Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“வால்ஸ்ட்ரீட்டும்....மெரினாவும்...!” திரைப்படமாகிறது ஜல்லிக்கட்டு போராட்டம்!

“நீங்கள் மெரினா போராட்டத்தின் வீச்சை எந்த அளவுக்கு உணர்ந்தீர்கள் என்று தெரியவில்லை... ஆனால், மெரினா போராட்டத்துக்குப் பிறகு உலகமே தமிழகத்தை இன்னும் வியப்புடன்தான் பார்க்கிறது. அலங்கார மொழிகளால், தமிழக இளைஞர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காகவெல்லாம் சொல்லவில்லை. உண்மையில், உலகின் முக்கிய ஊடகவியலாளர்கள் எல்லாம் அந்த போராட்டத்தைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். உலகத்தின் முக்கியமான பத்து போராட்டங்கள் நாளை பட்டியலிடப்பட்டால், அதில் இந்த ஜல்லிக்கட்டு போராட்டமும் இருக்கும்!” - பட்டாசாக பேசுகிறார் இயக்குனர் சந்தோஷ். 

ஜல்லிக்கட்டு

கோலிவுட்டில் பி.சி.ஸ்ரீராம் தொடங்கி ஹாலிவுட் வில்மோஸ் சிங்மோண்ட்வரை பலரிடம் சினிமா பயிற்சி பெற்றவர். 'Ghost in the darkness', 'Playing by heart', 'Rush Hour' என பல படங்களில் ஒளிப்பதிவு உதவியாளராக பணியாற்றியவர் இயக்கும் முதல் சினிமா,  “ஜல்லிக்கட்டு”. அண்மையில், இந்தப் படத்தின் 'ஃப்ஸ்ட் லுக்' போஸ்டரை நியூயார்க் ‘வால் ஸ்ட்ரீட்’ காளை சிலை அருகே வெளியிட்டுள்ளார். அவரிடம் பேசினோம்...

"ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மெரினாவில் வெளியிட்டு இருந்தாலாவது பொருத்தமாக இருந்திருக்கும்... அது என்ன வால்ஸ்ட்ரீட்டில் வெளியீடு...?"

"நண்பா... அங்கு வெளியிடுவதைவிட, இங்கு வெளியிடுவதுதான் மிகவும் பொருத்தமானது. நியூயார்க்கில் 2011-ம் ஆண்டு நடந்த “Occupy Wallstreet" போராட்டத்துக்கும், மெரினா போராட்டத்துக்கும் பல நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. அந்த சமயத்தில் நான் நியூயார்க்கில் வசித்தவன் என்பதால், அந்தப் போராட்டம் எப்படி முன்னெடுக்கப்பட்டது என்பதை நன்கறிவேன். சமூக ஊடகங்கள் மூலமாக மக்கள் திரண்டது, கோரிக்கையே தலைமை, ஒருங்கிணைப்பு, போராட்டக்களத்திலேயே இசை, ஆட்டம் என இரண்டு போராட்டங்களுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் மெரினா போராட்டம் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாகத் தெரியும். ஆனால், அது கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டம். 'கோக்' தொடங்கி, பீட்டா வரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான குரல்தானே மெரினாவில் ஒலித்தது. அதேபோல வால்ஸ்ட்ரீட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிர்ப்புக்குரல்தான் ஒலித்தது. இதற்காகத்தான், தமிழகத்தில் உள்ள காளைகளைப் பெருமைப்படுத்தும் வகையில், வால்ஸ்ட்ரீட் காளை அருகே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ வெளியிட்டு இருக்கிறோம். 

ஜல்லிக்கட்டு


"சரி... இதை சினிமாவாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது...?"
"உண்மையாகப் பேச வேண்டுமென்றால், முதலில் சினிமா எடுக்க வேண்டும் என்றெல்லாம் எந்த எண்ணமும் எனக்கு இல்லை. நானும் லட்சக்கணக்கான மக்களில் ஒருவனாகத்தான், அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். ஆனால், இரண்டு நாட்களிலேயே அதில் சினிமாவுக்கான ஒரு உயிர்ப்பான கதை இருப்பதை உணர்ந்தோம். ஒவ்வொரு மனிதரிடமும் கனமான கதை இருக்கிறதுதானே... லட்சக்கணக்கானவர்கள் கூடினார்கள்... எப்படி கதையில்லாமல் இருக்கும்...?"

"போராட்டத்தை ஒரு டாக்குமென்டரி படமாக வேண்டுமானால் எடுக்க முடியும். ஒரு சினிமாவாக என்றால், போராட்டத்தை, வசதிக்கு ஏற்ப திரிக்க வேண்டியிருக்குமே...?"

"ஆம்...உண்மைதான். ஆனால், நாங்கள் எதையும் திரிக்கவில்லை. கதை சொல்லும் பாணியின் நேர்மையான யுக்தியை கடைப்பிடித்து, என்ன நடந்ததோ...எது உண்மையோ அதை அப்படியே சொல்லி இருக்கிறோம். படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் அந்த போராட்டக் களத்தில் தாங்களும் ஒருவராக இருப்பதுபோல நிச்சயம் ஒரு உணர்வு ஏற்படும்".

ஜல்லிக்கட்டு
 

"படத்திற்காக வேறென்ன ஆய்வு செய்தீர்கள்...?"

" ‘தமிழன்டா’ என்ற வார்த்தையும், கருப்புக் கொடியும்தானே, மெரினாவைநோக்கி மக்கள் அனைவரையும் ஈர்த்தது; ஒன்றிணைத்தது. ஆனால், யார் அதை வடிவமைத்த நபர் என்று நமக்கு தெரியாதுதானே. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் அவரை நாங்கள் கண்டுபிடித்து, அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதுபோல, பல நெகிழ்ச்சிகளும், சுவாரஸ்யங்களும் இந்தப் படத்தில் இருக்கின்றன".

"எல்லாம் சரி... இது பல லட்சம் இளைஞர்கள் கூடிய போராட்டம். மீண்டும் செட் அமைத்து, அத்தனை இளைஞர்களை திரட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று... எப்படி சமாளித்தீர்கள்?"

"நானும், என் உதவியாளர்களும், போராட்டக்களத்தில் தங்கி பத்துக்கும் மேற்பட்ட காமிராக்களில் எடுத்த பதிவுகள் இருக்கின்றன. இந்தப் பதிவுகளே ஏறத்தாழ 100 மணி நேரத்துக்கும்மேல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், ஊடகங்களிலிருந்தும் முக்கியக் காட்சிகளை வாங்கினோம். தேவையான காட்சிகளை மட்டும் மீண்டும் எடுத்திருக்கிறோம்".

"படத்தில் வேறன்ன சிறப்பு...?"

ஜல்லிக்கட்டு
 

"முதன்முதலாக ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் எடுக்கப்பட்ட படம் இதுதான். மற்றொன்று, உலகத்திலேயே அதிக நபர்கள் ஒரு ஃப்ரேமில் இருக்கும் படமாகவும் இதுதான் இருக்கப்போகிறது. 'காந்தி' படத்தில் மூன்று லட்சம் பேர் ஒரு ஃப்ரேமில் இருந்தார்கள். இந்த படத்தில் 10 லட்சம் பேருக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள். இந்தப் படம் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு மேற்பார்வையில் எடுக்கப்பட்டது.

"சரி...படத்திற்காக பெரும் ஆய்வெல்லாம் செய்திருக்கிறீர்கள். மனதிலிருந்து சொல்லுங்கள். ஜல்லிக்கட்டு வெற்றிப் போராட்டமா, தோல்வி போராட்டமா...?"

"நம்பிக்கைக்கான போராட்டம்!".

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close