Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனைத்து அமைச்சர்களின் அறையிலும் முதல்வர் படம்! அதிரடியைத் தொடங்கினார் பழனிசாமி

தமிழக அமைச்சர்கள் அனைவரின் அறைகளிலும் முதல்வர் பழனிசாமி படங்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் பழனிசாமி படமும் வைக்கப்பட்டுள்ளது, தினகரன் ஆதரவாளர்களை அதிரவைத்துள்ளது.

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற பன்னீர்செல்வம் அணியைக் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் செயல்பட்டுவருகின்றனர். முதல் கட்டமாக, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து தள்ளிவைப்பதாக பழனிசாமி அணி அறிவித்தது. அதை, பன்னீர்செல்வம் அணியினர் வரவேற்றாலும், கட்சியிலிருந்து இரண்டுபேரையும் நீக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இந்த நிபந்தனையால், பழனிசாமி அணியினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரனை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்து, திகார் சிறையில் அடைத்தனர். ஒரு மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது, கட்சியை விட்டு யாரும் என்னை நீக்கவில்லை. கட்சிப்பணியைத் தொடரவுள்ளேன்" என்று அதிரடியைக் கிளப்பினார் தினகரன். சென்னை வந்த அவர், பெங்களூரு சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து தள்ளிவைத்தது வைத்ததுதான். கட்சி செயல்பாட்டில் தலையிட்டால், விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டியைத் தொடர்ந்து, "இன்னும் 60 நாள்கள் காத்திருக்கும்படி சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார். இந்த நாள்களில் கட்சி எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். கட்சி சரியாகச் செயல்படவில்லையென்றால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று கூறி அதிரடியைக் கிளப்பினார் தினகரன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் பழனிசாமி தலைமையில் செயல்பட முடிவுசெய்திருப்பதாகவும் தெரிகிறது. அனைத்து அமைச்சர்களின் அறையிலும் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போதைய முதல்வர் பழனிசாமியின் படம் இல்லாமலிருந்தது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமி அரசு பதவியேற்று 100 நாள்கள் கடந்தநிலையில், அனைத்து அமைச்சர்களின் அறை மற்றும் ஆளும்கட்சி எம்எல்ஏ-க்களின் அறைகளிலும் முதல்வர் பழனிசாமியின் படம் இன்று வைக்கப்பட்டது.

சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியிலிருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, தங்களது அறையில் முதல்வர் பழனிசாமியின் படத்தை வைத்திருப்பது, இரண்டு பேரின் ஆதரவாளர்களையும் அதிரவைத்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close