Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அரசாங்கமே மனித உரிமையை மீறுகிறது!' - பி.யூ.சி.எல் தரும் ஆதாரம்

திருமுருகன் காந்தி

சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மாதம் 21-ம் தேதி, 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி' நடைபெற்றது. சென்னை மாநகர காவல்துறையின் தடையை மீறி இந்த நிகழ்வை நடத்தியததாகக் கூறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர் போலீஸார். இதனிடையே கடந்த 29-ம் தேதி இந்த நான்கு பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டிக்கும்விதமாக, 'நினைவேந்தல் நடத்திய இவர்களை எப்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்?' என்று பொதுமக்கள் தமிழக அரசு மற்றும் காவல்துறையினருக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது, 'மனித உரிமை மீறல்' எனக்கூறி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது மக்கள் சிவில் உரிமைக் கழகம். அதில், ''இன்றைய காலத்தில், குண்டர் சட்டம் என்பதே மிகப்பெரிய மனித உரிமை மீறல்தான். ஏனென்றால், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு வேண்டாதவர்களைப் பழி தீர்த்து வருகிறது தமிழக அரசு'' என்று ஆவேசமானார்கள். 

மேலும் அவர்கள் இவ்விஷயம் குறித்துப் பேசியதாவது, "தடுப்புச் சட்டங்கள் என்ற பெயரில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மிசா, தடா, என்.எஸ்.ஏ., யு.ஏ.பி.ஏ. போன்ற சட்டங்களைப் போலவே 1982-ம் ஆண்டில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டதுதான் இந்தக் குண்டர் தடுப்புச் சட்டம். தொடர் குற்றவழக்கில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகத்தான் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், உரிமைக்காகப் போராடுபவர்கள், செயற்பாட்டாளர்கள், கருத்து பேசுபவர்கள் மீதும் அரசாங்கம் குண்டர் சட்டத்தை ஏவி வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான செங்கோடன் மீது தமிழக காவல்துறை குண்டர் சட்டத்தை ஏவி கைது செய்தது. அந்தச் சட்டத்தை எதிர்த்து அவர் உச்ச நீதி மன்றம் சென்றார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 'தவறான முறையில், செங்கோடன்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது' என்று தீர்ப்பளித்தது. அத்துடன் அவருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அறிவித்தது. இதையடுத்து குண்டர் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதில், 'இணையவழி தொடர் குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்ற குற்றங்களுக்குக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யலாம்' என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இப்போது இந்த விதிகளையும் பயன்படுத்தி சமூக செயற்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவி வருகிறது தமிழக அரசு.  இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது! ஏனென்றால், ஒருவர் மீது 'முதல் தகவல் அறிக்கை' கொடுக்கப்பட்டதை வைத்தே 'குற்றம் சாட்டுவது, கைது செய்வது, அதனையொட்டி குண்டர் சட்டம் போடுவது' போன்ற நடவடிக்கைகளை எடுக்கமுடியாது என்பதுதான் உண்மை. அவ்வாறு சட்டங்கள் பாய்ந்தால், அது வாழ்வதற்கும், சுதந்திரமாக செயல்படுவதற்குமான அரசியல் சட்டம் 21-வது அம்சத்தை மீறுவதாகும்.

பத்திரிகையாளர் சந்திப்பு

ஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில், 'ஒரு வழக்கில் ஒவ்வொரு சட்டப்பிரிவையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும்' என்று அடிப்படை உரிமைகளை இணைத்துப் பார்ப்பதற்கு எதிரான தீர்ப்பு இருந்தது. ஆனால், 1978-ல் மேனகா காந்தி வழக்கில், அரசியல் சட்டப் பிரிவுகளைத் தனித்தனியாக பிரித்துப் பார்க்கக்கூடாது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதனால் இன்றைய குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளில், அரசியல் சட்டப் பிரிவுகள் 19 மற்றும் 21 ஆகியவை மீறப்படுகிறது. 

மேலும், காவல்துறை அதிகாரிகளின் சொந்த நோக்கத்துக்காக தற்போது குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது தமிழக அரசு சொல்லிவரும் குற்றசாட்டு என்னவென்றால், 'அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சட்டங்களை மதிக்காமல், ஆர்ப்பாட்டம் செய்தனர்' என்கிறார்கள். உண்மையில் எந்த குடிமகனும், எந்த ஒரு அமைப்பும், ஆர்ப்பாட்டம் செய்ய அடிப்படை உரிமை உண்டு என்று அரசியல் சட்டத்தின் அடிப்படை விதிகள் சொல்கின்றன. சிக்கலான சூழ்நிலைகளில் வேண்டுமானால், 'தங்களின் அனுமதி பெற்றுதான் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடியும்' என்று காவல்துறை சொல்வதற்கு உரிமை இருக்கிறது. இதனை நகர்ப்புறங்களில் அமுல்படுத்த '40[1]சிட்டி போலீஸ் ஆக்ட்' என்று அழைப்பார்கள். இத்தகைய நகர காவல் சட்டத்தினையும் 15 நாள்களுக்குத்தான் அமுல்படுத்த முடியும். ஆனால், சென்னை காவல்துறை வருடம் முழுவதும் எப்படி அந்தச் சட்டத்தை அமலில் வைத்திருக்க முடியும்? இதுவே சட்டப்படி தவறாகும்.

எனவே, நினைவேந்தல் நிகழ்ச்சி செய்ததற்கு ஒருபோதும் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது. அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே பொய்யான குற்றம் சுமத்தி குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்'' என்று மக்கள் சிவில் உரிமைக் கழகத்தினர் கூறினர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close