்கள் எவ்வித பாதுகாப்புமின்றி கட்டப்பட்டன. விதிமீறல்கள் அப்பட்டமாக மீறப்பட்டன. அதை சி.எம்.டி.ஏ. தொடங்கி எந்த அரசுத்துறைகளும் கண்டுகொள்ளவில்லை. 

 இந்தச் சூழ்நிலையில்தான் சமூக ஆர்வலர்கள் சிலர், விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து பொது நல வழக்குகளை நீதிமன்றங்களில் தொடர்ந்தனர். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்தநிலையில் சென்னை முகலிவாக்கத்தில் புதியதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இது, சென்னை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, விதிமுறை மீறிய கட்டடங்களால் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதாகச் சொல்லப்பட்டது. விதிமுறைகள் மீறப்படுவதற்கு சி.எம்.டி.ஏ மட்டும் காரணமல்ல. வருவாய்துறை, நகராட்சித்துறை, மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, காவல்துறை என பட்டியல் நீள்கின்றன. 

 இதுகுறித்து தமிழ்நாடு சிவில் இன்ஜினீயர் ஃபோரமின் துணைப் பொதுச் செயலாளர் சட்டப்பொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜி கூறுகையில், "வழக்கமாக ஒரு கட்டடத்தை கட்டுவதற்கு முன்பு அதற்கான அனுமதி பெறப்படும். 'மல்டி ஸ்டோரேஜ் பில்டிங்' என்றழைக்கப்படும் எம்எஸ்பி கட்டடங்கள் என்றால் சி.எம்.டி.ஏ. வருவாய்துறை,  மாநகராட்சி, தீயணைப்புத்துறை, மின்வாரியம், காவல்துறை என அரசுத்துறைகளிடம் அனுமதி பெறப்படும். கட்டடங்கள் கட்ட வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறையிலேயே குளறுபடிகள் உள்ளதால் அதை விதிமீறல்களில் ஈடுபடுவோர் அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழும்போது மட்டுமே விதிமுறைகள் தூசித்தட்டப்படுகின்றன. 


 தமிழக அமைச்சர்கள், தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாகச் சொல்வதோடு அதை இடிக்க சி.எம்.டி.ஏ.நடவடிக்கை எடுத்ததாகவும் சொல்கின்றனர். தற்போது, அந்த கட்டடத்தை அரசே இடிக்கும் என்று சொல்கின்றனர். அதிகாலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எம்எஸ்பி கட்டடங்கள் கட்டும்போதே அதற்கான பாதுகாப்பு அம்சங்களும் அந்த கட்டட வரைப்படத்தில் குறிப்பிடப்படும். காற்றோட்ட வசதி, அவசர காலங்களில் செல்வதற்கான வழிகள், கட்டட உறுதித்தன்மை போன்றவைற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்த கட்டடத்துக்கான அனுமதியை வழங்கவேண்டும். ஆனால், விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி அனுமதியை பெற்றுவிடுகின்றனர். அதன்பிறகு விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் முயற்சிக்கும்போது நீதிமன்றத்தை இருதரப்பும் நாடுகின்றனர். அதற்குமுன்பே விதிமுறை மீறி கட்டடங்கள் கட்டும்போதே நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற விபரீதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஆனால், அதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் விதிமுறை மீறல் என்று சம்பந்தப்பட்ட கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்தால் விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்துவிடுகின்றனர். இதனால் கட்டட வரைமுறையில் உள்ள விதிமீறலுக்கான குளறுபடிகளை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்டடம் கட்டும்போதே உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும். நகர்புற சட்டத்தில் விதிமுறை மீறி தங்கள் எல்லைக்குள் கட்டடங்கள் கட்டப்படும் தகவலை சம்பந்தப்பட்ட போலீஸாரே தகவல் தெரிவிக்கலாம். சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய கட்டடங்கள் உள்ளன. அதையெல்லாம் கணக்கெடுத்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்"என்றார்.

முகலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு விபத்து

 

 சி.எம்.டி.ஏ. வட்டாரங்கள் கூறுகையில், "கட்டடம் சம்பந்தமான அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தவுடன் சி.எம்.டி.ஏ மீது பழிசுமத்தப்படுகிறது. விதிமீறல்களுக்கு சி.எம்.டி.ஏ மட்டும் பொறுப்பல்ல. சி.எம்.டி.ஏ., வருவாய்துறை, நகராட்சி, மின்வாரியம், தீயணைப்புத்துறை, காவல்துறை என அனைவருக்கும் விதிமீறலில் பங்குள்ளது. ஒவ்வொரு துறையின் அலட்சியமே விதிமீறல்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. அதில் அதிக பொறுப்பு சி.எம்.டி.ஏ, மற்றும் வருவாய், நகராட்சித்துறைக்கு உள்ளது என்பதை மறுக்கமுடியாது. இந்த துறையில் விதிமுறை மீறல்களுக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக விதிமீறல்களை கண்டுகொள்ளாமலிருக்க சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கப்படுகின்றனர். இதனால், விதிகள் மீறி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. மேலும், கட்டடங்கள் கட்ட வரையறுக்கப்பட்ட விதிமுறைகளையும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். விதிமுறை மீறிய கட்டடங்கள் குறித்த விவரங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அசம்பாவித சம்பவங்கள் நிகழும்போது மட்டுமே அதுகுறித்த விவாதம் நடக்கும். அதன்பிறகு அதை எல்லோரும் மறந்துவிடுவார்கள். இதனால் சி.எம்.டி.ஏ. தொடங்கி அனைத்து துறைகளிலும் விதிகள் மீறப்படுகின்றன. விதிகளுக்குட்பட்டு கட்டடம் கட்ட அனுமதி வழங்கவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்படும் அரசியல் சிபாரிசுகளால் அதிகாரிகள் அனுமதி கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்"என்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close