Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இழுத்தடிக்கும் அரசு கனிமவளத் துறை நிறுவனம்... கலங்கும் ஊழியர்கள்!

ஊழியர்கள்

மிழ்நாடு கனிம நிறுவனத்திலிருந்து வேலை இல்லை என்று கட்டாயப்படுத்தி விரட்டப்பட்ட சுமார் 200 தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழ்நிலை இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அவர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் என அறிவித்திருந்தாலும், அதையும் ஏற்காமல் தமிழ்நாடு கனிமவளத் துறை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதனால் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் எலிக்கரடு கருங்கல் அணை, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள பேவனூர் குவாரி, கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தாரப்பள்ளி குவாரிகளில் தமிழ்நாடு கனிம நிறுவனம் கிரானைட் மற்றும் கற்களை வெட்டி எடுத்துவருகிறது. இங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் மேஸ்திரிகள் மற்றும் கற்களை வெட்டியெடுக்கும் ஆட்கள் என 200-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை விஜயன் செய்துவந்தனர். இவர்களைக் கடந்த 1989-ம் ஆண்டு நிர்வாகம் எந்தவோர் அறிவிப்பும் இன்றி வேலையைவிட்டு நீக்கியது. இந்த நிலையில் நீதிமன்றங்கள் நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளும்படி நிர்வாகத்திடம் அறிவித்தும் நிர்வாகம் மறுத்தது. இந்த நிலையில் பணிநேக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் பல ஆண்டுக்காலம் டாமினில் (TAMIN) வேலை செய்து வந்ததால் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்கிறோம் என்று நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அறிவித்த அந்தத் தொகையையும் தொழிலாளர்களுக்குத் தராமல், அவர்களை அலைகழித்து வருகிறது டாமின் நிறுவனம். 

இதுபற்றித் தமிழ்நாடு கனிம நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் செயலாளார் விஜயனிடம் பேசியபோது, "பல ஆண்டுகளாக அந்த மூன்று குவாரிகளிலும் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் 'பீஸ் ரேட் தொழிலாளர்கள்' மற்றும் மேஸ்திரிகள் வேலை செய்துவந்தனர். கடந்த 1989-ம் ஆண்டு 200-க்கும் அதிகமான தொழிலாளர்களை நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலையைவிட்டு நீக்கியது. இந்தத் திடீர் அறிவிப்பால் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலை என்னவாவது என்று நிர்வாகத்திடம் கேட்டபோது, 'இனி கான்ட்ராக்ட் முறையில்தான் தொழிலாளர்கள் பணியில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அதனால் உங்களுக்கு இங்கு வேலை கிடையாது' எனத் தெரிவித்தது. எவ்வளவோ முறையிட்டும் அவர்களிடம் இருந்து நல்ல பதில் வரவில்லை. அதனால் லேபர் கமிட்டிக்குச் சென்று முறையிட்டோம். அது, 'பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாகப் பணி வழங்க வேண்டும்' என்று  அறிவித்தது. ஆனால், டாமின் நிர்வாகம் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாங்களும் பல ஆண்டுகளாகப் போராடிவிட்டோம். மீண்டும் இதுபற்றித் தீவிரமாகப் போராட ஆரம்பிக்கும்போது கடந்த 2012-ம் ஆண்டு டாமின் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. அங்குத் தொழிலாளர்களை வேலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டாமினுக்கு உத்தரவிட்டது. அதைப் பற்றியெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத நிர்வாகம், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும், 'பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாகப் பணியில் அமர்த்த வேண்டும்' என்று அறிவித்தது. 

கல் குவாரி

உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அறிவித்தபோதிலும் டாமின் நிர்வாகம் வேலையில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று அறிவித்தது. 2016-ம் ஆண்டு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைத்து டாமினுக்கு எதிராகப் போராடிவந்தோம். அப்போது டாமின் எங்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதில், 'தொழிலாளர்கள் அனைவருக்கும் இன்றைய தேதியில் 55 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால், அவர்களால் பணி செய்வது சிரமமாக இருக்கும். ஆகையால், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் தருகிறோம். இந்தப் பிரச்னையை விட்டுவிடுங்கள்' எனக் கேட்டுகொண்டது. 'தொழிலாளர்கள் பலருக்கும் 55 வயதுக்கு மேல் ஆகிவிட்டது' என்பதைக் கருத்தில்கொண்டு நாங்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்தோம். ஆனால், இன்றுவரை டாமின் நிர்வாகம் எந்தவொரு தொழிலாளருக்கும் ஒரு பைசாக்கூட தரவில்லை. இதுபற்றிக் கனிமவளத் துறையில் பலமுறை மனுக்கொடுத்தோம். ஆனால், யாருமே இந்தப் பிரச்னையைக் கண்டுக்கொள்ளவில்லை. இன்று வேண்டுமானால், தொழிலாளர்களுக்கு 55 வயதுக்கு மேல் ஆகியிருக்கலாம். ஆனால், 1989-ம் ஆண்டு அவர்கள் அனைவருமே மிகச்சிறந்த இளம்வயது தொழிலாளர்கள். இத்தனை வருடங்கள் அவர்கள் பணியில் இருந்தால், இந்தப் பணத்தைவிட இன்னும் அதிகமாகச் சம்பாதித்து இருக்க முடியும். ஆனால் கடைசிக்காலத்திலாவது இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் வாழட்டுமே என்ற ஓர் எண்ணம்கூட அந்த நிறுவனத்திடம் இல்லை. இதுபற்றி யார் யாரிடமோ புகார்கொடுத்தும் பயனில்லை" என்றார். 

தற்போது வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு டாமின் கொடுப்பதாகச் சொன்ன தொகையைப் பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சிகள் எடுப்பார்களா? 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close