Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பள்ளி மாணவிகளின் சீருடையில் சர்ச்சை... ஃபேஸ்புக் பதிவால் தீர்வு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில்,  சாதாரண  ஒரு முகநூல் பதிவு கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள எரட்டுப்பேட்டைப் பெண்கள் பள்ளியின் சீருடையையே மாற்றிவிட்டது.   

அந்த மாநிலத்தைச் சேர்ந்த திருமணப் புகைப்படக் கலைஞர் சக்காரியா பொன்குன்னம் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை முகநூலில் ஒரு பதிவிட்டார். அதில், மூன்று பள்ளி மாணவிகள் சீருடையுடன் இருப்பது போன்ற படம் வெளியானது. அந்தப் பெண்களின் முகங்கள் அவர்களின் பிரைவஸியைக் காக்கும்நோக்கில் மறைக்கப்பட்டிருந்தன. எரட்டுபேட்டை நகராட்சியில் உள்ள 'அருவித்துறை புனித அல்போன்ஸா பப்ளிக் பள்ளி'யைச் சேர்ந்த மாணவிகள் அவர்கள் என்றும், இந்தச் சீருடை இந்த ஆண்டு அந்தப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகின.

இதை முகநூலில் வெளியிட்ட  சக்காரியா "என் நண்பர் எரட்டுபேட்டையிலிருந்து அனுப்பிய மாணவர்களின் புதிய சீருடைகளின் படம் இது. அவர்களின் பிரைவஸியைக் காக்கும்வண்ணம் முகத்தை மறைத்துள்ளேன்.  இப்படி ஒரு அபத்தமான உடையைப் பெண்கள் பள்ளி எப்படித் தேர்வுசெய்தது? இதற்கு எதிரான கருத்துகளைப் பதிவுசெய்வதன் மூலம் இந்தச் சீருடையை மாற்ற அந்தப் பள்ளியை நிர்பந்திக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இது உடனடியாக இணையம் முழுவதும் வைரலாக, பள்ளிக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து சக்காரியாவைத் தொடர்புகொண்டு இந்த பதிவை நீக்குமாறு கேட்டுக்கொண்டனர். அந்தப் பள்ளியைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் இது உளவியல்ரீதியான பிரச்னையை உருவாக்கும் என அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரும் 'மாணவர்களில் நலன் கருதித்தான் இந்த முகநூல் தகவலைப் பதிவுசெய்தேன். இப்போதும் அவர்களின் நலன் கருதியே நீக்குகிறேன்" என்று சொல்லி, அதை நீக்கினார். 

அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் ரோஸ்லி, "அந்தச் சீருடை எங்கள் பள்ளிக்குரியதே அல்ல. அது போட்டோஷாப் செய்யப்பட்ட படம். எங்களின் வழக்கமான சீருடையிலிருந்து நிறையவே மாறுபட்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள படம்" என்று தெரிவித்துள்ளார். 

கேரளா யூனிபார்ம்

"அப்படி ஒரு முகநூல் பதிவிடும் வரை,  இந்தச் சீருடையால் எந்தக் குழப்பமும் தவறான கருத்தும் எழவில்லை என்பதுதான் உண்மை. இந்தச் சீருடையைத் தேர்வுசெய்ய ஒப்புதல் அளித்தது பெற்றோர் - ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த நாங்கள்தான். பல நூறு மாதிரிகள் கொண்ட புக்லெட்டை அளித்தனர். அதிலிருந்து இந்தச் சீருடை வடிவத்தை நாங்கள்தான் தேர்வுசெய்தோம். அதன் பிறகு பள்ளியின் சார்பில் துணி வாங்கி தைத்துத் தரப்பட்டது. இதில் உள்ள குறைகள் பார்ப்பவர்களின் பார்வை சம்பந்தப்பட்டது" என்று இந்தப் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவரான சாபு சிராக் தெரிவித்திருந்தார். 

சக்காரியாவின் அந்த முகநூல் பதிவு நீக்கப்பட்டாலும், அதன் பிறகு பல்வேறு நிலைகளிலும் இந்தச் சீருடை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுவந்தன.  இதைத் தொடர்ந்து நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த சாபு சிராக் "நாங்கள் இந்தச் சீருடையை மாற்றுவதாக முடிவுசெய்துவிட்டோம். வெளியே நடக்கும் வாதங்களால் எங்கள் பள்ளியின் பிள்ளைகள் மனரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, 5 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகளின் சீருடையின்மேல் பெரிய ஓவர்கோட் அணிந்து வரச்சொல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செலவை பள்ளியே ஏற்கும்" என்று தெரிவித்துள்ளார். 

"சாதாரண செய்தியான இதை, குறிப்பிட்ட முகநூல் பதிவுதான் சர்ச்சையாக்கிவிட்டது. இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரள மகளிர் ஆணையத்திலும் புகார் அளிக்கப்படும்" எனப் பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆண்டு முழுவதும் அபத்தமான உடையை மாணவிகள் அணிந்து செல்வதைத் தடுத்தது குற்றமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close