Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு பள்ளிகளும்... இன்னும் முடியாத சீருடை தைக்கும் பணிகளும்!

அரசுப்பள்ளி சீருடை


ரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை மாற்றம் இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் இருக்காது; ஒவ்வொரு மாணவருக்கும் 2 செட் பழைய சீருடைகள் வழங்கும்வகையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. 

மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை சுமார் 48 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு அரசின் சார்பில் நான்கு செட் இலவச சீருடை வழங்கப்பட்டுவருகிறது. 2012 ஆம் ஆண்டுவரை இரண்டு செட் உடைகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்ததை மாற்றி, கடந்த ஐந்து ஆண்டுகளாக நான்கு செட் சீருடைகள் வழங்கப்பட்டுவருகின்றன. கடந்த கல்வியாண்டில் இதற்காக 409.3 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

இந்த கல்வியாண்டுக்கான உடைகள் தைக்கும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. இதற்கான துணியை கோஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து, மாவட்ட சமூகநலத் துறையின் கட்டுப்பாட்டில் அந்தந்த மாவட்டங்களில் சீருடை தைப்பதற்காக அனுப்பப்படும். இந்தப் பணியை மேற்கொள்வதற்காக, சமூகநலத் துறையில்  தொழில்துறை தகவல்தொடர்பு அலுவலர் எனும் அலுவலர் செயல்பட்டுவருகிறார். மாவட்ட அளவில் செயல்படும் மகளிர் தையல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாவட்டத்துக்குத் தேவையான மொத்த சீருடைகளையும் தைத்து கல்வித்துறையிடம் வழங்கப்படும்.

இதில், 5ஆம் வகுப்புவரை படிக்கும் ஆண் பிள்ளைகளுக்கான சட்டைக்கு 13.80 ரூபாயும் பெண் பிள்ளைகளுக்கான சட்டைக்கு 18.45 ரூபாயும் தையல்கூலியாக வழங்கப்படுகிறது. இதுவே உயர்நிலைப் பள்ளி (இருபாலர்) மாணவர்களுக்கான உடைக்காக 46.15 ரூபாய் தையல்கூலியாகத் தரப்படுகிறது. 

இந்த தையல் கூட்டுறவு சங்கங்களில் ஆளும் கட்சிக்காரர்களே பெரும்பாலும் பதவிக்கு வருவதும் அவர்களின் சில எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாத தையல் கூட்டுறவு சங்கத்தினருக்கு தொந்தரவுகள் ஏற்பட்டு, சீருடை தயாரிப்பில் தாமதம் ஆனதும் உண்டு. கடந்த ஆண்டு இந்தப் பிரச்னையால் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அந்தக் குறை இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என பெற்றோரும் பொதுக்கல்வி ஆர்வலர்களும் வலியுறுத்தினர். 
இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறையில் அண்மையில் நடந்த மாற்றங்களை அடுத்து, சீருடை தைக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. மே 26ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் 2 செட் சீருடைகள் தயார்செய்யப்படவேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டது. அதன்படி தொடர்ச்சியாக வேலையில் ஈடுபட்டு கூட்டுறவு சங்கத் தையலர்கள், தங்களுக்கு தரப்பட்ட காலத்திற்குள் 2 செட் சீருடைகளைத் தைத்துமுடித்தனர். 

சீருடை

சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விதிக்கப்பட்ட காலத்திற்குள் சீருடைத் தைக்கும் பணியை முடித்துவிட்டனர். இதைப் போலவே மற்ற மாவட்டங்களிலும் தைக்கப்பட்ட சீருடைகள் பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவருகின்றன. 

மீதமுள்ள 2 செட் சீருடைகளும் வரும் அக்டோபருக்குள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்றவகையில் தயாரித்து வழங்கப்படும் என்றும் சமூகநலத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


எனவே இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் புதிய சீருடை வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

முன்னதாக, கடந்த மே 20ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வரும் கல்வியாண்டில் 1-8 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வண்ணமும், 9,10 மாணவர்களுக்கு தனியாகவும், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வேறு நிறத்திலும் என மூன்று வகை சீருடைகள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். பெற்றோர்கள் மத்தியில் இது குறித்து குழப்பம் நிலவிவந்தது. நாளை பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பழைய சீருடைகளே பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு வேளை அடுத்த 2 செட் சீருடைகள் புதியதாக இருக்கலாம் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

கேரள மாநிலத்தில் மாறிய சீருடை கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close