Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை சில்க்ஸ் தீவிபத்து: சுற்றுச்சூழலுக்கு என்ன மாதிரியான கேடுகளை உண்டாக்கும்?

சென்னை சில்க்ஸ் தீ விபத்து

சென்னை, தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கடையில்  தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணி இரவு-பகலாக நடந்து வந்தது. தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்ததால் கட்டடம் விரிசல் ஏற்பட்டது. எனினும், புகைவதைத் தடுக்க முடியவில்லை. மொத்தம் 7 மாடிகள் கொண்ட கடையானது முழுவதும் எரிந்து சாம்பலா பின்னரே தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

முதல் தளத்தில் பற்றிய தீ மற்ற அனைத்துத் தளங்களுக்கும் படிப்படியாகப் பரவியது. இதனால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக கடைக்குள் செல்ல முடியவில்லை. இதுதவிர, கட்டடம் இடைவெளி இல்லாமல் விதி மீறிக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம்வரை புகை பரவியது. தீ நகரில் ஒரு வித கருகிய மணம் வீசி வருகிறது. சமூக வலைத்தளங்களில் விதிமீறிய கட்டிடங்கள் தி.நகரில் அதிகமாக உள்ளன என்பது உள்ளிட்ட விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. இதுதவிர, பிளாஸ்டிக், நைலான் துணிகள் எரிந்ததால் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்பட்டுள்ளது எனவும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.

“துணிக்கடையில் ஏற்பட்டுள்ள தீவிபத்து அந்தக் கட்டடம் முழுவதும் பரவியது. தீயை கட்டுக்குள் கொண்டுவர இரண்டு நாள் ஆனது. அனைவருடைய கவனமும், கட்டடம் என்ன ஆகும், எப்படி விழும், என்ன விதிமீறல்கள், தீயணைப்பு துறையின் பணிகள் எனப் பலவாறு இருந்தன. மற்றொரு முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தீப்பிடித்து சுந்தர்ராஜன்எரிந்த கட்டிடம் முழுமையும் இருந்தது பாலிஸ்டர், நைலான் துணி வகைகள்தான். காட்டன் துணிகள் கால்வாசிக்கும் குறைவாகவே இருக்கும். இதுதவிரப் பிளாஸ்டிக்குகளும் இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்த மாதிரியான செயற்கை நூலிழைகளால் ஆன துணிகள் எரியும்போது, அதில் பிளாஸ்டிக்குகளைத் தூக்கி எறிந்தால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுமோ அதே பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது. அதில் டயாக்சின்ஸ் உள்படப் பல்வேறு நச்சுக்கள் வெளியாகும். அந்தக் காற்றைச் சுவாசிக்கும் மக்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களைக் கொண்டு வந்துவிடும். பொதுவாகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தி.நகர்ப் பகுதியில் காற்றில் உள்ள மாசை அளக்கும் கருவியை வைத்திருக்கும். அதன் அளவீடு குறித்த தகவல்கள் வெளியான பின்னரே அதன் பாதிப்புகள் குறித்து முழுமையாகச் சொல்ல முடியும். அந்த மாசு குறித்த அளவீடுகளை வெளிப்படையாக வைக்க வேண்டும். அந்தப்பகுதியில் உள்ள மருத்துவ மனைகளில் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களால் வரும் நோயாளிகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்பட்டுள்ள கேடுகளுக்குத் தனியாக வழக்குகள் பதிய வேண்டும். இப்படியே சுற்றுச்சூழல் குற்றங்கள் கவனிக்காமல் போனால் அடுத்தத் தலைமுறைக்கு மிகப்பெரிய பாதிப்புகளைக் கொடுக்கும். கொழுந்துவிட்டு எரிந்த தீயின் தாக்கம் பூந்தமல்லி வரைக்கும் இருந்தது" என்றார்.

தி சென்னை சில்க்ஸ்

இதுகுறித்துப் பேசிய மருத்துவர் புகழேந்தி, "இதுபோன்ற ஒரு இடம் எரிந்தால் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் வெளியாகும். இதுதவிரக் காற்றில் எந்தப்பக்கமாகப் புகை பயணிக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த தீயால், தி.நகரிலிருந்து கோடம்பாக்கம் வழியாகப் பெரும்பாலும் புகை பயணித்திருக்கிறது. இதைக் கவனித்திருக்க வேண்டியது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்தான். முதலில் ஒன்றை கவனிக்க வேண்டும். இயற்கை சீற்றங்கள் அல்லது பேரிடர்கள் ஏற்படும்போது அதற்குத் தயார் நிலையில் அரசாங்கம் இருக்க வேண்டும்.

முதலில் ஆரம்பித்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடங்கி, தி.நகரில் இதற்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்துவரை எல்லாவற்றையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் நிலையில் இல்லை. கடந்த முறை தீ விபத்து ஏற்பட்டபோது அதிலிருந்து அரசாங்கம் ஏன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. வெறும் 4 மாடிக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளும், 7 புகழேந்திமாடியாக உயரும்வரை அந்தக் கடையைக் கண்டுகொள்ளவில்லை.

இந்த நச்சுப்புகையால் கண் எரிச்சல், தோல் பிரச்சனைகள், ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறுகள் ஆகியவை ஏற்படும் இதற்கெல்லாம் யார் பொறுப்பு. அப்பகுதியைச் சுற்றி வாழும் மக்களுக்கு நோய் ஏற்படும்போது அதைத் தீர்க்க அரசாங்கம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் முழுமையாக எடுக்கவில்லை. இதுதவிர முதியோர்களும், கர்ப்பிணிப் பெண்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எவ்வளவு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், மக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவை என எதையும் வெளியில் சொல்வதில்லை. எல்லாவற்றையும் மூடி மறைக்கப்பார்க்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் உறுப்பினர், இதுபற்றி பேசும்போது, 'புற்றுநோய் ஏற்படுத்தும் டையாக்சின் போன்ற வேதிப்பொருட்களை அளக்கும் கருவிகளோ, அதன் பரவலை கணிக்கும் கருவிகளோ தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இல்லை, புதுடெல்லியில் மட்டும்தான் உள்ளது என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே தமிழக அரசு எந்த அளவில் முன்னெச்சரிக்கையுடன் உள்ளது என்பதை அறியலாம். என்றும் இங்கே எல்லாமே ஒரு வியாபாரமாகப் பார்க்கப்படுகிறது. சட்டங்களும், அதற்கான தீர்வுகளும் சரியான முறையில் கண்டறியப்படுவதில்லை. நோய்வாய்ப்பட்டால் மருத்துவமனை இருக்கிறது என்று சொல்வது அரசாங்கத்தின் வேலையல்ல. விபத்து நடக்காமல் தடுப்பதுதான் அரசின் வேலை. இந்த விபத்துக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் அந்த நிறுவனமும், அரசும், அரசு நிர்வாகமும்தான் காரணம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தி.நகரில் நடந்த விபத்தில் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் வாழும் மக்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பதிலுக்கு பிறகே உண்மைகள் தெரியவரும்" என்றார்.

இறுதியாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இயக்குநரிடம் பேச முயன்றோம். மீட்டிங் இருக்கிறது எனத் தவிர்த்தார்.

இதன் பிறகாவது தி.நகரில் இருக்கும் விதிமீறிய கட்டிடங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?..

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close