Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அட்டாக் பாண்டிக்கு என்னாச்சு..?

தி.மு.க.ஆட்சியில், மதுரையில் அழகிரியின் ஆதரவில் செல்வாக்கோடு வலம் வந்த அட்டாக் பாண்டி, தற்போது உடல் நலமில்லாமல் மதுரை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அழகிரியின் வலதுகரமாகத் திகழ்ந்த பொட்டு சுரேஷ் கொல்லப்பட்ட வழக்கில், முதல் குற்றவாளியாக காவல்துறையால் அறிவிக்கப்பட்ட அட்டாக் பாண்டியை, இரண்டு வருட தேடலுக்குப் பிறகு கடந்த ஆண்டு மும்பையில் கைதுசெய்தனர். விசாரணைக்குப் பின் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டவர் மீது, மேலும் பல வழக்குகளைப் பதிவுசெய்து, குண்டர் சட்டத்தையும் போட்டது காவல்துறை.


குண்ட சட்டத்தை சட்டரீதியாக உடைத்தவர், மற்ற வழக்குகளிலிருந்து ஜாமீன் கேட்டு பல முறை மனு தாக்கல்செய்தார்.  இந்த நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கும் தினகரன் நாளிதழ் எரிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், "தன் கணவருக்கு உடல் நலமில்லை, அவரை மதுரை சிறைக்கு மாற்றவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடுமாறு" அவர் மனைவி தயாளு, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல்செய்தார். அதை, அவசர மனுவாக எடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. 


இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் உடல் நலம் குன்றிய அட்டாக் பாண்டியை, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். "முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை, தன் கணவர் உயிருக்கு ஆபத்து, காப்பாற்றுங்கள் ..." என்று பாண்டி மனைவி கவர்னருக்கும் முதல்வருக்கும் இரண்டு நாள்களுக்கு முன் மனு அனுப்பினார்.


இந்த நிலையில்தான், அட்டாக் பாண்டியை பாளையங்கோட்டை மருத்துவமனையிலிருந்து நேற்று  மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவருக்கு பித்தப்பையில் கல் உள்ளது, அதை அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றும், நுரையீரல் பிரச்னை உள்ளது என்றும் மஞ்சள் காமாலை தாக்கியுள்ளது என்றும் பல்வேறு விதமாக மருத்துவர்கள் கூறியதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.


"அரசு மருத்துவமனை வேண்டாம்; பாண்டிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று" அவருடைய உறவினர்கள் கூறிவருகிறார்கள். உண்மையிலயே அவர் உடம்புக்கு என்ன பிரச்னை? அடுத்து என்ன சிகிச்சை? என்பதை மருத்துவர்கள்  விரைவில் அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close