Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாரியப்பன் மீது சதீஷ்குமார் குடும்பத்தினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

சதீஷ்குமாரின் மரணத்துக்குக் காரணமான மாரியப்பன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டம், டேனீஷ்பேட்டை அருகே உள்ள பெரியவடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் கார்மீது மோதியுள்ளார். இதில் அவரது கார் சிறிது சேதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சதீஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து சேதமடைந்த காரை சரி செய்வதற்கான செலவை சதீஷ்குமாரே ஏற்கவேண்டும் என்று கேட்டு மாரியப்பனும், அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து சதீஷ்குமாரின் வீட்டுக்குச் சென்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று சதீஷ்குமாரின் சடலம் அவரது வீட்டருகில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே காணப்பட்டது. தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் சௌரிராஜன் புகாரின் பேரில் சேலம் ரயில்வே போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, சதீஷ்குமாரின் குடும்பத்தினர் ரயில்வே காவல் நிலையத்துக்குச் சென்று, சதீஷ்குமாரின் மரணத்துக்குக் காரணமான மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், தங்களின் புகார்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், பிரேதப் பரிசோதனை செய்யும்போது வீடியோ பதிவு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததுடன், அதுவரை சதீஷ்குமாரின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும், சடலத்தை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தனது கார் சிறிது சேதமடைந்ததைச் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்ட மாரியப்பன் சதீஷ்குமாரின் செல்போனையும் பிடுங்கிக் கொண்டு சென்றதாக சதீஷ்குமாரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close