Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல் நாளில் அசரவைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! இன்ப அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள்

கோடை விடுமுறைக்குப் பின்னர் தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.  பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசு தந்து அசத்தியுள்ளனர் திருச்சி சையது முர்துசா அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.

திருச்சி மரக்கடை பகுதியில் உள்ளது அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளி. திருச்சி மாநகராட்சியில் உள்ள மூன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல கோடை விடுமுறை முடித்து இன்று பள்ளி திறந்ததை அடுத்து, இன்று காலை இறைவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கடந்த வருடம் 12 ஆம் வகுப்பு பயின்று முதல் இடம் பிடித்த மாணவர் முகமது ஆசீப்புக்கு 20 ஆயிரம் ரூபாயும், 2 ஆம் இடம் பிடித்த மாணவர் பிரேம்குமாருக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3 ஆம் இடம் பிடித்த மாணவர் ரஞ்சித் குமாருக்கு 10 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. அதேபோன்று 10 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே 15, 10, 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. பரிசு வாங்கிய மாணவர்கள், ‘தொடர்ந்து நல்லமுறையில் படிப்போம்’ என்கிற நம்பிக்கையில் உற்சாகமாகப் புறப்பட்டனர். அதேபோல் தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள், இதுபோன்று நாமும் பரிசு வாங்க வேண்டும் என்கிற உற்சாகத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலுச்சாமி நம்மிடம், “தனியார் பள்ளிகளில் எல்லாம் இடம் கிடைக்காமல் போனவர்களே, வந்து சேரும் இடமாக அரசுப்பள்ளிகள் தற்போது பார்க்கப்படுகிறது. அப்படிக் கூட்டல் கழித்தல் கணக்குகள் தெரியாமல் எங்கள் பள்ளியில் சேர்ந்த பல மாணவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கும் எங்கள் ஆசிரியர்கள், சிறப்பான முறையில் பயிற்சி அளித்து அவர்களை முன்னேற்றி இருக்கிறார்கள். எங்கள் பள்ளியில் தற்போது 750 மாணவர்கள் படிக்கிறார்கள். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கிறோம். கடந்த நான்கு வருடமாக 10, 12 ஆம் வகுப்புகளில் 100 சதவிகிதம் மற்றும் 99 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளோம். இதற்காக எங்கள் ஆசிரியர்கள் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடக்க வேண்டுமானால் மாணவர்கள் மதிப்பெண் பெறவேண்டும். அதனால் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஏதாவது செய்திட திட்டமிட்டோம். அதன்படி பொதுத்தேர்வு எழுதும் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுதப்போகும் முதல்நாள், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் ஆகியவை உள்ளடக்கிய பவுச் வழங்கினோம்.

அதனைத் தொடர்ந்து முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்தோம். இந்நிலையில் திருச்சியில் இயங்கிவரும் செல்லம்மாள் செல்வி. மாலதி கல்வி அறக்கட்டளை நடத்திவரும் வடிவேல் என்பவர் எங்கள் பள்ளிக்கு அறிமுகமானார். அவர் கடந்த வருடம் எங்கள் பள்ளியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பள்ளி சீருடைகள் வழங்கினார். அதேபோல் இந்தவருடம், பொதுத்தேர்வு எழுதிய 250 மாணவர்களுக்கு, தலா 75 ரூபாய் மதிப்புள்ள பேனா, பென்சில் உள்ளடக்கிய பவுச் வழங்கினார். இந்நிலையில் அவர், தனது மகள், மனைவி நினைவாக அவர்களின் நினைவு நாளில், மீண்டும் எங்கள் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கினார். அவர் வழங்கிய உதவியை அப்படியே வைத்திருந்து, இன்று மாணவர்கள் மத்தியில் வழங்கினோம். பரிசுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்ததைவிட, அதைப்பார்த்த மாணவர்கள் உற்சாகமாக இருப்பதைக் காண முடிகிறது. இதேபோல், எங்கள் பள்ளியில் கடந்த 15 வருடங்களுக்கு முன் ஆசிரியராகப் பணியாற்றிய கணேசன் மற்றும் அவரது நண்பர்கள், பள்ளியின் முன்னேற்றத்தைக் கண்டு, அவர்களும் பரிசுகள் வழங்கி வருகின்றனர். இதுபோன்ற பாராட்டுகள் பல மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் என்கிற நம்பிக்கையில் சின்னச் சின்ன முயற்சிகளை தொடர்ந்து செய்கிறோம்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close