Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எழில் கொஞ்சும் மலை... குளுகுளு குற்றாலம்... குதூகலத்தில் சுற்றுலாப் பயணிகள்!

கேரளாவில் தென் மேற்குப் பருவமழை தொடங்கியதால், நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நீர் விழத் தொடங்கியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்யும் மழை காரணமாக மலைகளின் மீதிருந்து ஓடிவரும் தண்ணீர் அருவியாகக் கொட்டுகிறது. வழக்கமாக, ஜூன் மாதத்தில் தொடங்கும் சீசன் ஆகஸ்ட் வரையிலும் நீடிக்கும். குற்றால சீசன் சமயத்தில் குளு குளுவென வீசும் தென்றலுடன், பூத்துளியாய் செல்லெனப் பெய்யும் சாரலும் மனதுக்கும் உடலுக்கும் வலுசேர்க்கும். இந்த சீசனை அனுபவித்து ரசிப்பதற்காகவே பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக மலைப் பகுதியில் மழை பெய்கிறது. அத்துடன் குற்றாலத்தில் இதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகக் குற்றாலத்திலுள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் வந்ததால் நேற்றிரவு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், காலையில் அந்தத் தடை விலக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் அருவிகளில் குவிந்து வருகிறார்கள்.

குற்றாலத்தின் பிரதான அருவி மட்டும் அல்லாமல் குழந்தைகள் விரும்பும் புலி அருவியிலும் கூட்டம் அதிகமாகவுள்ளது. அத்துடன், ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுக்கிறது. குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு, சீகைக்காய், எண்ணெய் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை உள்ளதால், அதைத் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். கூட்டம் அதிகம் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

எழில் கொஞ்சும் மலைப்பகுதியும் மனதைக் கொள்ளை கொள்ளும் சீதோஷ்ண நிலையும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close